Saturday, 1 December 2018

கஜா புயலும் நேரடி கள அனுபவமும் :

பத்திரிக்கை நிருபர்கள் வழிகாட்டுதலில் உதவி வழங்கல்  :







 கஜா  புயலும் நேரில் பார்த்த பாதிப்பு தகவல்களும்

முதல் உதவி
                            கஜா புயல் பாதிப்பு தெரிந்தவுடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உண்டியல் சேமிப்பு மூலம் 11 அரசி மூடைகளை அனுப்பி கந்தர்வகோட்டை  பகுதிக்கு  உதவிகள் செய்தோம்.

இரண்டாம் முறையாக களப்பயணம் :
                                      காரைக்குடி சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாதவன் ஆகியோர் முயற்சியால் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்களை சேகரித்து புயல் பாதிப்பு அடைந்த பகுதிகளில் வழங்க உள்ளதாக அறிந்தேன்.காலையில் நடப்பதற்காக சென்றபோது ,குழுவினர் அறந்தாங்கி அருகே உள்ள கீரமங்கலம் பகுதிக்கு செல்வதாக அறிந்தேன்.உடன் என்னையும் உடன் அழைத்து செல்லுமாறு அவர்களிடம் கேட்டேன்.9 மணிக்குள் எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள்.பிறகு 9.15 மணிக்கு குழுவினருடன் இரண்டு வாகனங்களில் சென்றோம்.ஒரு வாகனத்தில் பொருள்கள் ஏற்றபட்டது.இன்னொரு வாகனத்தில்நாங்கள்  சென்றோம்.

கல்லூரில் காலை உணவு :
                                        கீழாநெல்லிக்கோட்டை அரசு பள்ளியில் பணியாற்றும் திரு.சந்திரசேகர் சார் அவர்களிடம் உணவு எங்கு சாப்பிடலாம் என்று விசாரித்து ,கல்லூரில் சரவணா ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டோம்.டிபன் நன்றாக இருந்ததது.இளம்தோசை மிகவும் சூப்பர்.பிறகு அங்கிருந்து கிளம்பி நேராக அறந்தாங்கி சென்று கீரமங்கலம் வழியாக ஆவணம் கைகாட்டி அடைந்தோம்.

சரியான வழிசொன்ன மருத்துவர் :
                                                  காரைக்குடியில் இருந்து கிளம்பும்போது காசிம் புதுப்பேட்டை செல்லவேண்டும் என்று வழி கேட்பதற்காக அறந்தாங்கியில் பணியாற்றும் தோல் மருத்துவர் திரு.தெட்சிணாமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டோம்.அன்னாரும் சரியான வழி சொல்லி எங்களுக்கு உதவி செய்தார்.பிறகு நாங்கள் செல்லும் வழியில் அன்னாரது வேலைகளுக்கு இடையில் போன் செய்து வழி எதுவும் சொல்ல வேண்டுமா என்று கேட்டு கொண்டார்.பிறகு நாங்கள் காசிம்புதுப்பேட்டை சென்று அடைந்தோம்.

வழிநடத்திய பத்திரிக்கை நிருபர்கள் :
                                                     நாங்கள் முதலில் காசிம்புதுப்பேட்டை செல்வதாக இருந்தோம்.ஆனால் எங்கு பொருள்களை வழங்க வேண்டும் என்று எங்களை வழிநடத்திய விகடன் நிருபர்கள் சிவகங்கை பலமுருகன் மற்றும் திருச்சி ஆனந்தகுமார் ஆகியோர் முந்தின நாள் இரவு 12 மணி வரை நிவாரண பொருள்கள் வழங்கிவிட்டு இரண்டு மணி அளவில் புதுக்கோட்டை சென்றதால் அவர்கள் எங்களை நேராக ஆவணம் கைகாட்டி வரசொல்லிவிட்டார்கள்.அவர்களுக்காக அரை மணி நேரம் காத்திருந்தோம்.

ஆவணம் கைகாட்டியின் மோசமான நிலைமை :
                                                    ஆவணம் கைகாட்டியில் பேருந்து நிறுத்தத்தின் அருகே மிகப்பெரிய வணிக வளாகம் கண்டோம்.அதற்கு மிகப்பெரிய ஜெனெரேட்டர் வைத்து மின்சாரம் கொடுத்து கொண்டு இருந்தனர்.மற்ற பகுதிகள் எங்குமே மின்சாரம் இல்லையாம்.இதனால் மக்கள் பல்வேறு விதங்களில் சிரமபடுவதாக சொன்னார்கள்.

மிக அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள மரம் அறுக்கும் இயந்திரம் :
                                              ஆவணம் கைகாட்டியில் அதிக அளவில் மரம் அறுக்கும் இயந்திரங்கள் விற்று கொண்டு இருந்தார்கள்.அவற்றை சரி செய்யவும் செய்தார்கள்.அந்த கடை மட்டும்தான் மிகவும் பிஸியாக இருந்தது.மிகவும் பிஸியாக இருந்த மற்றுமொரு கடை ஜெராக்ஸ் கடை ஆகும்.அதுவும் மிக அதிக அளவில் நிவாரணம் வேண்டுவோர் ஜெராக்ஸ் எடுக்க நீண்ட வரிசையில் நின்றுகொண்டு இருந்தனர்.

செல்லும் வழி எங்கும் சாய்ந்து கிடந்த மரங்கள் :
                                                      நாங்கள் செல்லும் வழியெங்கும் அதிகமான தென்னை மரங்கள் விழுந்து கிடந்தன .பார்க்கவே பரிதாபமாக இருந்தது.கண்ணில் தண்ணீர் வரவழைத்தது.மரங்களை ஒட்டி இருந்த மின்கம்பங்கள் அனைத்தும் தலைகுப்புற விழுந்து கிடந்தது.

கீரமங்கலத்தில் பாதிப்பு :
                                     நான் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜேசீஸ் இயக்கத்தில் இருக்கும்போது கீரமங்கலம் அரசு பள்ளியில் நிகில் அறக்கட்டளையின் மூலம் பயிற்சி கொடுக்க சென்று இருந்தேன்.அப்போது பார்த்த பசுமையான ஊருக்கும் ,இன்று பார்த்த ஊருக்கும் முற்றிலும் வித்தியாசம்.மிகவும் பாதிப்பு அதிகம்.பல இடங்களில் வீடுகள்,மரங்கள்,மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டு இருந்தது.

கரம்பக்காடு செல்லுதல் ;
                                                  நிருபர்கள் வழிகாட்டுதலுடன் காசிம் புதுப்பேட்டை அருகே உள்ள கம்மாய் பகுதிக்குள் இருந்த மிகவும் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு எங்கள் வாகனம் சென்றது.நாங்கள் செல்லும்போது பெரும்பாலான ஆண்கள் மரம் வெட்டும் வேலைக்கு சென்று விட்டனர்.வீட்டின் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்து ,அவர்களது ரேஷன் கார்டு அடிப்படையில் தோழர்கள் சாதிக்,பாலமுருகன் ,ஆனந்த குமார் ,மாதவன் ,ஆதி ஜெகநாதன்,சர்புதீன்,சிற்றரசு,ஜேம்ஸ் ஆகியோரது உதவியுடன் நிவாரண பொருள்களை வழங்கினோம்.

கண் தெரியாதவர்களுக்கும் உதவி :
                                         நிருபர் ஆனந்த குமார் கண் தெரியாத நரிக்குறவர்கள் சிலரை அழைத்து வந்து நிவாரண பொருள்களை வழங்கினார்.உண்மையில் அவர்களுக்கு நிவாரண பொருள்களை கொடுக்கும்போது அவர்கள் கூறிய நன்றி வார்த்தைகளும்,முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கும் என்னவென்று சொல்வது.உண்மையான உதவி.

இளம் கரம்பக்காட்டில் உதவிய மல்லிகா :
                                                    கரம்பக்காட்டில் மன நிறைவோடு உதவி செய்து விட்டு,மீதமுள்ள பொருள்களுடன் இளம் கரம்பக்காடு நோக்கி சென்றோம்.அங்கு மல்லிகா என்பவர் (சுய உதவி குழு உறுப்பினர் )எங்களுக்கு உதவி செய்து சரியான முறையில் பொருள்களை கொடுக்க உதவியாக இருந்தார்.முதல் நாள் இரவு 11.30 மணி அளவில் நிருபர்கள் இருவரும் வந்து தார்பாய்,போர்வை வழங்கியதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் .

மன நலம் பாதித்தவருக்கு உதவி :
                                       இளம் கரம்பக்காட்டில் புயலால் பாதிப்புக்குள்ளான வீடுகளில் இருந்த மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அவரது இருப்பிடம் தேடி நிருபர் ஆனந்த குமாரும்,நானும் சென்று பொருள்கொடுத்து வந்தோம்.அவருக்கு கிடைத்த உதவிக்கு அந்த பகுதி மக்கள் மிகுந்த நன்றி சொன்னார்கள் 

சரியான முறையில் உதவிய நிருபர்கள் ;
                                                     விகடன்  நிருபர்கள் பாலமுருகன் மற்றும் ஆனந்த குமாரும் கடந்த பத்து நாள்களாக இந்த பகுதியில் இருப்பதாகவும்,எனவே பாதிக்கப்பட்ட நபர்களை,வீடுகளை நன்கு அறிந்து இருந்ததால் ,ஆதி ஜெகநாதன் தொடர்பு கொண்ட உடன் அங்கு அழைத்து உதவச்சொன்னதாகவும் கூறினார்கள்.பாலமுருகன் அவர்கள் தனது சொந்த வாகனத்தில் புதுக்கோட்டைக்கும் ,இந்த பகுதிகளுக்கும் பணி நிமித்தம் தினசரி சுற்றி வருவதாகவும்,இரவு 12 மணிக்குமேல் சென்று தூங்க செல்வதாகவும் சொன்னார்.நாங்களும் அனைத்து பொருள்களையும் வழங்கி விட்டு மனா நிறைவுடன் அங்கிருந்து கிளம்பி வரும்போது நிருபர்கள் இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு வந்தோம்.

நல்ல முறையில் உதவிய வாகன ஓட்டுனர்கள் :
                                           எங்கள் வண்டியின் ஓட்டுனர்கள் இருவரும் சரியான முறையில் எங்களுக்கு அனைத்து இடங்களிலும் உதவி செய்து நல்ல முறையில் எங்களை மீண்டும் அழைத்து வந்தனர்.காலை 9 மணிக்கு கிளம்பி மாலை 5 மணிக்கு மீண்டும் காரைக்குடி அடைந்தோம்.வரும் வழியில் கட்டுமாவடி சென்று அங்கு மீன்களும் வாங்கி கொண்டு ஊர் திரும்பினோம்.இந்த உதவி செய்வதற்கு சென்ற பயணம் பல அனுபவங்களை கற்று கொடுத்தது.அனைவருக்கும் நன்றி.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.






No comments:

Post a Comment