மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி
தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோர்களின் பாராட்டை பெற்ற பள்ளி
தேவகோட்டை - தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சிகளுடன் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது : எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள்.
இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள் .எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் எடுத்து உள்ளோம்.
ஒவ்வொரு மாணவரும் தூய்மையான கைகுட்டையின் மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு சாப்பிடுகிறார்கள்.
டவலில் சாப்பிட்டு சிந்தாமல் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர்கள் எங்களிடம் தெரிவித்து சந்தோசம் அடைந்தனர்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைக்கின்றனர் .இதன் மூலம் மாணவர்களிடையே சகோதரத்துவம்வளருகிறது.
ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தங்கள் தட்டில் உள்ள முழுவதையும் சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும்.
இதன் மூலம் மாணவர்களின் வீடுகளிலும் உணவினை வீணாக்காமல் மாணவர்கள் முழுவதுமாக சாப்பிட்டு விடுவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து செல்கின்றனர்.
சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடு சொல்கிறோம்.
மதிய உணவு எப்படி இருந்தது என்பதை மாணவர்களே என்னிடமும்,சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து சொல்கிறன்றனர்.
இது நிச்சயமாக தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில் புதிய அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறைபடுத்தி வருகிறோம். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.
பட விளக்கம் : தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் வாரம் தோறும் சத்துணவினை சாப்பிட்டு பார்த்து பெற்றோர்கள் பாராட்டி செல்கின்றனர்.
மேலும் விரிவாக :
பெற்றோரின் ஒத்துழைப்போடுமதிய உணவில் அசத்தும் பள்ளி மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளிசத்துணவு குழு அமைத்து நல்ல முறையில் மதிய உணவு வழங்கும் பள்ளிதமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி சாதனை செய்துள்ள பள்ளிபள்ளியில் மதிய சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி : அது என்ன புதிய முயற்சி ? தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தான் இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடர்கிறார்.சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்த சீனிவாச சௌந்தரராஜன் இந்திய அரசின் உதவி தலைமைக் கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86),தனது வலை தலத்தில் பள்ளியின் சத்துணவு தொடர்பாக பின் வருமாறு எழுதி உள்ளார் : " தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை இந்த பள்ளியில் தமிழக அரசு வழங்கும் மதிய உணவு சத்துணவு பரிமாறுவதில் நான் கண்டேன்.ஒவ்வொரு மாணவரும் தூய்மையான கைகுட்டையின் மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு அருந்தினார்கள்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1ம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைத்தனர்.ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தங்கள் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்து சென்றனர்.இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.
அரசு பள்ளியில் புதிய அனுபவம் :
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடுகிறார்கள் . சாதம் சுமாராக உள்ளது என்று கருத்து தெரிவித்தால் உடனடியாக சம்பத்தப்பட்ட அமைப்பாளரிடம் தலைமை ஆசிரியர் பேசுகிறார்.மறுநாள் முதல் சரி செய்ய சொல்லி விடுகிறார்.நன்றாக இருக்கிறது என்று கருத்து பதிவிடும்போது சம்பத்தப்பட்ட அமைப்பாளரை அழைத்து பெற்றோர்களையே பாராட்ட சொல்லுகிறார்.நான் சென்றபோது ஒரு தாய் வந்து சாப்பிட்டு விட்டு நன்றாக உள்ளது என்று தெரிவித்தார் .உடன் என் முன்பாகவே சத்துணவு நோட்டில் பதிய செய்ததுடன் அமைப்பாளர்க்கும்,உணவு பரிமாறுபவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தார்.இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.மாணவர்களும் தைரியமாக உணவு எப்படி உள்ளது என்று தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களிடம் சொல்லலாம் என்கிற தகவலும் தெரிந்து கொண்டேன்.சாதம் நன்றாக உள்ள நாட்கள் எல்லாம் மாணவர்களே சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து இன்று உணவு சூப்பர் என்று சொல்கிறன்றனர்.இது எனக்கு அரசு பள்ளியில் புதிய அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.
அனைத்து மாணவர்களையும் சத்துணவு சாப்பிடவும்,பெற்றோர்களை தொடர்ந்து வாரம்தோறும் பள்ளிக்கு வரவழைத்து சாப்பிட சொல்லி ஆலோசனைகளை நோட்டில் பதிய செய்வது தொடர்பாகவும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் சொல்வதை காணலாம் :
முதல் முயற்சி வெற்றி :
எங்கள் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்வதால் மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல்தான் வருகிறார்கள்.இதனால் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் மதிய சத்துணவை விரும்பி சாப்பிடுவார்கள் .எனவே பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் பள்ளியிலேயே சாப்பிடும் வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் எடுத்து உள்ளோம்.
முதலில் அனைத்து மாணவர்களையும் சத்துணவு சாப்பிட செய்வது என்பது மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது.பின்பு படிப்படியாக மாணவர்களிடத்தில் சத்துணவு தொடர்பாக நல்லெண்ணத்தை ஏற்படுத்தி சாப்பிட சொன்னோம்.நானே தினமும் சாப்பிடும் இடத்தில் நின்று சாப்பாடு போடுவதை சரிபார்த்து,மாணவர்களிடம் சாப்பாடு எப்படி உள்ளது என நேரில் கேட்டு அதனை பதிவு செய்து ,அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து ,சாப்பாடு நன்றாக இல்லை என்றாலும் அது தொடர்பாக சொல்ல சொல்லி இருந்தேன்.அதன் தொடர்ச்சியாக அனைத்து மாணவர்களும் சாப்பிட ஆரம்பித்தனர்.சில மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்து சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல சொன்னார்கள்.
பெற்றோரையும் சாப்பிட வைக்கும் முயற்சி :
தங்கள் பிள்ளைகள் சொல்லி சாப்பாடு வேண்டாம் என்று சொல்ல வந்த பெற்றோரையும் சாப்பிட சொன்னோம்.அவர்கள் சாப்பிட்டு விட்டு ,சாப்பாடு நன்றாகத்தானே உள்ளது, இந்த சாப்பாட்டுக்கு என்ன குறைச்சல் என்று சொல்ல அதனை உங்கள் குழந்தையிடமே சொல்லுங்கள் என்று சொல்லி சொல்ல சொன்னோம்.அதன் தொடர்ச்சியாக வாரம் தோறும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு பெற்றோர்களை வரச்செய்து உணவை சாப்பிட செய்து ,அவர்கள் கருத்துக்களை நோட்டில் எழுத சொன்னோம்.உணவு உப்பு கூடுதலாக உள்ளது என்றோ,அல்லது லேசாக காரமாக இருக்குது என்று சொன்னால் அதனை சரி செய்ய சொல்லி விடுவோம்.( நம் வீட்டில் கூட என்றாவது ஒரு சில நாள் உப்பு,காரம் கூடுவது இயல்புதானே என்று பெற்றோரிடம் பக்குவமாக எடுத்து சொல்வோம்.அதோடு நிற்காமல் அதனை அடுத்த நாள் முதல் சரி செய்து விடுவோம்) .சத்துணவு ஊழியர்களும் அதனை உடன் சரி செய்து விடுவார்கள்
பாராட்டும் உண்டு :
பெற்றோர்கள் உணவு நன்றாக உள்ளது என்று சொல்லும்போது அதனை சத்துணவு ஊழியர்களிடம் நேரடியாக சொல்ல சொல்வோம்.. மாணவர்களும் தினமும் சாப்பிட்ட உடன் ,உணவு நன்றாக உள்ளது என்று பரிமாறும் ஊழியர்களிடமே சொல்லி விடுவார்கள்.அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்பாடு அதுவாகும்.
சாப்பிடும்போது டவல் பயன்படுத்தும் முறை :
சாப்பிடும் இடத்தை சுத்தமாக கூட்டி ,அனைத்து மாணவர்களையும் டவல் கொண்டு வரச்செய்து அதனை விரித்து அதன் மீது தட்டை வைத்து சாப்பிட சொல்கிறோம்.உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும்.சாப்பிட்ட முடித்த பின்பு சத்துணவு ஊழியர்கள் அதனை நல்ல முறையில் சுத்தம் செய்து விடுவார்கள்.முதலில் சத்துணவு சாப்பிடுவதற்கு முன்பு மாணவர்களை டவல் கொண்டு வர வைப்பது சிரமமாக இருந்தது .ஆனால் டவல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை மாணவர்களிடம் எடுத்து சொன்னோம்.தொடர்ந்து மாணவர்களை உற்சாகப்படுத்தி அனைத்து மாணவர்களையும் அனைத்து நாட்களும் டவல் கொண்டு வர பழக்கி விட்டோம்.இதனால் வீடுகளில் சாப்பிடும்போதும் மாணவர்கள் சுத்தமாக சாப்பிடுவதுடன் சாப்பிடும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்வதாக பெற்றோர் சொல்லி சந்தோசம் அடைந்தனர்.
சத்துணவு குழு என்று அமைத்து மாதம் ஒரு ஆசிரியை என பணிபகிர்தல் :
சத்துணவு குழு என்று அமைத்து மாதம் ஒரு ஆசிரியை என்று பணி பிரித்து கொடுத்து ,தினசரி சமையலுக்கு எடுக்கும் பொருள்களை சரிபார்ப்பது ,காய் வாங்கி வரும்போது அதனையும் பார்வையிட்டு ( வாங்கி வரும் காய்களில் எப்போதாவது பூச்சி இருந்தால் அதனை தவிர்க்க சொல்லியும் ),அரிசியையும் நன்றாக வெந்நீரில் களைந்து ,அதனை உலை வைத்து சாதமாக்குகிறார்கள்.நானும்,மாதத்திற்கு ஒரு ஆசிரியை என்று எங்கள் பள்ளி ஆசிரியையும் பிரித்து கொண்டும் உணவை சமைத்த உடன் சாப்பிட்டு விட்டு அதன் பிறகுதான் பெற்றோர்க்கும்,மாணவர்களுக்கும் உணவை பரிமாறுவோம்.ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் இதனை தொடர்ந்து செய்து வருகிறோம்.
சாப்பிடும்போது சகோதரத்துவத்தை ஏற்படுத்துதல் :
முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு பயிலும் சில மாணவர்களின் பெற்றோர்கள் என்னிடம் வந்து மாணவர்கள் சில நாட்கள் சாப்பிடாமல் வருவதாக சொன்னார்கள்.அதன் பிறகுதான் ,எட்டாம் வகுப்பு ,ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கொண்டு முதல்,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அன்புடன் ஊட்டி விட சொல்கிறோம்.இதன் மூலம் இந்த மாணவர்களிடையே சகோதரத்துவம் வளரும் என்பது உண்மை.சில நாட்களில் இளம் மாணவர்கள் பெரிய வகுப்பு மாணவர்களை பார்த்து அவர்களாகவே சாப்பிட ஆரம்பித்து விடுகின்றனர்.
உணவை வீணாக்காமல் முழு உணவையும் சாப்பிட வைத்தல் :
சாப்பிடும் அனைத்து மாணவர்களும் சாப்பிட்டு முடித்த பின்பு கண்டிப்பாக அனைத்தையும் சாப்பிட்டு விட்டோம் என்று தட்டை சத்துணவு ஊழியரிடமும் ,அன்றைக்கு பொறுப்பில் உள்ள ஆசிரியர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும்.
ஆலோசனைகளை சத்துணவு குழுவில் இருந்து பெறுதல் :
தொடர்ந்து சத்துணவு நல்ல முறையில் நடைபெறுவதற்கு ஏதுவாக பள்ளி ஆசிரியைகள் ,சத்துணவு அமைப்பாளர்,சமையலர்,உதவியாளர்,பள்ளி மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ முதல்வர் ,துணை முதல்வர்,மற்ற அமைச்சர்கள் ,பெற்றோர் என அனைவரிடமும் கருத்துக்கள் கேட்டு ,மாற்றங்கள் இருந்தாலும் அதனை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.அவர்களது ஆலோசனைகள் பல நேரங்களில் நல்ல உதவியாக அமைந்துள்ளது. முதலில் பெற்றோரை வரவழைப்பது சிரமமாக இருந்தாலும் தற்போது இரண்டு வருடங்களாக அனைத்து பெற்றோரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து பள்ளிக்கு வந்து சாப்பிட்டு விட்டு ஆலோசனைகளை சொல்லி செல்கின்றனர். இந்த பணி நல்ல முறையில் நடப்பதற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
2017ல் கோடை விடுமுறையில் சத்துணவு:
தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 2017ல் கோடைகாலத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .சத்துணவுத்திட்டதின் கீழ் இயங்கும் அனைத்து சத்துணவு மையங்களில் உணவு உண்ணும் மாணவ,மாணவியர்களுக்கு பள்ளி விடுமுறை நாளன்றும் உடனடியாக உணவு வழங்க உத்திரவிடபட்டது . 2017ம் ஆண்டில் கோடை விடுமுறை விட்ட நாளன்று எங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் கூட்டம் நடைபெற்றபோது ,அதில் அப்போது 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவியா, நான் இங்கு நல்ல உணவு சாப்பிட்டேன்.ஆனால் விடுமுறை 40 நாளும் நான் எப்படி சாப்பிட போகிறேன் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.கோடை விடுமுறையில் வறட்சி காலத்தில் சத்துணவு வழங்கும் திட்டம் உண்மையில் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.அப்போது காவியா போன்ற மாணவிகளுக்கு இந்த திட்டம் நல்ல உதவியாக இருந்தது.இந்த திட்டம் தொடர்பாக தகவல் கிடைத்த உடன் ஆசீரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தகவல் சொல்லி மாணவர்களை சத்துணவு சாப்பிட முயற்சி எடுத்தோம் .அப்போது சத்துணவு ஊழியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி பல மாணவர்கள் விடுமுறை நேரத்திலும் சத்துணவு சாப்பிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா நாட்டு ஆங்கில பயிற்றுனர்,காகித கலைஞர்,பத்திரிகையாளர் ஆகியோர் உணவை சாப்பிட்ட பிறகு என்ன சொல்கிறார்கள் ?
சத்துணவை பள்ளிக்கு வரும் விருந்தினர்களும் சாப்பிட்டு விட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மலேசியா நாட்டை சேர்ந்த ஆங்கில பயிற்றுனர் நல்ல பெருமாள் ராமநாதன் சத்துணவை மதியம் பள்ளியில் சாப்பிட்டு விட்டு நோட்டில் எழுதி உள்ளதாவது :
இன்று புளியோதரை ருசித்து சாப்பிட்டேன்.சுவையாக இருந்தது.சுத்தமாகவும் இருந்தது.என்று எழுதி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் நுங்கம்பாடியை சேர்ந்த காகித கலைஞர் தியாக சேகர் மதிய உணவை சாப்பிட்டு விட்டு .
எளிய ருசியான கீரை சாதம் .அருமையாக இருந்தது.மனதிற்கு மகிழ்ச்சி.என்று பதிவு செய்து உள்ளார்.
வார இதழின் எழுத்தாளர் யுவராஜன் மதிய உணவை சாப்பிட்டு விட்டு,
இன்று தங்கள் பள்ளியில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.மிகவும் சுவையாக இருந்தது.அந்த சுவையில் மாணவர்கள் மீதான பள்ளியின் அக்கறையும்,ஆரோக்கியமும் தெரிந்தது.வாழ்த்துக்கள் என்று பதிவு செய்து உள்ளார்.
வாரம் தோறும் பெற்றோரும் சாப்பிட்டு விட்டு தங்களின் கருத்துக்களை தொடர்ந்து எழுதி செல்கின்றனர்.
அரசு வழங்கும் மதிய உணவை தலைமை ஆசிரியரும்,ஆசிரியர்களும் ,சத்துணவு ஊழியர்களும்,பெற்றோர்களும் நல்ல முறையில் மாணவர்களுக்கு வழங்கி வருவதும்,அனைத்து மாணவர்களும் பள்ளியிலேயே மதிய உணவு உண்பது என்பதும்,பெற்றோர்கள் தொடர்ச்சியாக வாரா,வாரம் வந்து சாப்பிட்டு ஆலோசனைகள் வழங்குவதும் பாராட்டத்தக்க நிகழ்வு ஆகும்.
No comments:
Post a Comment