தேவகோட்டையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா – சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஊக்கம்
தேவகோட்டை :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட வனத் திட்ட அலுவலர் சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
அவர் பேசுகையில், செடிகளை பாதுகாப்பாக வளர்ப்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், கோடை விடுமுறையின்போது ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, செடி வளர்ப்பை ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார். செடிகளை நன்றாக வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை மாணவர்கள் சிறப்பாக வளர்த்ததையடுத்து, இந்த ஆண்டும் அதே பள்ளி மாணவர்களுக்கு கன்றுகள் வழங்குவதில் மகிழ்ச்சி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அவற்றை வீடுகளில் பாதுகாப்பாக வளர்க்கும் முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆசிரியர்கள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாணவர்களின் வீடுகளுக்கு சென்று செடிகளின் வளர்ச்சியை கண்காணித்து, சிறப்பாக வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மரக்கன்றுகளை நன்றாக வளர்த்த மாணவர்களுக்கு சமீபத்தில் பரிசுகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் வள்ளிமயில் மேற்கொண்டனர். இறுதியாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி தெரிவித்தார்.
பட விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சிவகங்கை மாவட்ட வனத் திட்ட அலுவலர் சாந்தி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் காட்சி. அருகில் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் உள்ளார்.
வீடியோ :https://www.youtube.com/watch?v=E_X29O4rjVY
No comments:
Post a Comment