“மரம் வளர்ப்போம் – மழை பெறுவோம்: செடி வளர்த்த மாணவர்களுக்கு பாராட்டு விழா”
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், சிறப்பாக செடி வளர்த்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட வனத் திட்ட அலுவலர் சாந்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் பேசுகையில், “மரங்களை வளர்த்தால் மழை கிடைக்கும்; மழை இல்லையெனில் விவசாயம் பாதிக்கப்படும். விவசாயம் பாதித்தால் பொருளாதாரம் குறையும்; அதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். எனவே மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்தினார்.
மேலும், மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகின்றன. நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றை மரங்களே வழங்குகின்றன. மரங்கள் இல்லையெனில் காற்று மாசுபட்டு, மனிதர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளம் வயதில் உள்ள மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மரம் வளர்த்தால், சில ஆண்டுகளில் பல மரங்களை வளர்க்க முடியும். குறிப்பாக அரசமரம் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான காற்று கிடைக்கும் என்பதால், பழங்காலத்தில் அரசமரத்தை வழிபட்டனர் என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்திலும் மாணவர்கள் மரம் வளர்ப்பை தொடர்ந்து மேற்கொண்டால், அடுத்த ஆண்டும் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட வன திட்ட அலுவலர் பேசினார்.
கடந்த ஒரு ஆண்டாக தங்களது வீடுகளில் தொடர்ந்து செடிகளை வளர்த்த மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றியுரை வழங்கினார். .
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக வீடுகளில் செடி வளர்த்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட வன அலுவலர் சாந்தி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment