``இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் " - பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !
டெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள்
தீபாவளி விடுமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு :
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : எங்கள் பள்ளியில் கடந்த வாரத்தில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.அதனை திறந்து வைத்து தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷா அஜித் பேசும்போது,மாணவர்கள் குழுவாக பிரிந்து தங்களின் அருகில் உள்ள வீடுகளில் சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.பள்ளியில் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு,குழுக்கள் அமைத்து அவர்களின் வீடுகளின் அருகில் உள்ள வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த சொன்னோம்.கண்காட்சியில் மாணவர்களே டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு பொருள்களை கொண்டு வந்ததால் அவர்கள் கொசு எங்கெல்லாம் உருவாகி வருகிறது என்பதில் தெளிவாக பொதுமக்களிடம் எடுத்து சொல்லி பல வீடுகளில் ஆட்டுக்கல் ,சிமெண்ட் தொட்டி,உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்,வாளி ,தேங்காய் சிரட்டை,டயர் போன்றவற்றில் இருந்த புழுக்களை அடையாளம் காண்பித்து அதனை அப்புறப்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக வீடுகளில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தீபாவளி விடுமுறையில் மாணவர்களே ஆர்வத்துடன் குழுவாக சென்று விழிப்புணர்வில் ஈடுபட்டதற்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மேலும் தினசரி பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் எத்துணை பேர் வீடுகளுக்கு மாணவர்கள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என்கிற விவரத்தையும் சொல்ல சொல்லி ஊக்கப்படுத்தி வருகின்றோம் என்றார்.
பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று எவ்வாறு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை அவர்களே சொல்கிறார்கள் :
ஆட்டுக்கல்லை கவுத்தி போட்ட அப்பா :
மாணவி காயத்ரி (எட்டாம் வகுப்பு ): எங்கள் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கண்காட்சிக்கு பிறகு எங்களை குழுவாக பிரித்து அருகில் உள்ள வீடுகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.நான் முதலில் என் வீட்டை சுற்றி பார்த்தேன் .எங்கள் வீட்டு ஆட்டுக்கல்லில் தண்ணீர் தேங்காமல் இருந்தது.என் அப்பா தண்ணீர் இல்லை.கொசு வராது என்று சொன்னார்கள்.இப்ப தண்ணீர் தேங்காது.மழை பெய்தால் தண்ணீர் தேங்கும்.அதனால் கவுத்து விடுவோம் என்று சொன்னேன்.என் அப்பா ஆட்டுக்கல்லை கவுத்து விட்டார்கள்.
தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூட வைத்த மாணவி :
மாணவி நதியா (ஐந்தாம் வகுப்பு ) : நான் பள்ளியில் சொன்ன தகவல்களை எனது வீட்டுக்கு வந்து எனது அம்மாவிடம் , வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை கொசுக்கள் புகாத வண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும் என்று சொன்னேன்.மூடி வைக்காவிட்டால் அதில் நிறைய கொசுக்கள் முட்டையிடும்னு சொன்னேன்.எங்க அம்மா சொன்னாங்க,இனிமேல் நான் துணியை வைத்து மூடி வைத்து விடுகிறேன் என்று சொன்னாங்க.என்றார்.அதிலிருந்து மூடிதான் வைக்கின்றார்கள் என்றார்.
எங்கள் சித்தி வீட்டில் மாடிப்படிக்கு கீழே விறகு,பிளாஸ்டிக் டப்பா எல்லாம் இருந்தது.எங்க சித்தி கிட்ட சொன்னேன்.இந்த மாதிரி இருந்தா அதுல நிறைய கொசு உற்பத்தியாகும்னு சொன்னேன்.எங்க சித்தி உடனே,நான் இன்றே சுத்தம் செய்கிறேன் என்று சொல்லி சுத்தம் செய்தார்கள்.சித்தி வீட்டில் பிரிட்ஜ் இருந்தது .அதில் நிறைய தண்ணீர் தங்கி இருந்தது.அதனை உடனே எடுத்து ஊற்ற சொன்னேன்.ஊற்றி விட்டார்கள்.தினமும் சுத்தம் செய்ய சொன்னேன்.சரிசெய்கிறேன் என்று சொன்னார்கள்.இவ்வாறு நதியா கூறினார்கள்.
குழுவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது தொடர்பாக மாணவர்கள் அய்யப்பன்,மகாலெட்சுமி,காயத்ரி,பாக்கியலட்சுமி , நதியா ஆகியோர் கூறியதாவது :
மரத்தில் இருந்த நெகிழிப்பையை கழட்டி கொசுவை விரட்டிய மாணவர்கள் :
நாங்கள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் மீனாட்சி அத்தை வீட்டின் மரத்தில் நெகிழிப்பை கட்டி இருந்தார்கள்.அவர்களிடம் சென்று,அத்தை ,இப்படி கட்டி இருந்தால்,மழைநீர் தேங்கி கொசு வரும்.அவர் சொன்னார்.நான் கட்டிதான் வைத்திருப்பேன்.இல்லை என்றால் பழத்தை அணில் கடித்துவிடும் என்றார்.2 மி.லி.தண்ணீர் இருந்தால் கூட கொசு வளரும் என்று சொன்னேன்.உடனே அவர்கள் அந்த பையை கழட்டி தூர எறிந்தார்கள்.அதனில் இருந்து கொசு பறந்தது.அது போல் இரண்டு ,மூன்று கட்டி இருந்தார்கள் அனைத்தையும் கழட்டி தூர எறிந்துவிட்டார்கள்.
தண்ணீருடன் இருந்த பழைய தொட்டியை சுத்தம் செய்ய வைத்தல் :
நாங்கள் செல்லும் வழியில் ஒரு வீட்டில் பழைய சிமெண்ட் தொட்டியில் பாசி படர்ந்து இருந்தது.அதை நாங்கள் சுத்தம் செய்ய சொன்னோம்.அவர்கள் சுத்தம் செய்தார்கள்.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.நான் இனிமேல் வார,வாரம் சுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள்.
ப்ரிட்ஜில் இருந்த தண்ணீரை சுத்தம் செய்ய வைத்தல் :
எங்களுக்கு தெரிந்த வீடுகளில் எப்பொழுதும் பிரிட்ஜுக்குள் பின்னாடி உள்ள டப்பாவில் தண்ணீர் தங்கும் .அப்படி தங்க விட்டால் கொசு உற்பத்தியாகும் என்று சொன்னோம்.பிறகு நாங்கள் அந்த தண்ணீரை எடுத்து ஊற்ற சொன்னோம்.அவர்களும் ஊற்றினார்கள்.இனிமேல் எப்போதுமே அதனை சுத்தமாக வைத்து இருக்க சொன்னோம்.தண்ணீர் நின்ற இடத்தில் உப்பும்,தேங்காய் என்னையும் போட்டு கழுவ சொன்னோம்.அவர்களும் அவ்வாறே செய்வதாக சொன்னார்கள்.
வீட்டில் சும்மா கிடந்த டயரை தூக்கியெறிய செய்தல் :
எங்கள் பள்ளியில் படிக்கும் மகாலிங்கம் என்ற மாணவரின் வீட்டுக்கு சென்றோம்.அங்கு ஒரு டயர் கிடந்தது.அவரது அப்பாவிடம் ,டயரில் மழை தண்ணீர் தேங்கி ,அதில் கொசு முட்டையிட்டு லார்வா உருவாகி நம்மை கடித்து நமக்கு டெங்கு காய்ச்சல் வர நேரிடலாம்.எனவே இதனை தூக்கி வீசி விடுங்கள் என்றேன்.அவரும் அதனை தூக்கி எறிந்துவிட்டார்கள்.டெங்கு பரப்பும் கொசு அரை கிலோமீட்டர் மட்டுமே பறக்கும் என்கிற விவரத்தை சொல்லி அரை கிலோமீட்டர் தாண்டி ஆள் நடமாட்டமில்லாத இடத்தில தூக்கி எறிந்தார்கள்.
தென்னை மட்டையை கவுத்தி போடுதல் :
ராணி அத்தை வீட்டில் தோட்டத்தில் தென்னை மட்டை,இளநீர் ஓடு,தேங்காய் சிரட்டை எல்லாம் இருந்தது.நாங்கள் அவர்களிடம் சென்று ,இப்படி மட்டையை போட்டால் மழைநீர் தேங்கி கொசு முட்டையிடும் என்று சொன்ன உடன் அவை அனைத்தையும் கவுத்து போட்டார்கள்.நான் தேங்காய் ஓட்டை எல்லாம் பயன்படுத்தி விட்டு ,அப்படியே போட்டு விடுவேன்.நீங்கள் சொன்னதிலிருந்து இனிமேல் கவுத்தி போடுகிறேன் என்று சொன்னார்கள்.
இந்த புழுதான் கொசுவை உருவாக்கும்
பிரீத்தி அக்கா வீட்டில் பெயிண்ட் டப்பா தண்ணீருடன் இருந்தது.அதனில் லார்வா இருந்தது.நாங்கள் அவர்களிடம் இதுதான் லார்வா என்று காண்பித்து,விளக்கினோம் .அதை ஊற்றி விட்டு கவுத்து போட சொன்னோம்.அவர்களும் கவுத்து போட்டார்கள்.கொட்டாச்சியை கவுத்தி போடுதல் :
பிரியா அத்தை வீட்டில் ஆட்டுக்கல்லில் தண்ணீர் தேங்கி இருந்தது.நான் தண்ணீர் தேங்கி இருந்தால் கொசு முட்டையிட்டு டெங்கு காய்ச்சல் வந்துவிடும் என்று சொன்னேன்.அவர்கள் கொட்டாச்சியை எடுத்து தண்ணீரை வெளியில் ஊற்றி விட்டார்கள்.அப்படியே கொட்டாட்சியை தூக்கி எறிந்தார்கள்.கொட்டாட்சியை கவுத்துபோடனும்,2 மி.லி.இருந்தால்கூட கொசு முட்டையிடும் என்று சொன்ன உடன் அதனை கவுத்து போட்டார்கள்.
தெரியாத விசயங்களை தெரிய வைத்த பள்ளிக்கு பாராட்டு :
எங்களுக்கு தெரியாத பல விசயங்களை உங்கள் பள்ளியில் சொல்லி தருகிறார்கள்.நீங்கள் எங்களுக்கு வந்து சொல்வது பெரும் உதவியாக உள்ளது என்று சொன்னார்கள்.நாங்கள் தொடர்ந்து எங்கள் அருகில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இதனை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி காய்ச்சல் இல்லாமல் ஆக்குவோம் என்று சொன்னார்கள் .
தூதுவர்களாக மாறிய மாணவர்களுக்கு பாராட்டு :
மாணவர்களை டெங்கு விழிப்புணர்வு நிகழ்வில் தூதுவர்களாக மாற்றி பெற்றோரிடமும்,பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்களுக்கும் இவர்களை வழிநடத்தும் பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கலாம்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குழுவாக சேர்ந்து தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள தெருக்களில் பொதுமக்களிடமும்,உறவினர்களிடமும்,தங்களது வீடுகளிலும் டெங்கு விழிப்புணர்வு பணியில் விடுமுறை நாளில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment