Wednesday, 2 January 2019

ஆட்டோக்காரருக்கு ஒரு சல்யூட் !


                                             நண்பர்களே சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள கந்தர்வகோட்டை என்கிற ஊருக்கு சென்றேன்.தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு.சாமி சத்தியமூர்த்தி அவர்களின் தாயார் திருமதி.பாப்பாம்மாள் மறைவிற்கு கந்தவர்க்கோட்டை அருகில் உள்ள வளவம்பட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று துக்கம் விசாரிக்க கந்தவர்க்கோட்டைக்கு பேருந்தில் சென்றேன்.கந்தவர்க்கோட்டையில் பேருந்தில் இருந்து இறங்கியுடன் சாலையில் சென்ற ஒரு ஆட்டோவை அழைத்தேன்.அவரிடம் வளவம்பட்டி செல்ல வேண்டும் என்று சொன்னேன்.அவரும் சார் 70 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னார்.நான் காரைக்குடியில் உள்ள ஆட்டோக்கள் போன்று   அதிகமாக கேட்பார்களோ என்று எண்ணி 60 ரூபாய் வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னேன்.அதற்கு அவரோ ,சார் இங்கு இருந்து மூன்றரை கிலோமீட்டர் இருக்கும் சார்.சரியான தொகைதான் கேட்டுள்ளேன் என்று சொன்னார்.எனக்கு ஏரியா தெரியாது.அவர் சொன்ன உடன் ஆச்சரியப்பட்டு,பரவாயில்லியே மூன்றரை கிலோமீட்டருக்கு 70 ரூபாய்தானா என என் மனதுக்குள் எண்ணி கொண்டு அவருடன் ஆட்டோவில் பயணம் செய்தேன்.ஏனென்றால் காரைக்குடியில் ஆரியபவன் என்கிற இடத்தில இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு சுமார் அரை கிலோமீட்டருக்கு குறைவான தூரத்துக்கு 60 ரூபாய் வாங்கி மிரட்டும் ஆட்டோக்காரர்களை பார்த்து பழகிய எனக்கு மூன்றரை கிலோமீட்டருக்கு 70 ரூபாய் என்று சொன்ன உடன் உண்மையில் நாம் தமிழ்நாட்டில்தான் உள்ளோமா ? என்று எண்ணி கொண்டே சென்றேன்.
                                                                 உண்மையில் சுமார் மூன்றரை கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அதன் பிறகு அந்த ஊரின் உள்ளே சென்று சரியான முகவரியில் என்னை இறக்கி விட்டார்.இறங்குவதற்கு முன்பு நான் அவரிடம் ,அண்ணே கொஞ்ச நேரம் வெய்ட் செய்யுங்கள் ,நான் மீண்டும் உங்களுடனே வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.அவரும் சரி சார் என்று சொல்லி தள்ளி நின்று வெயிட் செய்தார் .நானும் சுமார் 15 நிமிடங்கள் அன்னாரது வீட்டுக்கு சென்று விசாரித்து விட்டு மீண்டும்  ஆட்டோவில் ஏறி கந்தவர்க்கோட்டைக்கு வந்து சேர்ந்தேன் .

ஆச்சரிப்படுத்திய ஆட்டோக்காரர் :
                                                       ஆட்டோவில் போவதற்கு ரூபாய் 70,மீண்டும் வருவதற்கு ரூபாய் 70 மேலும் வெயிட்டிங் சார்ஜ் வேறு என்று கணக்கு செய்து பணத்தை எண்ணி  கொண்டே ஆட்டோக்காரரிடம் முதலில் ரூபாய் 100யை கொடுத்து விட்டு ,பிறகு ரூபாய் 50 யை எடுத்து கொடுக்க போகும்போது ,சார் 90 ரூபாய் போதும் சார்.இந்தாருங்கள் ரூபாய் 10 என்று சொல்லி மீதம் கொடுத்து என்னை ஆச்சரியத்தில் அசத்தி விட்டார்.சார்,நான் உங்களை இறக்கி விட்டு மீண்டும் அந்த ஊரிலிருந்து சும்மாதான் திரும்ப வேண்டும்.நீங்கள் வந்ததால் எனக்கு இருபது ரூபாய் போதும் என்று சொன்னார்.எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றுமே புரியவில்லை.என்ன நடக்குது இங்கே? உண்மைதானா? கனவா.நினைவா என்று ஆச்சரியம்.ஆட்டோக்காரரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன்,செந்தில் என்று சொன்னார்.அவரிடம் மிகுந்த நன்றி சொல்லி விட்டு ,மனிதம் ,உண்மை ,நேர்மை வாழ்வதற்கு இவர்களே சாட்சி என்று எண்ணிக்கொண்டு கந்தவர்க்கோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி பயணித்தேன்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.






No comments:

Post a Comment