Tuesday 7 February 2017

    ரூபெல்லா பீதியை முறியடித்த மாணவர்கள்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டதின் கீழ்  ஊசி போட்டுக்கொண்ட  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை சப் கலெக்டர் துவக்கி வைத்தார்.


               ஊர்வலத்திற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து ,உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்பள்ளியில் பயிலும்  அனைத்து  மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாணவர்கள் அனைவரும் பங்கேற்ற மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டதின் விழிப்புணர்வு பேரணியை சப் கலெக்டர் ஆல்பி ஜான் வசந்த் துவக்கி வைத்து பேசுகையில் , இந்த திட்டம் மக்கள் அனைவரும் பயன்பட வேண்டும் என்பதற்கு அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த பள்ளியில் நேற்று அனைத்து மாணவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டது.ஒரு நாளைக்கும் மேலாக ஆகியும் அனைத்து மாணவர்களும் நன்றாகத்தான் உள்ளனர்.எனவே பெற்றோர் யாரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்.ஆண் குழந்தைகள்,பெண் குழந்தைகள் என அனைவரும் இந்த ஊசியை அவசியம் போட்டு கொள்ள வேண்டும்.இப்போது போடும் தடுப்பூசி பெண் குழந்தைகளுக்கு கர்ப்ப காலத்தில் நல்ல தடுப்பு மருந்தாக செயல்படும்.இந்த தடுப்பூசி போட்டுகொண்டு நல்ல உடல் நலத்துடன் உள்ள இப்பள்ளி மாணவர்களின் வாயிலாக பெற்றோர்கள்,பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணி செல்ல உள்ளனர்.இந்தத் திட்டத்தின் வாயிலாக அனைவரும் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ளவேண்டும் என்று பேசினார்.மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோஷங்களுடன், பதாகைகள் ஏந்தி தேவகோட்டையில் செப்பவயலார் வீதி,ஜெயகொண்டான் தெரு,நேரு தெரு,நடராஜபுரம் முதல் தெரு,அள.சுப.தெரு,இறகு சேரி இறக்கம்,சிவன்கோவில் குலக்கால் தெரு, வைத்தியலிங்கம் தெரு,இறகு சேரி பாதை தெரு, திருப்பத்தூர் ரோடு வழியாக சென்று தேவகோட்டை  பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகிகள் பூங்காவினை பேரணி  சென்று அடைந்தது.
                        தியாகிகள் பூங்காவில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில்  தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர்  கமலேஸ்வரன் மாணவர்களுடன் இணைந்து தடுப்பூசி தொடர்பாக விரிவாக எடுத்து கூறினார். பள்ளி மாணவிகள் காயத்ரி,பரமேஸ்வரி,நித்ய கல்யாணி , ஜெனிபர் ஆகியோர் ஊசி போட்டு கொண்ட தங்கள் அனுபவத்தை அனைவரிடமும் எடுத்து கூறினார்கள்.ஊசி போட்டு கொண்டு தாங்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,தடுப்பூசி போடுவதால் எந்த பயமும் இல்லை என்றும் வலியுறுத்தி தங்கள் அனுபவத்தை எடுத்து கூறினார்கள்.பேரணியின் நிறைவாக தேவகோட்டை நகர் நல மருத்துவர் பிரியா நன்றி கூறினார்.பேரணியினை ஏராளமான பெற்றோர்,பொது மக்கள் ,பள்ளி மாணவர்கள் பார்த்ததுடன் தடுப்பூசி குறித்து கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.ஏராளமான மருத்துவ செவிலியர்கள் , அரசு மருத்தவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி குறித்து விளக்கினார்கள்.அரசு மருத்துவமனையின் மைக் வைத்த வேன்களும் பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டன.
                மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டம் குறித்து பல்வேறு வட்சப் தகவல்கள் மூலம் பீதியடைந்து இருந்த பொதுமக்களையும்,பெற்றோர்களையும், பிற பள்ளி மாணவர்களையும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  அரசின் தடுப்பு ஊசி திட்டமான தடுப்பூசியை போட்டு நல்ல உடல் நலத்துடன் உள்ளதை தங்கள் விழிப்புணர்வு பேரணியின் வாயிலாக தெளிவு படுத்தினார்கள் என்பது பாராட்டபடவேண்டியது. 

பட விளக்கம் ;  ரூபெல்லா பீதியை முறியடித்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் பேரணி தேவகோட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது.பேரணியில் பள்ளி மாணவி காயத்ரி தடுப்பூசி  விழிப்புணர்வு குறித்து பேசினார்.

No comments:

Post a Comment