Tuesday, 9 May 2017

 களப்பயணம் ஏன் அழைத்து செல்ல வேண்டும் ?
சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி
2016-2017ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுடன் பள்ளியில் கலந்துரையாடியவர்கள் 75 ஆளுமைகள்


2016-2017ஆம் கல்வி ஆண்டில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி தொடர்பான நிகழ்வுகள்

*நிகழ்வுகள் / விழாக்கள்      -  97

*போட்டிகள்                               - 52

*பயிற்சிகள்                                - 32

*சமுதாய பணிகள்                 -  08

*களப்பயணம்                           - 06

                                     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்ளை தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ,கேள்விகள் அதிகம் கேட்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கும் வகையில் பல்வேறு களப்பயணங்களையும் ,ஆளுமை திறன் உடையவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களும் பிற்காலத்தில் கல்வியில்  உயரிய லட்சியங்களை அடையும் வகையில் உருவாக்கி வருகிறார்கள் .அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை மாணவர்களிடம் ஊக்கப்படுத்தி அதன் வழியாகவும் அறிவின் அளவை,சுயமாக சிந்திக்கும் திறனை கல்வியில் உயர்த்தியும்,எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



                          இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில்    கேள்விகள் கேட்டாலே  ஏதோ விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்க்கின்றனர்.இது போன்ற நிலையில் அரசு உதவி  பெறும் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு ஆளுமைகளை பள்ளிக்கு நேரடியாக  அழைத்து வந்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்க தூண்டி அதன் தொடர்ச்சியாக பல கேள்விகளை மாணவர்களே கேட்கும் அளவிற்கு  அவர்களுக்கு சிந்தனையை தூண்டி அவர்களது கேள்வி ஞானம் இன்று வளர்ந்துள்ளது.இது எப்படி சாத்தியமானது ? சொல்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் .
                                                       இந்த பள்ளிக்கு வந்த புதிதில் முதன்முதலாக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்க சொல்லி கலந்துரையாடல் செய்தார்.அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மட்டுமே சுமார் 75 ஆளுமைகள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி செல்வதுடன் மாணவர்கள் அவர்கள் சொல்வதை உள்வாங்கி அவர்கள் முன்பாகவே அதனை தொகுத்து சொல்வதை கண்டு வியப்பில் செல்கின்றனர்.இதற்கு நாங்கள் பள்ளியில் செயல்படுத்தும் பல்வேறு போட்டிகள்,புத்தகங்கள் படித்து அதனை மறு நாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் சொல்ல சொல்வதும்,ஆளுமைகள் பேசியவற்றை மறுநாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் சொல்ல சொல்வதும் (ஒவ்வொரு மாணவரும் ஒன்று அல்லது இரண்டு என) ஆளுமைகள் சொன்ன கருத்துகளை சொல்லி அனைவரும்  அனைத்து கருத்துகளையும் சொல்வது போன்று பயிற்சி அளித்து வருகிறோம்.இதனால்தான் காவல் நிலையத்திற்கு களப்பயணம் சென்றபோது டிஸ்பி  கருப்பசாமியிடம் எட்டாம் வகுப்பு படிக்கும்  விஜய்  என்கிற மாணவர் சினிமா படத்தில் எப்படி ஒரு போலீஸ் பல பேரை அடித்து தள்ளுகிறார் என நேரடியாக கேள்விகள் கேட்டார்.  இது போன்று பல்வேறு கேள்விகளை கேட்க செய்ய வகுப்பறையிலும்,பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்திலும் கேட்க சொல்கிறோம்.இது பல்வேறு புதிய சிந்தனைகளை மாணவர்களிடத்தில் விதைப்பதற்கு உதவியாக உள்ளது.ஏன் ,எதற்கு,எப்படி என்று கேள்விகள் கேட்பதற்கு நாம் இளம் பள்ளி பருவத்தில் உருவாக்கி விட்டால் அதுவே அவர்களுக்கு  வரும்காலத்தில் மிகுந்த உதவியாக இருக்கும்.கேள்விகள் அதிகம் கேட்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வருகிறோம்.பல்வேறு ஆளுமைகளை பள்ளிக்கு அழைத்து வரும்போது அவர்களை போல் தாங்களும் வரவேண்டும் என்கிற எண்ணம் மாணவர்களிடத்தில் வளர்ந்து வருகிறது.இது போன்று பதவிகள் உள்ளன என்கிற எண்ணமும் ஆசிரியர்களுக்கும்,மாணவர்களுக்கும் தெரிய வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்டோர் மாணவர்களுடன் பள்ளிக்கே வந்து கலந்துரையாடி சென்று உள்ளனர்.
                                           சமீபத்தில் இந்திய அரசின் உதவி தலைமைக்  கணக்கு தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் (வயது 86), இப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் , எந்த விதமான தயாரிப்பும் இல்லாமல் தீடிரென ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தான்  முன்னின்று நடத்த வேண்டிய கலந்துரையாடல் நிகழ்வை சுமார் நான்கரை மணி நேரம்  மாணவர்களே பல்வேறு கேள்விகள் கேட்டு அவரிடம் பதில்கள் பெற்று அவரை வழிநடத்தி சென்றது மிக வியக்கத்தக்க நிகழ்வு என தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் இப்பள்ளியின்,சமுதாயத்தின் வெற்றி.யார் ஒருவர் இளம் மாணவ பருவத்தில் கேள்விகள் அதிகம் கேட்டு பதில்கள் பெறுகிறார்களோ அவர்களே பிற்காலத்தில் நல்ல சமுதாய சிந்தனை உடையவர்களாக மாறி உருவெடுக்கிறார்கள் என்பது நிஜம். எங்கள் பள்ளியில் தொடர்ந்து அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம்.
                                         சத்துணவு அனைத்து மாணவர்களும் அன்பாக சாப்பிடும் வகையில் புதிய முயற்சி :
                                      அது என்ன புதிய முயற்சி ? தலைமை ஆசிரியரே தொடர்கிறார்.சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்த இன்னம்புரான் தனது வலை தலத்தில் பள்ளியின் சத்துணவு தொடர்பாக பின் வருமாறு எழுதி உள்ளார் :

 " பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் இந்த பள்ளியில் தமிழக  அரசு வழங்கும்  மதிய உணவு சத்துணவு பரிமாறுவதில் நான் கண்டேன்.பிரதமர் மோடி இதனை நேரில்  கண்டால் மகிழ்ச்சி அடைவார் .ஒவ்வொரு மாணவரும் தூய்மையான  கைகுட்டையின்  மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான முறையில் உணவு அருந்தினார்கள்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1ம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன் அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைத்தனர்.ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட பின்பு தாங்கள் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டோம் என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் காண்பித்து சென்றனர்.இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.

                     ஒவ்வொரு   வாரமும் வெவ்வேறு நாள்களில் இரண்டு பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடுகிறார்கள் . சாதம் சுமாராக உள்ளது என்று கருத்து தெரிவித்தால் உடனடியாக சம்பத்தப்பட்ட அமைப்பாளரிடம் தலைமை ஆசிரியர் பேசுகிறார்.மறுநாள் முதல் சரி செய்ய சொல்லி விடுகிறார்.நன்றாக இருக்கிறது என்று கருத்து பதிவிடும்போது சம்பத்தப்பட்ட அமைப்பாளரை அழைத்து பெற்றோர்களையே பாராட்ட சொல்லுகிறார்.நான் சென்றபோது ஒரு தாய் வந்து சாப்பிட்டு விட்டு நன்றாக உள்ளது என்று தெரிவித்தார் .உடன் என் முன்பாகவே சத்துணவு நோட்டில் பதிய செய்ததுடன் அமைப்பாளர்க்கும்,உணவு பரிமாறுபவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தார்.இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.மாணவர்களும் தைரியமாக உணவு எப்படி உள்ளது என்று தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களிடம் சொல்லாம் என்கிற தகவலும் தெரிந்து கொண்டேன்.சாதம் நன்றாக உள்ள நாட்கள் எல்லாம் மாணவர்களே சத்துணவு சமைப்பவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களிடம் தாமாகவே வந்து இன்று உணவு சூப்பர் என்று சொல்கிறன்றனர்.இது எனக்கு அரசு பள்ளியில் புதிய அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.

களப்பயணங்களின் வழியாக கேள்விகள் கேட்டு நேரடி அனுபவத்தின் வாயிலாக கல்வியின் நிலையை மேம்படுத்துதல்
                                      காவல் நிலையம்,பாரத ஸ்டேட் வங்கி ,கலை மற்றும் அறிவியல் கல்லூரி,அஞ்சல் நிலையம் ,அகில இந்திய வானொலி நிலையம்,தோட்டக்கலை துறை பண்ணை போன்ற இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் களப்பயணமாக 2016-2017 கல்வி ஆண்டில்      அழைத்து சென்று பல்வேறு கேள்விகள் கேட்க செய்து    மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை நேரடியாக கற்று கொடுத்துள்ளோம்.காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரி கருப்பசாமி,வங்கியில் முதன்மை மேலாளர் வேல்முருகன்,உதவியாளர் முருகன்,அறிவியல் கல்லூரியில் இயற்பியல்,வேதியியல்,விலங்கியல்,தாவரவியல் துறை தலைவர்களும்,பேராசிரியர்களும்,கல்லூரி முதல்வர் சந்திரமோகன் அவர்களுடனும்,அஞ்சல் நிலையத்தில் தபால் அதிகாரி செல்வராஜ் உடனும்,அகில இந்திய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொன் .தனபாலனுடனும்,தோட்டக்கலை துறையில் தர்மருடனும் மாணவர்கள் தங்கள் கேள்விகளை களப்பயணத்தில் கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டனர்.
                                                               களப்பயணம் ஏன் அழைத்து செல்ல வேண்டும் ? இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுவதாவது : எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கல்லூரியின் இயற்பியல்,வேதியியல்,தாவரவியல் ,விலங்கியல் ஆய்வகங்களுக்கு நேரடியாக அழைத்து செல்ல பட்டு அங்கு பேராசிரியர்களிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும்போது அவர்களது கல்வி அறிவு மேம்படுகிறது.பள்ளியில் புத்தகத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு இது புதிய அனுபவத்தை கொடுக்கும்.மேலும் பொருளாதாரத்தில் ,சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இது போன்று கல்லூரிகளுக்கு அழைத்து வரும்போது அவர்கள் பிற்காலத்தில் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு குறிக்கோளாக உண்டு பண்ண வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
                                    பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்று சுவைப் மெஷின் தொடர்பாகவும்,ATM தொடர்பாகவும் கற்று தரும்போது அவர்கள் பெற்றோர்களுக்கும் அவர்களது வீட்டை சுற்றி உள்ளவர்களுக்கும் சொல்லி கொடுக்கும் வகையில் நேரடி அனுபவம் வாயிலாக கற்று கொள்கிறார்கள்.தொடர்ந்து நான்கு வருடமாக அழைத்து செல்லும் எனக்கு ,முதல் வருடம் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்  ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது: நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ,வேலைக்கு சென்ற பிறகும் பல வருடங்கள் வங்கிக்கு சென்றது கிடையாது.பயம் தான் காரணம்.வேலைக்கு வந்த பிறகு வேறு வழியில்லாமல் IOB வங்கிக்கு பயந்து கொண்டே சென்றேன்.ஏன் பயம்? எனக்கு வங்கி படிவம் எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தெரியாது.அப்புறம் தட்டு தடுமாறி வங்கி அலுவலர் உதவியுடன் பூர்த்தி செய்தேன்.நீங்கள் 8 ம் வகுப்பு படிக்கும்போதே மாணர்வகளை பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து வந்து அனைத்து விஷயங்களையும் சொல்லி கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.அது எனக்கு மிகப்பெரிய ஊக்கப்படுத்தும் வார்த்தையாக இருந்தது.தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அழைத்து செல்கிறேன்.அதுவே மிகப்பெரிய கல்வி அனுபவம் ஆகும்.வங்கியிலும் முழு ஒத்துழைப்பு அழைத்து உதவி செய்கிறார்கள்.
                                இந்த ஆண்டு முதன் முறையாக தமிழக அரசின் தோட்டக்கலை துறை பண்ணைக்கு அழைத்து சென்றோம் .அங்கு தோட்டக்கலை துறை அலுவலர் தருமர் எங்களுக்கு பதியம் போடுதல்,குழித்தட்டு நாற்றங்கால் இடுவது,ஒட்டு செய்வது,கவாத்து செய்வது என அனைத்துமே ஆசிரியைகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவருக்கும் புதிய தகவலாக,விவசாயம் தொடர்பாக இளம் வயது மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி அவர்கள் சில நாள் கழித்து என்னிடம் பேசும்போது முன்பே தெரிந்துஇருந்தால் தானும் வந்து கற்று கொண்டு இருப்பதாக சொன்னார்.என்னிடம் பல பேர் இதனை சொன்னார்கள்.அமெரிக்காவில் இருந்து என்னிடம் பேசிய பிரித்வி என்கிற தமிழ்நாட்டு பெண் ,எனக்கு மரம் என்றாலே என்னவென்று தெரியாமல் போய்விட்டது.நீங்கள் இளம் வயது மாணவர்களுக்கு அருமையான விஷயத்தை சொல்லி கொடுத்து வருகிறீர்கள் என்று சொன்னர்கள்.
                            2016-2017ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுடன் பள்ளியில் கலந்துரையாடியவர்கள் :     இந்திய வருமான வரி துறையின் இணை ஆணையாளர் நந்தகுமார் IRS,தேவகோட்டை சார் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,மாவட்ட துணை கண்கணிப்பாளர் கருப்பசாமி ,மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதா மணி ,பத்திரிக்கை செய்தி ஆசிரியர் திருமங்கலம்  கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி கோட்ட அஞ்சல் துறை அதிகாரி மாரியப்பன்,திருச்சி மாவட்டம் இறகுடிஅரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மனோகரன் ( பனானா லீப் ஹோட்டலின் நிர்வாகி) , 400 மொழிகள் அறிந்த அக்ரம்,25 நாடுகள் சுற்று பயணம் செய்துள்ள மொழிப்பிரியன் ,16 வகையான கவனகம் செய்யும் திருக்குறள் தீலீபன்,தேவகோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாளர் நாகராஜ்,தேவகோட்டை கோட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா , ஜெர்மன் நாட்டை சார்ந்த சுபாஷினி,ஹாங்காங் நாட்டை சார்ந்த ராமநாதன்,சிங்கப்பூர் நாட்டை சார்ந்த சுவாமிநாதன் ,இந்திய தணிக்கை துறையின் முன்னாள் அதிகாரி சௌந்தராஜன்,தமிழ்நாடு மீன் வளத்துறையின் முதன்மை செயல் அலுவலர் பெலிக்ஸ் ,தேவகோட்டை நகராட்சி தலைவர் சுமித்ரா ,ஆணையாளர் பார்த்தசாரதி,மாவட்ட கல்வி அதிகாரி மாரிமுத்து,அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் சுந்தர்,சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் ,ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் ,எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகனசுந்தரம்,தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி இராமச்சந்திரன் ,தனியார் விவசாய கல்லூரி டீன் பேபிராணி,தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி,தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேஸ்வரி,தேவகோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிறிஸ்டோபர் தம்புராஜ்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெண் மருத்துவர்கள் பாண்டி பிரியா,சிவசங்கரி,பிரியா,பல் மருத்துவர்கள் மல்லிகை தேவி,சண்முகப்பிரியா,வட்டார மருத்துவ அலுவலர் கமலேஸ்வரன் ,தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார்,சேக்கிழார் விழா கழக செயலர் பேரா.சபா அருணாச்சலம்,அரியலூர் IAS பயிற்சி மைய இயக்குனர் ராஜேஷ்,பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை  மேலாளர் வேல்முருகன் ,பாரத ஸ்டேட் வங்கியின் திருச்சி மண்டலத்தின் அலுவலர் ஏபெல் சாலமோன் , கனரா வங்கி மேலாளர் கோபாலகிருஷ்ணன்,எல்.ஐ .சியின் ஓய்வு பெற்ற மண்டல மேலாளர் வினை தீர்த்தான் , அழகப்பா பல்கலையின் ஓய்வு பெற்ற அலுவலர் காளைராஜன் ,காவல் துறை ஆய்வாளர்கள் ரமேஷ்,பாஸ்கரன்,தேவகோட்டை நகராட்சியின் பொறியாளர் ஜெயபால்,ஆதலாஞ்சேரி பட்டதாரி ஆசிரியர்கள் மோகன்,சசிகலா,பாலா எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆர்வலர் முருகன், அகஸ்தியா பௌண்டேஷன் மோகன் தாஸ், மகேஷ்,கவியரசு,முத்துச்செல்வன்,தோல் நோய் மேற்பார்வையாளர்கள் வேங்கட சுப்பிரமணியன்,சந்திர சேகர்,பரமசிவம்,தேவகோட்டை அரண்மனை அஞ்சல் நிலைய தபால் அதிகாரி செல்வராஜ்,நீர் மேலாண்மை தொடர்பாக குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் விமலேந்திரன்,கண்ணங்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ்,அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பெரியசாமி, அழகு மலர் பள்ளி தாளாளர் யோகலேட்சுமி,பாண்டிச்சேரி ஆரோவில் சுந்தரவல்லி,அரசு மேல்நிலை பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆதிரெத்தினம்,கண்தானம் அறக்கட்டளை அருணாச்சலம் ,ராமு ட்ராவல்ஸ் உரியமையாளர் சுப்பையா,மீனாட்சி ஆச்சி,தேசிய கடல் சார் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் ஆனந்த் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடி சென்று உள்ளனர்.இவர்கள் அனைவரிடமும் மாணவர்கள் அதிகமான கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றுள்ளனர்.


வார,வாரம் மற்றும் மாத திருவிழாக்கள் 

                       இப்பள்ளியில் வாரா,வாரம் மாணவர்களுக்கு பேச்சு,கவிதை,ஓவியம்,மனக்கணக்கு ,புதிர்கணக்கு,வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை மாதம் ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதனை வாரம்தோறும் போட்டியாக நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.  மேலும் மாதா,மாதம் பாடங்கள் சார்ந்த வினாடி வினா மாதம் ஒரு பாடம் என எடுத்துக் கொண்டு மாத கடைசியில் போட்டிகள் நடத்தி வருகிறோம்.இதனில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு வெற்றி பெற்று பரிசு பெறுகின்றனர்.ஒரு முறை பரிசு பெற்ற மாணவர் அடுத்த முறை பார்வையாளராக  மட்டுமே இருக்க முடியும்,பங்கேற்பாளர்கள் இல்லை என  தெரிவித்துள்ளதால் அனைத்து மாணவர்களும் போட்டிகளில் கண்டிப்பாக பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களின் இளம் வயது மனதில் விதைத் துள்ளோம்.இத்திருவிழாக்கள் மாணவர்கள்  மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
                              இந்த நிகழ்வு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது : முதன் முதலாக இந்த போட்டிகளை ஆரம்பிக்கும்போது பல்வேறு இடையூறுகள் இருந்தன.ஆனால் எந்த ஒரு செயலையும் விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்யும்போது அது வெற்றியாக மாறும் என்பது உண்மை.அதன் தொடர்ச்சியாக வார,வாரம் நாங்கள் தொடர்ந்து இந்த போட்டிகளை நடத்தி ஆசிரியர்களே பரிசுகளை வழங்கும்போது அனைவரும் பங்கு கொண்டதுடன் ,முதல் படிக்கும் ஸ்வேதா( தற்போது நான்காம் வகுப்பு படிக்கிறார் ) என்கிற மாணவியின் தாயார் என்னிடம் ஸ்வேதாவின்  தகப்பனார் கல்லூரி வரை படித்தும் ஒரு பரிசும் வாங்கவில்லை என்றும்,  இப்போட்டிகள் மூலம் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகள் இரண்டு பரிசுகள் பெற்றுள்ளது மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.அதுவே எங்கள் ஆசிரியர்களுக்கும்,எனக்கும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து இப்போட்டிகளை நடத்தி ஆசிரியர்களே பரிசும் வாங்கி கொடுத்து வருகின்றனர்.இது மாணவர்கள் அனைவரின் திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு உதவியாக உள்ளது.
                               இந்த கல்வி ஆண்டு முதல் வாரம் தோறும் வினாடி வினா போட்டி புதியதாக அறிவித்து ,வாரம் தோறும் செவ்வாய் கிழமை அன்று காலை வழிபாட்டு கூட்டத்தில் கேள்விகள் கேட்டு வகுப்புக்கு ஒரு கேள்வி என கேட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.இந்த பரிசு சொன்னவர்களுக்கு என தனியாக சில கேள்விகள் தயாரிக்கப்பட்டு அவர்களை தனி குழுவாக மாற்றி,மீதம் உள்ளவர்களுக்கு வழக்கம்போல் கேள்விகள் கேட்டு பரிசுகளும்,தனி குழுவினருக்கும் கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கி வருகிறோம்.அடுத்த வாரம் அதே போன்று வெற்றி பெற்றவர்கள் ஒரு அணியாகவும்,மீதம் உள்ளவர்கள் மீண்டும் ஒரு அணியாகவும் கேள்விகள் கேட்டு பதில் சொல்லி பரிசுகள் பெறுவார்கள்.இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் மாணவர்கள் அனைவரும் பரிசுகள் பெற வேண்டும் என்கிற எண்ணமும் ,அதிகமான அளவில் பொது அறிவு,செய்தி தாள் படிக்கும் பழக்கம் பெருகி வருகிறது.
                                   இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்பிலும் உண்டியல் வைத்து அவர்களால் முடிந்த தொகையை உண்டியலில் சேர்க்க சொல்லி அதனை மாணவர்கள் சமுதாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் நாங்கள் அதனை பயன்படுத்துவோம் என சொல்லி தொடர்ந்து சேகரித்து வைராக்கியத்துடன் வெற்றி பெற்ற பாட்டி இளவரசியின் பேரனுக்கு உதவி செய்தோம்.இதுவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதன் வாயிலாக பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வீடுகளில் உண்டியல் வைத்து அவர்களாகவே சேமித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




2016-2017ஆம் கல்வி ஆண்டில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி தொடர்பான நிகழ்வுகள்: சுருக்கம்
                             2016-2017ம் கல்வி ஆண்டில் இப்பள்ளியில் முதன் முதலாக வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் மருத்துவரை அழைத்து மாணவிகள்,அவர்களது பெண் இரண்டாம் பருவ விடுமுறையில் 5 நாட்கள் மாணவர்களுக்கு குறைந்த செலவில் அறிவியில் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி , வேறு பள்ளி ஆசிரியர்களுக்கும் இரண்டு நாள் பயிற்சி,1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்ட அறிவியில் கண்காட்சி நடத்தியது , காவல் நிலைய களப்பயணம் ,தோட்டக்கலைதுறை பண்ணைக்கு நேரடி விசிட்,கெட்டி மேளம் முழங்க நாதஸ்வர இசையுடன் கழுத்தில் மாலை அணிவித்து புதியதாக சேரும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தது ,மாநில அளவில் முதன் முறையாக வண்ண மீன்கள் தொடர்பான பயிற்சி,தொடர்ந்து 4 ஆண்டுகளாக மாணவர்களை NMMS தேர்வில் வெற்றி பெற வைத்தது,கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு   47 சான்றிதழ்களை பெற்றும்,பத்திரிக்கைகள் மற்றும் செய்தி சேனல்களின் வழியாக பல ஆயிரம் ரூபாய் பணத்தை பரிசாக பெற்றது,பல பள்ளிகளில் இருந்து மாணவர்களையும் ,ஆசிரியர்களையும் அழைத்து NMMS  தேர்விற்கான பயிற்சி முகாம் நடத்தியது,முதன்முதலாக 100 சதவிகிதம் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு ஆவண செய்தது,பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் , மாத திருவிழா போட்டிகள் ,வார திருவிழா போட்டிகள்,வாரம்தோறும் வினாடி வினா போட்டிகள் ,புத்தககங்கள் படித்து வர செய்து அதனை பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் சுருக்கி தகவலை சொல்ல சொல்லுதல்,ஆசிரியர்களே மாணவர்களுக்கு பரிசு கொடுத்தல்,  தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற சேக்கிழார் விழாவில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பெரியபுராணம் 4286 பாடல்களையும் பாடி பரிசு பெற்றது,காரைக்குடியில் நடைபெற்ற தமிழ்ச்சங்க போட்டியில் அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றது,மதுரை அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது,ஐக்கிய நாடுகள் சபை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவி காவியாவுக்கு பாராட்டு ,நோய் காக்க பள்ளி மாணவர்களின் (பிஞ்சுகளின் ) உண்டியல் உதவி,தமிழக அளவில் புதிய முறையில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களை நோக்கிய கல்வி பயணமாக நடத்தியது,காட்சி வழியாக தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களை   பெருந்தொடர் குறுந்தகடாக (கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் தயாரிக்கப்பட்ட) தொடர்ந்து 40 வாரங்களாக காண்பித்து அதனை மாணவர்களை மறுநாள் தொகுத்து கூற செய்து பதில் சொல்ல சொல்லுதல்,கணினி வழி கல்வி ,அபிராமி அந்தாதி,திருக்குறள் ஆகியவற்றை நடனம் வாயிலாக நாட்டியமாக ஆடுதல்,பிறந்த நாள் பாடல் புதிய முறையில் பாடி மாணவர்களை வாழ்த்துவதுடன் பிறந்த நாளுக்கு வழங்கப்படும் இனிப்புகள் சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்,எள்ளுருண்டை கொடுப்பதை (சுதந்திர தினம்,குடியரசு தினம் போன்றவற்றிற்கும் ) வழக்கமாக்கியது , தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஒளி ஏற்றுதல் விழா,மத்திய அரசின் போட்டிகளில் பங்குபெற செய்து சான்றிதழ்கள் பெற்றது, மத்திய அரசின் மின் வேதியியல் மையத்தின் அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்றது,CECRI  மையத்தில் பள்ளி தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் பாராட்டி பரிசு வழங்கியது,உண்டியல் எண்ணுவதற்கு தொடர்ந்து கோவில்களுக்கு சென்று சான்றிதழ் பெறும் நிகழ்வும் என பல நிகழ்வுகளை சாதனைகளாக சொல்லலாம்.


                                         

2013 அக்டோபர் மாதம் முதல் 2016 ஏப்ரல் மாதம் வரை பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடியவர்கள் :


மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள நிபுணர்களை பள்ளிக்கே வரவழைத்து குறிப்பாக தமிழக புள்ளியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப.,தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம்,கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர்,பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி ,திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம்,தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ் கோவன் , மத்திய அரசின் கல்பாக்கம்  முதன்மை அணு விஞ்ஞானி ஜலஜா மதன் மோகன், தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ். ,தேவகோட்டை துணை ஆட்சியர் திரு.ஆல்பி ஜான் வர்கீஸ் .IAS,தேவகோட்டை நகராட்சி தலைவர் திருமதி.சுமித்ரா ரவிகுமார்,அயர்லாந்தின் டுப்ளிங் மாகாண பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆராய்ச்சியாளர் குமார்,நடமாடும் அறிவியல் ஆய்வக மனிதர்"  சென்னையை சார்ந்த அறிவரசன்,மத்திய அரசின் காரைக்குடி  மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் ( CECRI) முதன்மை விஞ்ஞானி ( முனைவர் .ஜெயச்சந்திரன் ) மற்றும் 3 மத்திய அரசின் விஞ்ஞானிகள்,கலை வழி கற்றல் பயிற்சி அளிக்கும் திருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் குழுவினர்,தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி திரு.ராமசந்திரன் ,தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி திரு.கருப்பையா,JCI இன் சர்வதேச பயிற்சியாளர் பேரா .RM.ராமநாதன்,தேசிய வருவாய் வழி மற்றும் திறன் போட்டி  தேர்விற்கான மனத்திறன் கணக்கிற்கான சிறப்பு பயிற்சி" நடத்தும்திரு.ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரை பாண்டியன்,காரைக்குடி பறவைகள் ஆர்வலர் பிரசன்னா மணிவண்ணன்,மதுரை மண்டல பயிற்சியாளர் JC.தயானந்தன்,காரைக்குடியை சார்ந்த டாக்டர் பார்கவி மணிவண்ணன்,சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன்,மத்திய கிழக்கு பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகன்னநாதன் ,கோவில்பட்டி கல்வி நிறுவனங்களின் அதிபர் நாகஜோதி,சென்னை குணசேகரன் ,வேளாண்மை துறை அதிகாரிகள் மதுரை மண்டல அதிகாரி ஸ்ரீதரன் ,சிவகங்கை மாவட்ட அதிகரி இளங்கோ,திரு ரமேஷ்,காவல் ஆய்வாளர்,தேவகோட்டைமுதல்வர் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேரா . முனைவர் சந்திரமோகன் ,ஜெர்மன் நாட்டை சார்ந்த பெண் தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷினி ட்ரம்மர் ,திருமதி யோக லெட்சுமி ,முதல்வர்,அழகு மலர் பள்ளி,சிவகங்கை , LIC வளர்ச்சி அதிகாரி வினை தீர்த்தான் ,தேவகோட்டை நகராட்சி மேலாளர் திரு.பிச்சை மைதீன்,தேவகோட்டை LIC கிளையின் மேலாளர் திரு.மோகன சுந்தரம், வளர்ச்சி அதிகாரிகள் திரு.தமிழரசு,திரு.பெரியசாமி, தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் தமிழ் துறை தலைவர் பேரா . பழனி ராகுலதாசன்,திருக்குறள் ஆர்வலர் அமெரிக்காவை சார்ந்த அழகப்பா ராம் மோகன்,சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.அடைக்கலராஜ்,சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  உதவி தொடக்க கல்வி அலுவலர்திருமதி.லெட்சுமி தேவி, கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி,10 நாட்களில் ஹிந்தி சொல்லி தரக்கூடிய "பயிற்றுநர் மதுரை திரு.விஸ்வநாதன் தம்பியண்ணா ,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் திரு.சேதுராமன்,திரைப் பட  உதவி இயக்குனர் திரு.கரு.அண்ணாமலை,தேவகோட்டை வட்டாட்சியர் திருமதி .மங்களேஸ்வரி, வருவாய் உதவியாளர் திரு.ரமேஷ்,திருமதி .மங்களேஸ்வரி,VAO சந்திர சேகர்,வருவாய் ஆய்வாளர் திரு.மயில்வாகனன், கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழி ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தாமோதரன்,கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி தாளாளர் திரு. அகமது யாசின்,தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திரு.ஜெயபால் ,சென்னை வேல்ஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதன்மை முதல்வர் பூர்ண சந்திரன்,துபாய் ஈமான் கலாசார மைய மக்கள் தொடர்பு துறை செயலர் ஹிதயதுல்லா,தமிழக அரசின் சுகாதார துறையின் சிவகங்கை மாவட்ட தொழுநோய் மேற்பார்வையாளர்கள் திரு.சாகுல் ஹமீது , திரு.சந்தான கிருஷ்ணன்,தேவகோட்டை மருத்துவர் திரு.ஏழுமலை, திருமதி.பேரா . வீரலட்சுமி ,துறை தலைவர் ,தாவரவியல் துறை, NSS  ஒருங்கிணைப்பாளர் ,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி ,தேவகோட்டை,உட்பட பல்வேறு நிபுணர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி  புதிய அனுபவத்தை வழங்கியதுடன் அவர்களிடம் பேசியவர்களுக்கும் புதிய அனுபவம் கிடைத்ததாக கூறி செல்கின்றனர். 

பள்ளியின் சிறப்புகள் :




இசை ,நடனம் மூலம் புதுமை  கற்பித்தல்

                             இப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள்,அபிராமி அந்தாதி போன்றவற்றை இசையோடு நடனம் மூலம் புதிய முறையில் பல்வேறு கலைகளை கற்பித்து வருகிறார்கள்.கலைகளின் மூலம்  கற்கும் இளம் வயது மாணவர்கள் இது தொடர்பான வல்லுனர்கள் வரும்போது ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு  மாணவ,மாணவியர் கூட அவர்களிடம் மிக எளிதாக கேள்விகள் கேட்டு பதில் பெறுவதை பார்த்து,இது தங்கள் அனுபவத்தில் புதுமையாக உள்ளது எனக் கூறி வல்லுனர்கள்  வியப்பில் செல்கின்றனர். 




                               


பள்ளி பற்றிய சிறு தொகுப்பு

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இப்பள்ளி துவங்கப்பட்டது.                  

                               இப்பள்ளியில்  பின்தங்கிய சமுதாய   மாணவர்களின் கல்வி  மீது அக்கறை கொண்டு அவர்களை ஊக்கபடுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயில வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும்.   பள்ளி செயலர் திரு.AR.சோமசுந்தரம் அவர்கள்,கல்வி முகவர் .மீனாட்சி ஆச்சி அவர்கள் ஆவார்கள் .

நேரடியாக மாணவர்களை தேடி செல்லல்

                   எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அமைக்கப்பட்டது தான் பள்ளிக் கூடம்.தமிழக அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக சமுதயாத்தில்  மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிகுறவ சமுதாய இன மக்கள்,ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் ( ஊர்,ஊராய் சென்று குறி சொல்பவர்கள் ) சமுதாய மாணவர்கள் ,இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும்   அவர்களின் இருப்பிடம் தேடி சென்று கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கல்வியின்  புதிய அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி  அவர்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள்  என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்.

  தினம்தோறும் அனுபவ கற்றல் 

                            இப்பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்த சுழலிலும் மறக்காது.வாழ்க்கையின் என்றுமே மறக்க கூடாது என்ற நோக்கில் தான் கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளை பள்ளியிலும் ,களப்பயணமாக புத்தக திருவிழா,அஞ்சலகம்,வங்கி,நூலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தை புதுமையாக்கி வருகின்றார்கள் .மாணவர்களுக்கு புதிய ,புதிய அனுபவங்களை தினம்தோறும் கற்று கொடுத்து வருகிறார்கள் . 




மாணவர்களின் திறமைகளை ஊடகங்களின் வாயிலாக வெளிபடுத்துதல் 
                        இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை நாளிதழ்களில்,வார இதழ்களில் ,மாத இதழ்களில்,வானொலி,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக கட்டுரைகளாக ,கவிதைகளாக,ஓவியமாக ,கதைகளாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
            
                 மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கி விடமால் முழுமையான அறிவு பெற்றவர்களாக வளரவேண்டும் என்ற நோக்கில்தான் நடுநிலைப் பள்ளி அளவில் பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறோம் .இது தொடரும்.


லெ .சொக்கலிங்கம் ,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை .
சிவகங்கை மாவட்டம்.
செல்: 9786113160

பள்ளியின் நிகழ்வுகள் தொடர்பாக மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோரின் கருத்துகள் :




 சிறந்த மாணவிக்கான பரிசினை பெற்ற மாணவி தனலெட்சுமி பேசுகையில் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் சென்னை,மதுரை,திருச்சி என பல ஊர்களிலும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று 47 சான்றிதழ்களையும் , பல ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்ற மாணவி தனலெட்சுமி  தனது பல்வேறு போட்டி வெற்றிகளையும்,காவல் நிலையம்,வங்கி ,அஞ்சல் அலுவலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் பார்வையிட்டது , தோட்டக்கலை துறை பண்ணைக்கு சென்றது என தனது பல்வேறு அனுபவங்களையும்,தினமலர் ,நியூஸ் 7 சேனல் நடத்திய போட்டி,சுட்டி விகடன் போன்ற பத்திரிகைகளின் வழியாக பல ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதையும் ,தனது வெற்றிக்கு காரணமான இப்பள்ளியை வாழ்க்கையில் மறக்க முடியாது என்றும்,கண்டிப்பாக ஒரு நாள் இந்திய அரசின் உயர் பதவியான IPS பதவியை தனது லட்சியமாக கொண்டு அடைந்து பள்ளியில் வந்து மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்வேன் என்றும் உறுதியுடன் சொன்னார்.மேலும் தனது உயர் கல்விக்கு உதவியாக அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ள மதுரை ஜானகி அம்மாளுக்கும் ,முதல் வகுப்பு முதல்  இப்பள்ளியில் படிக்கும் தனக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கும் , தனது தாயார்,தந்தை ஆகியோர் கூலி வேலைசெய்த போதிலும், இதுவரை அருகில் இருக்கும் காரைக்குடிக்குகூட  செல்லாத எனக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு ஊர்களுக்கும் பல முறை செல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி மூன்று வருடங்களில் 47 சான்றிதழ்கள் பெறும் வகையில் அனைத்து போட்டிகளுக்கும் செல்ல வைத்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.தனக்கு கொடுத்த சிறந்த மாணவிக்கான பரிசினை தனது தாயார் கையால் வாங்க செய்து அதனை பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சி அங்கு இருந்த அனைவரையும் நெகிழ செய்தது.அவரது பேச்சில் கண்டிப்பாக அவர் தனது இலட்சியத்தை அடைவர் என்பது தெளிவாக தெரிந்தது.அவரது லட்சியம் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோமாக.
அதிகமான கேள்விகள் கேட்டதற்காக பரிசினை பெற்ற மாணவி பரமேஸ்வரி பிரியா விடை நிகழ்ச்சியில் பேசும்போது ,
                      நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இப்பள்ளியில் வந்து சேர்ந்தேன்.அப்போது முதல் பல அறிஞர்கள் ,இந்திய ஆட்சி பணியில் உள்ளவர்கள்,பல துறை வல்லுநர்கள் என அனைவரையும் நான் சந்திக்கும் வாய்ப்பும்,அவர்களுடன் கேள்விகள் கேட்டு பதில்கள் பெறும் வாய்ப்பும் கிடைக்க பெற்றேன்.பள்ளியின் ஆசிரியர்கள்  மற்றும் தலைமை ஆசிரியர் கொடுத்த ஊக்கத்தினால் தினமலர் நாளிதழில் பட்டசபை  போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் தேர்வானதுடன், முதன் முதலாக சென்னை செல்லும் வாய்ப்பும் , மீண்டும் தினமலரில் கனவு ஆசிரியர் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் தேர்வான ஐந்து பேரில் நடுநிலைப் பள்ளி அளவில் நான் தேர்வாகி எனது கட்டுரை அதனில் வெளியானது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.இந்த பள்ளியில் கேள்விகள் கேட்பதற்கு எனக்கு அதிகமான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தனர்.வருகின்ற அனைத்து அறிஞர்களிடமும் கேள்விகள் கேட்க சொல்லி ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியரும் என்னை அதிகமான அளவில் ஊக்கப்படுத்தினார்கள்.எனக்கு நல்ல பொது அறிவு வளர்ந்தது.இங்கு வந்தவர்கள் போல் நானும் வாழ்க்கையில் மிக பெரிய ஆளாக மாறி இப்பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது லட்சியமாக வேண்டும்.எனது படமும் ,பெயரும் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியானதை எனது 60,70 வயதுகளில் கூட என்னால் மலரும் நினைவுகளாக பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன்.என்னால் இந்த பள்ளி வாழ்க்கையை மறக்க முடியாது.என்று பேசினார்.

அதிகமான பாடம் சார்ந்த செயல்பாடுகளை செய்து வந்ததற்கான பரிசினை பெற்ற மாணவர் பரத்குமார் பேசும்போது ,
                        எனக்கு இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள் எல்லாமே பிடித்து இருந்தது.ஆரம்பத்தில் சுட்டி விகடன் தொடர்பான சுட்டி கிரியேஷன்ஸ் செய்து பழகி பின்பு பாடம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் எங்கள் வகுப்பு ஆசிரியர் சொன்ன உடனே செய்து கொண்டு வந்து விடுவேன்.பள்ளியின் வழியாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றதை பெருமையாக எண்ணுகின்றேன்.இதே போல் அடுத்து செல்லும் பள்ளியிலும் நான் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று சான்றிதழ்கள் பெறுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பேசினார்.

முத்தழகி ( குடு குடுப்பை பயன்படுத்தி குறி சொல்லும் சமுதாயத்தை சார்ந்த மாணவி ) பேசுகையில் ,
                                         எனக்கு இந்த பள்ளியை விட்டு செல்வது என்பதே வருத்தமாக உள்ளது.நான் வீட்டில் கூட சரியாக சாப்பிட மாட்டேன்.ஆனால்  பள்ளியில் எங்களுக்கு பிடித்த மாதிரி சாப்பாடு செய்கிறார்கள்.எனக்கு அரசின் சத்துணவு நன்றாக பிடித்து இருந்தது.ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியரும் தினமும் சத்துணவு நன்றாக உள்ளதா என்று கேட்பதுடன் எங்களுடன் சாப்பிட்டும் செல்வார்கள்.நானும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளேன்.நான் வரைந்த ஓவியங்கள் பல்வேறு பத்திரிகைகள் வந்ததுடன் எனது படமும் அவற்றில் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இவ்வாறு பேசினார்.

செந்தில்  ( குடு குடுப்பை பயன்படுத்தி குறி சொல்லும் சமுதாயத்தை சார்ந்த மாணவர்  ) பேசுகையில் ,
                                  எங்களுக்கு தினமும் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் பள்ளியில் பல்வேறு வகையான புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்வார்கள்.அதனில் இருந்து பேச்சு போட்டி,கவிதை போட்டி,கட்டுரை போட்டி,வாசிப்பு போட்டி ,கதை சொல்லுதல் போட்டி என பல்வேறு போட்டிகள் வைத்து அதன் மூலம் பரிசுகள் வாரம் தோறும் தருவார்கள்.இதில் நான் பரிசுகள் பெற்றது எனக்கு மிகுந்த சந்தோசத்தை தந்தது.தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு பேசினார்.


விடா முயற்சி செய்து வெற்றி பெற்ற ராஜேஸ்வரி : நான் இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் படித்து வருகின்றேன்.இப்போது 27 சான்றிதழ்கள் வைத்து உள்ளேன்.என்னுடைய வாழ்க்கையில் பள்ளி சார்பாக பல ஊர்களுக்கு போட்டிகளுக்கும் முதன் முறையாக சென்றது மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.மதுரை,திருச்சி,சென்னை போன்ற ஊர்களுக்கு இப்போது தான் முதன் முறையாக சென்று உள்ளேன்.6ம் வகுப்பு படிக்கும்போது  சுட்டி ஸ்டார்க்கான போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகவில்லை.ஆனால் மீண்டும் 7 ம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் விடாமுயற்சி செய்து அதே போட்டியில் கலந்து கொண்டு சென்னை சென்று பயிற்சியில் பங்கேற்றது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் ஆகும்.இந்த அறிய வாய்ப்பினால் தான் நான் இரண்டு முறை முதல் தடவையாக சென்னை செல்லக்கூடிய வாய்ப்பு நன்றாக இருந்தது.சுட்டி விகடன் போட்டியில் தனியார் பள்ளி மாணவர்கள்,பெரு நகரங்களில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல பேர் இருந்தபோதும்,பள்ளியில் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்து முதல் ஆளாக எழுந்து சென்று பெரிய கூட்டத்தின்முன்பாக பேசினேன்.அதனை கண்ட அனைவரும் என்னை பாராட்டினார்கள்.எனது தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.என் மகள் அனைவரின் முன்பாகவும் நன்றாக பேசினாள் என்று அனைவரிடமும் சென்று கூரி மகிழ்ந்தார்.அதுவே எனக்கு பெரிய சந்தோசத்தை கொடுத்தது .இந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்த பள்ளியினை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று பேசினார்.

இது வரை அதிகம் மேடைகளில் பேசாத மாணவி கார்த்திகா : நானும் முதல் வகுப்பு முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறேன்.எனது தாயார் எங்கள் பள்ளியில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.எனக்கு தந்தை இல்லை.நான் அதிகம் யாரிடமும் பேச மாட்டேன்.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நானும் இங்கு வந்த அனைவரிடமும் தைரியமாக கேள்விகள் கேட்டதுடன் அவர்கள் பேசியது தொடர்பாக எனது கருத்தினையும் அனைவர் முன்பாகவும் தைரியமாக எடுத்து கூறும் தன்னம்பிக்கை பெற்றுள்ளேன்.அதன் அடிப்படையில் தான் இப்போது இங்கு உங்கள் முன்பு வந்து பேசுகிறேன்.இந்த தைரியம் கிடைத்தது இந்த பள்ளியின் வழியாகத்தான்.நான் இந்த பள்ளியினை வாழ்நாளில் மறக்கமாட்டேன்.இங்கு இருந்து செல்வதே எனக்கு வருத்தமாக உள்ளது.என்று பேசினார்.


மாணவி தனலெட்சுமியின் தாயார் மீனாள்  பேசும்போது : எனது மகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பேரும் ,புகழும் பெற்று சான்றிதழ்களும் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நான் வீட்டு வேலை தான் பார்க்கிறேன்.எனது கணவர் கல் உடைக்கும் வேலைதான் பார்க்கிறார்.எனது மகள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும்.இந்த பள்ளியில் நல்ல உதவிகள் நிறைய  செய்து உள்ளனர்.நானும்,எனது மகளும்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை காரைக்குடியை கூட  தாண்டியது கிடையாது.ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னை வரை சென்று வந்துள்ளேன்.நான் வீட்டு வேலை பார்ப்பதால் என்னால் பல போட்டிகளுக்கு மகளை அழைத்து செல்ல முடியாது.பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்பாட்டில் ஆசிரியர்கள்தான் அழைத்து செல்வார்கள்.எனது பக்கத்து வீட்டில் உள்ள கமலா என்கிற பெண்ணுக்கு வங்கியில் எப்படி ATM  பயன்படுத்துவது என்று தெரியாது .எனது மகளை வங்கிக்கு அழைத்து சென்று பள்ளியில் பயிற்சி கொடுத்ததில்  இருந்து எனது மகள் பக்கத்து வீட்டு கமலா அக்காவுக்கு கற்று கொடுத்து ATM பயன்படுத்த தெரிந்துகொண்டார்.எனக்கு தெரியாத விஷயம் எனது மகளுக்கு தெரிந்து அதனை சொல்லி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பல்வேறு பத்திரிக்கைகளிலும்,சேனல்களிலும் எனது மகளின் படம் மற்றும் செய்தி வந்ததும் மகிழ்ச்சியாக உள்ளது.எந்த விதமான கட்டணமும் இல்லாமல் ,ஆசிரியர்களே பல நேரங்களில் போட்டிகளுக்கு எனது மகளை அவர்களது சொந்த செலவில் அழைத்து சென்றது எனக்கு கிடைத்த பெரிய வரமாகும்.அதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கண் கலங்கினார்.

மாணவி பரமேஸ்வரியின் தந்தை அய்யதேவன் பேசும்போது : எனது மகள் இந்த பள்ளிக்கு வரும்போது ஓரளவு பொது அறிவுடன் வந்து சேர்ந்தார்.ஆனால் இப்போது நன்றாக பேசக் கூடிய நிலையில் உள்ளார்.நல்ல அளவில் பொது அறிவு வளர்ந்துள்ளது.எங்கு வேண்டுமானாலும் தன்னம்பிக்கையுடன் சென்று வந்து விடுவார்.காவல் நிலையம் நான் கூட இது வரை சென்றது கிடையாது.ஆனால் அவள் வயதுக்கு காவல் நிலையம் தொடர்பாக பல தகவல்களை எங்களிடம் வீட்டில் வந்து சொன்னார்.எனக்கு ஆச்சிரியமாக இருந்தது.அது போன்று வங்கி ,கல்லூரி,அஞ்சலகம்,தோட்டக்கலை துறை பண்ணை என அனைத்தும் எந்த விதமான கட்டணமும் இல்லாமல் அழைத்து சென்று வந்து உள்ளனர்.பொது அறிவோடு நல்ல கல்வியையும் கொடுக்கும் இந்த பள்ளிக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.

அல்நிஸ்மா என்கிற மாணவியின் தந்தை மாலிக்  பேசும்போது : இந்த பள்ளியில் நான் எனது மகளை 6 ம் வகுப்பில் சேர்த்த போது எழுத ,வாசிக்க தெரியாமல் இருந்தார்.ஆனால் இப்போது நன்றாக எழுதுகிறார்.வாசிக்கிறார் .சத்துணவும் இங்குதான் சாப்பிடுகிறார்.சத்துணவு நன்றாக உள்ளது.பல தருணங்களில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எனது மகளுக்கு பல நன்மைகள் செய்து உள்ளனர்.ரூபெல்லா ஊசி போடும்போது நான் முதலில் மறுத்தேன்.பின்பு தலைமை ஆசிரியர் மற்றும் மருத்துவர் சொன்னதன் அடிப்படையில் ஊசி போட்டு கொண்டு எனது மகள் நன்றாக உள்ளார்.பெண் மருத்துவரை அழைத்து வந்து வருடம் தோறும் வளரிளம்பெண்களுக்கான அறிவுரை கூறுவது பள்ளி வயது பெண்களுக்கு நல்ல ஆலோசனையாக உள்ளது.இது வேறு எங்கும் இப்படி இல்லை.காசு கட்டி படிக்கும் பள்ளியில் கூட இப்படி இல்லை.எந்த விதமான கட்டணமும் இல்லாமல் பல்வேறு வாழ்க்கைக்கு உகந்த கல்வியை சொல்லி தரும் இப்பள்ளியில் எனக்கு தெரிந்த அனைத்து பெற்றோரிடம் சொல்லி சேர்க்க சொல்லுவ வருகின்றேன்.பள்ளிக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு பேசினார்.
 தலைமை ஆசிரியர் அனைவரின் முன்பாக பேசியதாவது : இந்த ஆண்டு பல்வேறுஆளுமைகள்  பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்று உள்ளனர்.அனைவரிடமும் எட்டாம் வகுப்பு மாணவிகள் அதிகமான கேள்விகள் கேட்டு பதில்கள் மற்றும் பரிசுகள் பெற்று உள்ளனர்.கேள்விகள் அதிகமாக கேட்கும்போதுதான் அறிவு அதிகம் வளரும்.அதனை நன்றாக செய்து உள்ளனர்.மேலும் ஆளுமைகள் பேசி முடித்த உடன் அதனை உள்வாங்கி ஒவ்வொரு மாணவரும் நன்றாக அவர்கள் பேசிய கருத்துகளை அப்படியே எடுத்து சொன்னது சிறப்பானது ஆகும்.இதனை பல ஆளுமைகள் பாராட்டி சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் காவல் நிலையம்,வங்கி,அஞ்சலகம்,தோட்ட கலை பண்ணை ,கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றபோதும் அதிகமான கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றது பாராட்டுதலுக்கு உரியது ஆகும்.இந்த மாணவர்கள் இன்னும் அதிகமான வெற்றிகளை அடைய வாழ்த்துவோமாக.எட்டாம் வகுப்பு முடித்து செல்லும் இவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் பல்வேறு நிகழ்வுகளை வெற்றிகரமாக மாற்றி கொள்ளும் வகையில் பள்ளியில் பயிற்சி அளித்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுக்கு எல்லா விதத்திலும் ஊக்கப்படுத்தி வரும் பெற்றோர்களுக்கும்,பள்ளி நிருவாகத்துக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்வதுடன் கட்டணம் எதுவும் இல்லாமல்  கல்வியில் மாணவர்களின் வாழ்க்கையில்  முன்னேற்றம் ஏற்படும் வகையில் பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வரும் இப்பள்ளியில் மாணவர்ளை சேர்க்க இங்குள்ள பெற்றோரும் அதிக அளவில் மற்ற பெற்றோரிடம் சொல்லி ஆவண செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்று பேசினார்.



No comments:

Post a Comment