Wednesday, 27 May 2020

ஆளுமைகளுடனான அனுபவங்கள்

                        அமெரிக்கா நாட்டின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியரும், சிங்கப்பூர் நான்யாங்  பல்கலைக்கழகதின் இணை இயக்குனருமான பரசுராமன் பத்மநாபன் அவர்களுடனான பள்ளி பகிர்வுகள்



பரசுராமன். பத்மநாபன்,
இணை இயக்குனர் ,
நான்யாங்  பல்கலைக்கழகம்,
 சிங்கப்பூர்.
                                    நான் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே கலந்துரையாடினேன். மாணவர்களின் அறிவுத் திறன் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன். ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு படுகிறார்கள். மொத்தத்தில் மிகவும் திறமையான, நிர்வாக திறமையுடன் மாணவர்களின் வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.
 அன்புடன்
பரசுராமன். பத்மநாபன்.





                                             
அமெரிக்கா நாட்டின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியரும், சிங்கப்பூர் நான்யாங்  பல்கலைக்கழகதின் இணை இயக்குனருமான பரசுராமன் பத்மநாபன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளியினை பாராட்டி எழுதிய வரிகள்தான் மேலே உள்ளவை.

நாளிதழின் மூலம் அறிமுகம் :

                           சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வரும் பரசுராமன் பத்மநாபன் அவர்களை சமீபத்தில் நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் காரைக்குடியில் சந்தித்தேன். நாளிதழில் நுண்ணுயிரிகள் தொடர்பான அவரது பேட்டி படித்தேன். அதன் தொடர்ச்சியாக அன்னார் அவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கிற்கு வந்ததாக தெரிந்துகொண்டேன். பிறகு முயற்சி எடுத்து அழகப்பா பல்கலைக்கழக நண்பர்களை தொடர்பு கொண்டு அன்னார்  அவர்களை  தொடர்பு கொண்டு பேசினேன். 

பேசிய உடன் ஐந்து நிமிடத்தில் நடந்த சந்திப்பு :


                  முதலில் தொடர்பு கொண்ட உடனேயே நல்ல முறையில் என்னிடம் பேசினார்கள் . மாலை ஆறு மணிக்கு பேசினேன். ஐந்து நிமிடங்களில் நீங்கள் வந்து விட்டால் என்னை சந்திக்கலாம் என்று கூறினார்கள். சரியாக ஐந்து  நிமிடத்திற்குள் காரைக்குடியில் அன்னார் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சென்று சந்தித்தேன். நல்ல முறையில் பேசி நாளை பள்ளிக்கு வருகிறேன் என்று தெரிவித்தார்கள். நீங்கள் உங்களது இரு சக்கர வாகனத்தில் வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்கள். நானும் சரி என்று கூறிவிட்டு சென்று விட்டேன். பிறகு இரவு 9 மணி அளவில் மீண்டும் ஒரு முறை போன் செய்து சகஜமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது , என்னுடைய பாஸ் பல்லாஸ்  அவர்களையும் அழைத்து வருகிறேன் என்று தெரிவித்தார்கள். மறுநாள் மதியம் ஒரு கார் எடுத்துக்கொண்டு அன்னார்  அவர்களையும் , அன்னாரது பாஸ் பல்லாஸ்  அவர்களையும் அழைத்துக் கொண்டு எங்கள் பள்ளிக்கு சென்றோம். 

அரசு பள்ளியில் படிதத்தால் தான்  வெற்றி பெற்றேன் - ஆராய்ச்சியாளர் உருக்கம் :


                     அப்பொழுது அன்னார்  அவர்கள் தான் அரசு பள்ளியில் படித்ததாகவும், ஐந்து கிலோமீட்டர் நடந்தே சென்று படித்ததாகவும் தனது எண்ணங்களை பதிவு செய்தார்.  வாழ்க்கையில் தீவிரமான முயற்சி எடுங்கள் .நிச்சயமாக மிகப்பெரிய வெற்றிகளை அடையலாம் என்று தெரிவித்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி விட்டு தற்போது சிங்கப்பூர் நான்யாங்  பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். வாழ்க்கையில் மிகுந்த கஷ்டப்பட்டு தான் படித்ததாகவும், படிக்கும்போதே நல்ல முறையில் படித்ததாகவும், அரசுப்பள்ளியில் மரத்தடியில் படித்து இந்த அளவுக்கு ,இன்று உலகம் போற்றும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி  கொண்டிருப்பதாகவும் பெருமையுடன் கூறினார். பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றிய போதும், பேராசிரியராக பணியாற்றும்போதுதான்  தனக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாக  தெரிவித்தார் . வாழ்க்கையில் தொடர் முயற்சி இருந்தால் கண்டிப்பாக வெற்றி அடையலாம் என்பதையும் பதிவு செய்தார். தான் ஆசிரியர்களிடம் அரசுப்பள்ளியில் பிரம்படி வாங்கியதாகவும், அந்த பிரம்படி காரணமாகத்தான் இன்று செம்மையாக இருப்பதாகவும், மாணவர்களிடம் கூறினார். 

இஷ்டப்பட்டு கஷ்டப்படுங்கள் : வாழ்க்கையில் வெற்றி பெறலாம் :


               தான் அரசுப்பள்ளியில் படித்தனால் இந்த அளவுக்கு வெற்றி அடைந்து உள்ளேன் என்பதை மாணவர்கள் முன்பு கூறும்பொழுது மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கம் ஏற்பட்டது என்பதே உண்மை. இது போன்ற ஆளுமைகள் தான் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். மாணவர்களும் அவர்களைப் பார்த்து தானும் இதுபோன்று வரவேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்து கொள்கிறார்கள். இளம் வயதில் கல்லூரி படிப்பு படிக்க இயலாமல் ( வறுமையின் காரணமாக ) தான் கஷ்டப்பட்டு டியூஷன் எடுத்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து கல்லூரியில் பணம் கட்டி படித்ததாகவும்,கல்வி தான் சொத்து என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

               மேலும் அன்னார் அவர்கள் மாணவர்களிடம் பேசுகையில்,

 மிதிவண்டியில் சென்று மேல்படிப்பு படித்து உலகத்தின் உயர்ந்த பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றினேன் 
டியூஷன் எடுத்த வருமானத்தை எனது படிப்புக்கு பயன்படுத்தினேன் 

ஆசிரியர்கள் அடிப்பது நாம் செம்மையாக வரவேண்டும் என்பதற்காகவே !
           என் முன்னால்  அமர்ந்து இருக்கும் உங்களை நான் கடவுளாக தான் பார்க்கிறேன். இதில் எத்தனையோ வருங்கால மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், என பல்வேறு துறைகளுக்கு செல்லக் கூடியவர்கள் மறைந்திருக்கிறார்கள் . அரசியல்வாதிகள் கூட இருக்கலாம்.  இப்போது உங்களையெல்லாம் ஆசிரியர்கள் அடிப்பதில்லை. நாங்கள் படிக்கும்போது பிரம்பால் அடிப்பார்கள். எதற்கு ? நாம் செம்மையாக வளரவேண்டும் என்பதற்காகத்தான். 

மரத்தடி பள்ளியில் படித்து உலக பல்கலைக்கழக்தில் பணியாற்றினேன்
                                       நான் சிதம்பரம் அருகே குக்கிராமத்தில் மரத்தடி பள்ளியில்தான் படித்தேன்.நீங்க எல்லாம் தற்பொழுது எனக்கு எதிரில் நாற்காலியில்  அமர்ந்து இருக்கிறீர்கள் .எங்கள் பள்ளியில் எந்த வசதியும் அப்பொழுது கிடையாது .அரசுப் பள்ளியில்தான் படித்தேன். மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை அளிப்பார்கள் .ஒருபக்கம் சந்தோசமாக இருக்கும். மறுபக்கம் கணக்குப் பாடம், வீட்டுப்பாடம் ,அடுத்த நாளைக்கும் சேர்த்து கொடுத்துவிடுவார்கள். அதுவும் நம்மை செம்மை செய்வதற்காக என்பது எனக்கு பின்பு தான் புரிந்தது . 

பழைய உணவை சாப்பிட்டு சிரமமான சூழ்நிலையில் படித்தல் :

                  எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர். நான் இரண்டாவது மகனாக பிறந்தேன். 10 வயதில் என் தந்தை இறந்துவிட்டார் .எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது .குடும்ப சுமை என்னை நோக்கி வந்ததால் நான் படிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. எனது அண்ணனுக்காக நான் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பதினொன்றாம்  வகுப்பிற்கு சிதம்பரம் நோக்கி 5 கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று தான் படிக்க வேண்டும். சிரமப்பட்டுதான் நான் சென்று படித்தேன் . எங்கள் வீட்டில் மூன்று ஏக்கர் நிலம் இருந்தது. ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் .விவசாயம் செய்ய வேண்டும் .அப்பொழுது எங்கள் பள்ளியில் மதிய உணவு  எல்லாம் கிடையாது . ஒரு வேளைதான் உணவு  அம்மா சமைப்பார்கள் .அந்த அளவுக்கு வீட்டில் வறுமை. இரவு மீதமுள்ளதை தண்ணீர் ஊற்றி வைக்கும் போது பழைய கஞ்சி தான் காலை உணவு . அதை சாப்பிட்டதால் தான் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன்.வீட்டில்  விவசாயம் பார்க்க வேண்டும். படிக்கவும்  வேண்டும் என நினைத்து விவசாய நிலத்தில் விளையும் காய்களை காலையில் மார்க்கெட்டில் கொடுத்து விற்று விடுவேன். மாலை வேளையில் நான்கு வீடுகளுக்கு சென்று டியூஷன் எடுத்தேன் . டியூசனுக்கு ஒரு வீட்டிற்கு 50 ரூபாய் கிடைக்கும் . நான்கு வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கிடைக்கும் . அதை வைத்துதான் மேற்படிப்பு படித்தேன்.என் அம்மாவின் உழைப்பு தான் எனக்கு முயற்சி செய்யத் தூண்டுதலாக இருந்தது .பி.எஸ்.சி. விலங்கியல்  படித்து விட்டு பிறகு  மீண்டும் மேலும் மேலும் உள்ள படிப்புகள் எல்லாம் படித்தேன் .

கல்விதான் சொத்து
                              உலகத்திலேயே தாயை போன்ற சிறந்த உறவு வேறு எதுவுமே இருக்க முடியாது . வாழ்க்கையில் எப்பொழுதுமே பணிவு வேண்டும் .நீங்கள் இங்கு படித்த ஆத்திச்சூடி போன்ற அறநூல்கள்  பொன்மொழிகள் . வேறு  எந்த மொழியிலும் இல்லாத தனித்துவம் தமிழ் மொழிக்கே உள்ளது . தமிழைப் போல் எளிதானது எதுவுமில்லை . ஒருவர் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். எளிமையாக இருக்கவேண்டும். மற்றவருக்கு கெடுதல் செய்யக்கூடாது. அன்பாக நடந்து தப்பு செய்பவர்களை திருத்தவேண்டும். அடிக்கக்கூடாது . இப்பொழுது இந்த இளம் வயதில் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.  கல்வி ஒன்றுதான் அறிவைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்கும்.   நானே இதற்கு வாழும் உதாரணம் . படித்தால் நல்ல உயரத்திற்கு செல்லலாம்.  நல்ல எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது.  நான் முதலில் நன்றாக படித்து மத்திய அரசு நிறுவனத்தில் ஆறு  வருடத்திற்கு மேலாக பணியாற்றினேன். பின்பு அமெரிக்காவில் உள்ள உலகத்திலேயே இரண்டாவது பல்கலைக்கழகமான ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சென்று சில வருடங்கள் பணியாற்றினேன் . இப்பொபொழுது சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வருகின்றேன். அங்கு  இணை இயக்குனராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றேன். என்னுடைய இயக்குனர் தான் இங்கு உங்கள்  அமர்ந்திருக்கக் கூடிய பலாஸ்  ஆவார்கள். அவர் மிகப்பெரிய மனிதர். நோபல் பரிசு குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார்.அவர் உங்களை சந்தித்தது உங்களுக்கு கிடைத்த வரம். எனவே உங்களது வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது . 

முயற்சி செய்தால் வெற்றி உறுதி - நானே உதாரணம்
     நீங்கள் முயற்சி எடுத்தால் மிகப்பெரிய வெற்றியாளராக வரமுடியும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் நானும் ,என்னுடன் அமர்ந்திருக்கும் பலாஸ்  அவர்களும்ஆவோம். நாங்களே உங்களுக்கு வாழும் உதாரணங்கள் . தற்போது மாதத்திற்கு இரண்டு முதல் நான்கு முறை விமானத்தில்  சென்று வந்து கொண்டு இருக்கின்றேன். உலகத்தில் நான் பார்க்காத இடங்களை இல்லை. அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். அனைத்து மொழிகளையும் படித்துவிட்டேன் . இவ்வளவும் இருந்தும் எனது  பணிவு தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது .கல்வி ஒன்றுதான் உங்களை  வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாளராக மாற்றும்.  சிலபேர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து அதனில் வேலை கிடைப்பது சிரமம் என்பார்கள். ஆனால் நான் முயற்சி செய்து எனக்கான வேலையை நானே தேடிக் கொண்டேன். அதனால்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக அடைய முடிந்தது. என்னுடைய இலக்கு நோபல் பரிசு பெறுவது தான். நோபல் பரிசுக்கான ஆராய்ச்சிகளை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன். இவ்வாறு பேசினார் .



மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பேச்சு :

                           மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகம் அளிப்பதாக அன்னாரின்  பேச்சு இருந்தது. என்னிடமும் நல்ல முறையில் பழகிக் கொண்டார். பல்வேறு வகையான தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.  தான் சிதம்பரத்தின்  அருகில் கிராமத்தில் பிறந்ததாகவும், சிதம்பரத்தில் படித்ததாகவும், அரசுப் பள்ளிகளில் படித்து தான் இந்த அளவுக்கு வந்து உள்ளேன் என்பதையும் என்னிடம் வலியுறுத்திக் கூறினார்கள் . அன்னாருடனான  தொடர்பு மறக்க முடியாதது. மகிழ்வானது . 

நன்றிகள் பல :

           அன்னார்  எங்கள் பள்ளிக்கு வந்ததற்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை  தெரிவித்துக் கொள்கின்றேன்.

 நன்றி கலந்த அன்புடன்,
 லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம். 8056240653 

 அமெரிக்கா நாட்டின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியரும், சிங்கப்பூர் நான்யாங்  பல்கலைக்கழகதின் இணை இயக்குனருமான பரசுராமன் பத்மநாபன் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை பள்ளி வலைதளத்தில் காணலாம் :
 https://kalviyeselvam.blogspot.com/2019/12/blog-post_17.html#more

 அமெரிக்கா நாட்டின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் மேனாள் பேராசிரியரும், சிங்கப்பூர் நான்யாங்  பல்கலைக்கழகதின் இணை இயக்குனருமான பரசுராமன் பத்மநாபன் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வை வீடியோவாக  காணலாம் :

 https://www.youtube.com/watch?v=l8PLADHtWW8

 https://www.youtube.com/watch?v=WSyZPcBSTsk
 
 https://www.youtube.com/watch?v=RGCCbhrWOK0












No comments:

Post a Comment