Wednesday, 21 November 2018

கஜா நிவாரணம் - சரியான நேரத்தில் கிடைத்த சிறிய உதவி :

கஜா நிவாரணம்  கொடுத்தது  எப்படி? சேகரித்த பொருள்களை சரியாக கொண்டு சேர்த்தது எவ்வாறு ? பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :






எவ்வாறு உதவுவது ? யாருக்கு  உதவுவது ?
                                               எங்கள் பள்ளியிலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தோம்.கேரளா வெள்ளத்தின்போது அம்மாநில அரசே போர்டல் உருவாக்கி அது நல்ல முறையில் செயல்பட்டது.சென்னை வெள்ளத்தின்போது அனைத்து ஊடகங்களும் உதவி செய்ய தொடர்பு கொள்ள சொல்லி தகவல் கொடுத்து இருந்தனர்.பாட்டி இளவரசி அவர்களின் பேரனுக்கு செய்த உதவிக்கு அவர்களின் வங்கி எண்ணுக்கு பணம் அனுப்பினோம்.ஆனால் கஜா புயல் பாதித்த உடன் இது போன்று உதவி கரங்கள் உடனடியாக வரவில்லை.இதற்கு இடையில் பல வாட்சப் குழுக்களில் ,முகநூலில் சிலர் உதவி தேவை என்கிற தகவலும்,பாதிக்கப்பட்ட விவரங்களையும் பார்த்து அறிந்து கொண்டேன்.

முகநூல் மூலம் கிடைத்த உதவி :
                           பிறகு காரைக்குடியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆதி ஜெகநாதன் அவர்களை தொடர்பு கொண்டு,உதவி செய்வதை எவ்வாறு சரியான முறையில் கொண்டு போய் செய்யலாம் என்று கேட்டேன்.ஆதி ஜெகநாதன் அவர்கள் 1973 முதல் இது போன்று உதவி பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று அறிந்து அவரை தொடர்பு கொண்டேன்.சுமார் 40,000 மதிப்புள்ள பொருள்களை நாங்கள் சேகரித்து உள்ளோம்.அதனை பேராவூரணி பகுதிக்கு எடுத்து செல்கிறோம்.முதலில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டதாகவும்,பிறகு கலெக்டர் வழிகாட்டுதலின்படி பேராவூரணி தாசில்தாரை தொடர்பு கொண்டு,அங்கு உள்ள பாதிக்கப்பட்ட கிராமத்தின் வி எ ஓ வை தொடர்பு கொண்டு 100 லுங்கி ,100 சேலை,5000 கிலோ அரிசியை 5,5 கிலோவாக 100 பைகளில் போட்டு எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.நான் அவரிடம், புதுக்கோட்டை பகுதிக்கு உதவ வேண்டும் என்று சொன்னதும்,நீங்கள் இணையத்தின் வழியாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு எங்கு உதவலாம் என்று கேளுங்கள் என்று சொன்னார்.நானும் ஆறு முறை கலெக்டரின் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.அவரது உதவியாளர் போன் அட்டென்ட் செய்து ,பிறகு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.பிறகுஎவ்வாறு உதவவுது ? யாருக்கு உதவவுது ? என்று புதுக்கோட்டை நண்பர்கள் சிலரிடம் பேசினேன்.பேசிய சிலரில் உதவி வேண்டும் என்று தெரிந்தது.ஆனால் எந்த மாதிரியான உதவி வேண்டும் என்று சொல்ல இயலவில்லை.பிறகு முகநூலில் ஷஜஹான் என்கிற டெல்லி நண்பரின் பக்கத்தை பார்த்தபோது அவரது நண்பர்களில் மணிகண்டன் என்பவரை பார்த்தேன்.அவரும் ஒரு ஆசிரியர்.சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் தொடர்பில் இருந்தேன்.பிறகு முகநூலில் சென்று மணிகண்டன் அவர்களின் எண்ணை எடுத்து பேசியபோது ,கந்தவர்கோட்டை பகுதியில் வடுகபட்டி ,காட்டுநாவல் காலனி பகுதிகளுக்கு உதவி தேவை என்றார்.

என்ன உதவி வேண்டும் ? தெளிவாக சொன்ன ஆசிரியர் :
                                           என்ன மாதிரியான உதவி தேவை என்று கேட்டபோது ,அரிசி,ரவை,பிஸ்கேட்,லாரி தண்ணீர் வேண்டும் என்று சொன்னார்.மேலும் காளையார்கோவில் பகுதியில் இருந்து ஆசிரியர் பெஞ்சமின் அவர்கள் ஒரு லோடு லாரி தண்ணீர் கொண்டு வருவதாகவும் கூறினார்.

அரிசி தேவை :
                                 எங்கள் பள்ளியில் சேமித்த பணத்துடன் தேவகோட்டையில் சென்று அரிசி வாங்கினோம்.1000 ரூபாய் மதிப்புள்ள அரிசியை கொஞ்சம் குறைவாக கொடுக்கும்படி மில் ஓனரிடம் பேசி 11 மூடை அரிசி வாங்கினோம்.அவரும் புயல் நிவாரணம் என்றதும் ஓரளவு விலை குறைத்து  கொடுத்தார்.உடனடியாக அரசி வாங்கி கொண்டு எங்கள் பள்ளிக்கு வந்தோம்.
      
எப்படி அரிசி மூடைகளை கந்தவர்க்கோட்டைக்கு கொண்டு செல்வது ?
                                        மீண்டும் ஆலோசனை செய்து பேருந்தில் எடுத்து செல்வோம் என்று முடிவு செய்தோம்.அப்போது நண்பர் ஆசிரியர் பெஞ்சமின் அவர்கள் போன் செய்து சார் ,காளையார்கோவிலில் இருந்து இன்று மாலை 3 மணி அளவில் 6,500 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்கின்றேன்.நீங்களும் ஒரு லோடு தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கேட்டார்.நான் சொன்னேன்,எங்கள் பள்ளியில் 11 மூடை அரிசி உள்ளது.நீங்கள் செல்லும் வண்டியில் அதனை ஏற்றி செல்லலாமா? என்று கேட்டேன்.அதற்கு அவரோ,சார் டேங்கர் லாரியில்  மூன்று பேர்தான் உட்கார முடியும்.வேறு எதுவும் ஏற்ற இயலாது என்று சொன்னார்.இருந்தாலும் வண்டிக்காரரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என்று சொன்னார்.நானும் நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

நம்பிக்கை கொடுத்த வார்த்தைகள் :
                                                      சுமார் ஒரு மணி நேரம் கழித்து பெஞ்சமின் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு சார்,டேங்கர் லாரியின் மேல் இடம் உள்ளது.அங்கே மூடைகளை அடுக்கி கொள்ளலாம் என லாரி ஓனர் சொல்கிறார்.நீங்கள் தார்பாய் ஒன்று தயார் செய்து கொள்ளுங்கள்.நாம் செல்வோம்.தார்பாய் போட்டு மூடினால்தான் அரசி மழை பெய்தாலும் ஒன்றும் ஆகாது என்று சொன்னார்.நாங்கள் உடன் தேவகோட்டையில் உள்ள கும்பம் கார்ட்ஸ் நிறுவனத்துக்கு சென்று அரசி மூட வேண்டும்,புயல் நிவாரண உதவி என்று சொன்ன உடன் ,அவர்களும் 10க்கு 8 அளவுள்ள ஒரு பிளெக்ஸ் கொடுத்து உதவி செய்தார்கள்.அதனையும் பெற்று கொண்டு பள்ளி வந்தோம்.

டேங்கர் லாரியில் அரசி மூடைகளை ஏற்றுதல் :
                                                    சொல்லியவாறே நண்பர் பெஞ்சமின் அவர்கள் மாலை 3.45 மணிக்கு காளையார்கோவிலில் கிளம்பி எங்கள் பள்ளிக்கு மாலை 5.45 மணியளவில் வந்து சேர்ந்தார்.தண்ணீர் லாரி என்பதால் மிகவும் ஸ்லோவாகத்தான் வந்தது.எங்கள் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் அரசி மூடைகளை லாரியில் ஏற்றி ,நானும் அவர்களுடன் பயணமானேன்.செல்லும் வழியில் லாரியில் இடதுபுறம் உள்ள விளக்கு எரியாமல் போய் விட்டது.மாலை 4 மணி முதல் 5.30 வரையில் தேவகோட்டை,காரைக்குடியில் நல்ல மழை .

பலதடைகளை கடந்து சென்றடைந்த உதவி :

                                    இதனை கடந்து லாரியில் அரசி மூடைகளை ஏற்றி பிளக்ஸ் வைத்து கட்டி (தண்ணீர் படாமல் பாதுகாப்பாக ) கொண்டு போய் இரவு 9.30 மணி அளவில் சேர்ந்தோம்.செல்லும் வழிநெடுகிலும் மழை சாரல் இருந்தது.நண்பர் மணிகண்டன் உதவியுடன் அரிசி மூடைகளை பிரித்து கொட்டி,மூன்று படிகள் வீதம் தனி,தனியாக பையில் போட்டு சுமார் 121 பைகள் தயார் செய்து கொடுத்து விட்டு இரவு 12 மணியளவில் மீண்டும் வந்து சேர்ந்தோம்.மறுநாள் நண்பர் மணிகண்டன் அவர்கள் ,காட்டுநாவல் பகுதியில் உள்ள மக்களுக்கு அந்த பைகளை சரியான முறையில் வழங்கி எங்களுக்கும் தகவல் கொடுத்து உதவினார்.லாரியுடன் அரிசி மூடை பயணம் செய்த  தூரம் சுமார் 150 கிலோமீட்டர் ஆகும்.போவதற்கு மட்டும் சுமார் 150 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடுத்த பொருள் உதவி சரியாக சென்றடைந்தது மகிழ்ச்சி :
                                            சொந்த ஊரில் வீடு இழந்து,மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்து உதவி செய்யும்பொழுது நமக்கு மன நிறைவை ஏற்படுத்தி விடுகிறது.அந்த மக்களை பார்க்கும்போதும் ,அவர்கள் சொல்லும் வார்த்தைகளும் நமக்கு மிகுந்த மன உறுதியை ஏற்படுத்துகிறது.அவர்கள் தற்போது அனுபவித்து வரும் சிரமங்களுக்கு முன்பு நமது பயணம்,பொருள் சேகரிப்பு போன்றவை ஒரு பெரிய வேலையாக இல்லை.சேவையாகவே நினைக்க தோன்றுகிறது.அனைவருக்கும் நல்வழி ஏற்படுத்த இறைவனை பிரார்த்திப்போம்.

கூட்டு முயற்சியே வெற்றி :
                                                    உதவுவது என்று முடிவு செய்தாலும் ,அதனை எவ்வாறு ,எப்படி சரியான முறையில் கொண்டு சேர்ப்பது என்பது முக்கியம்.அந்த வகையில் எங்கள் பள்ளி மாணவர்கள் (வீட்டில் ஏதவாவது வாங்கி தின்ன கொடுக்கும் காசை மிச்சப்படுத்தி) உண்டியலில் சேமிக்கும் பணத்தை கொடுத்ததும்,பள்ளி செயலர்,ஆசிரியர்கள்,தேவகோட்டை திருமுருகன் மில் உரியமையாளர்,ஆசிரியர் பெஞ்சமின்,லாரி ஓட்டுனர் ( விளக்கு ஒரு பக்கம் தீடிரென எரியாத நிலையிலும் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தவர் ),கந்தர்வகோட்டை ஆசிரியர் மணிகண்டன் ,சில ஆலோசனைகளை சொல்லி உதவிய ஆதி ஜெகநாதன் ஆகியோருக்கும் மிக்க நன்றி.


                               


நீங்களும் கஜா புயல் பாதிப்புக்கு   உங்களின் ஈரமான உதவியை செய்ய கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் ஆசிரியர் மணிகண்டன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.தொடர்பு எண் :9942503088

புதுக்கோட்டை ,கந்தவர்க்கோட்டை ,ஆலங்குடி,கீரமங்கலம் பகுதிகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் மக்கள்  மிகவும்  சிரமப்படுவதாக நண்பர் தெரிவித்தார்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
செல் :8056240653


கஜா புயல் நிவாரணம்   அரசி  அனுப்பி உதவிய இளம் பள்ளி மாணவர்கள்

 பிஞ்சுகளின் புயல்  நிவாரணம்


உண்டியல் சேமிப்பை கஜா  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 275 கிலோ அரிசி  அனுப்பிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக  அரசி மூடைகளை அனுப்பினார்கள்.





No comments:

Post a Comment