தி இந்து தமிழ் நாளிதழில் வெற்றிக்கொடி பகுதியில் இன்று (29/03/2016) தமிழகம் முழுவதும்
மற்றும் HINDU TAMIL ONLINE பகுதியில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் படம் மற்றும் திரு.அழகப்ப ராம் மோகன் அவர்களின் பேட்டி
Published: March 29, 2016 12:24 IST Updated: March 29, 2016 12:24 IST
தமிழா... தமிழா...
கானாடுகாத்தானைச் சேர்ந்தவர் 76 வயதான அழகப்பா ராம்மோகன். கடந்த 52
வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழைப் பரப்புவதற்காகவும் தமிழ்ப்
பிள்ளைகளை கைதூக்கிவிடுவதற்காகவும் இருபது வருடங்களுக்கு முன்பு, ‘உலக
தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை’ அமைப்பை உருவாக்கினார்
.
- அழகப்பா ராம்மோகன்
வீடுதோறும் இசையாக ஒலிக்கும் திருக்குறள்
பொறியாளர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தமிழ்ப் பணிக்காகத் தன்னை முழு
நேரமும் அர்ப்பணித்தார். திருக்குறளும் அறிவியலும் நமது இரு கண்கள் என்று
சொல்லும் இவர், 2000-ல் ‘திருக்குறள் பொதுமறை’என்ற 1,824 பக்கங்கள் கொண்ட
நூலை சென்னையில் வெளியிட்டார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் நான்கு
பக்கங்களில் படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம். மேலும்
சுவாரஸ்யமான பல விஷயங்களுடன் தகவல் சுரங்கமாக விரிகிறது இவரது திருக்குறள்
பொதுமறை. இதைத் தவிர, காமத்துப் பால் குறள்களையும் எஸ்.பி.பி. - சித்ரா பாட
வைத்து இனிமையான சிடிக்களாகப் பதிவு செய்திருக்கிறார்.
திருக்குறளின் சிறந்த கருத்துகளை 108 மந்திரங்களாக்கி அதையும் பத்து
நிமிடம் ஓடக்கூடிய சிடி மற்றும் ஒலி நாடாவாக வெளியிட்டிருக்கிறார்.
“திருக்குறள் மேடைகளில் மட்டுமே பேசப்படுகிறது. அதை வீட்டுக்குள் கொண்டு
செல்வதற்கான முயற்சிதான் இது. எந்த மதத்தினரும் தங்களது வழிபாடு முடிந்த
பிறகு, இந்த மந்திரங்களைப் பத்து நிமிடங்கள் ஓடவிட்டுக் கேட்டால் போதும்
வாழ்வின் உன்னத நெறிகளை உணரலாம்” என்கிறார்.
தமிழில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் படைப்பு
அழகப்பா ராம்மோகனின் மிக முக்கியமான இன்னொரு தயாரிப்பு மாணவர்களுக்கு
இயற்பியல் கணிதத்தைத் தாய்த்தமிழில் போதிக்கும் சி.டி. அமெரிக்காவில் உள்ள
அனென்பெர்க் அறக்கட்டளை (Annenberg) இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப்
எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு
என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன்
ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக்
கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை
ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார்.
அத்தகைய அதிஅற்புதமான படைப்பைத் தமிழ்ப் பிள்ளைகளுக்காக ஆறு வருடங்களுக்கு
முன்பு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்தார். இதுவரை
தமிழகம், இலங்கை, மலேசியா மற்றும் புதுச்சேரியில் 68 பள்ளிகளில் இந்தப்
பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துவிட்டார். ஆனால் தமிழக குழந்தைகளுக்கு
கொண்டுவந்து சேர்க்க விடாமுயற்சியுடன் இருக்கிறார்.
தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம்
“நம் நாட்டில், பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி எனக்
கல்வியை இரண்டாகப் பிரித்துவிட்டோம். இது அநியாயம்! தேவையில்லாதவற்றை இங்கே
இலவசமாகத் தருகிறார்கள். ஆனால், சுத்தமான தண்ணீர், சுகாதாரம், கல்வி
இதற்கு முக்கியத்துவம் இல்லை. இது புரியாத மக்கள் பெரும் பணத்தைக் கொட்டி
கான்வென்ட்டில் பிள்ளைகளைத் தள்ளுகிறார்கள். தாய் மொழியில் படிக்காத
படிப்பு எதுக்கு உதவும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அழகப்பா ராம்மோகன்,
“நாங்கள் உருவாக்கியிருக்கும் சிடிகளை மாணவர்கள் திரும்பத் திரும்பப்
பார்க்கும்போது அறிவியல், கணிதம் மீது ஆர்வம் உண்டாகும். அரை மணி நேரக்
காட்சிக்கு 30 பக்கங்கள் வீதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தந்திருக்கும்
விளக்க உரையை தமிழில் நூலாக்கியிருக்கிறோம். சிடியை விரும்பிப் பார்க்கும்
மாணவர்கள் கேட்டால் அந்த நூலைக் கொடுத்துப் படிக்கச் சொல்வோம்.’’
என்கிறார்.
உலகத் தரமான இந்த அறிவியல் கல்வியை அனைத்துப் பள்ளி-கல்லூரிகளிலும்
அறிமுகப்படுத்தத் தமிழக அரசிடம் பல முறை பேசியும் இதுவரை பலன் இல்லை.
தமிழில் பல ஐன்ஸ்டைன்களையும் தமிழகத்தில் மேலும் பல அப்துல் கலாம்களையும்
உருவாக்க நம்பிக்கையோடு செயல்பட்டுவருகிறார் இந்த நம்பிக்கை மனிதர்.
- ஸ்டீபன் ஹாக்கிங்
தொடர்புக்கு: 9444386621
No comments:
Post a Comment