செயல்பாடுகள் மூலம் கற்றல்: தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு மூளைத் திறன் மேம்பாட்டு பயிற்சி
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தங்களது மூளையை சுறுசுறுப்பாகவும் சிந்தனைத் திறனை மேம்படுத்தியும் வைத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவி ரித்திகா வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் முனைவர் உஷா, குழந்தைகளின் மூளைச் செயல்திறனை மேம்படுத்தும் பல்வேறு பயிற்சிகளை செயல்பாடுகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார். மேலும், புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் இடம்பெறும் பாடல்களை செயல்பாடுகளுடன் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதையும் மாதிரி வகுப்பின் மூலம் எடுத்துரைத்தார்.
வாசிப்பு இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'உருளைக்கிழங்கு', 'பாப்பாவின் பாடம்' உள்ளிட்ட கதைகளை அசைவுகள் மற்றும் செயல்பாடுகளுடன் மாணவர்களுக்கு சுவாரஸ்யமாக விளக்கினார். அதேபோல், ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் வாசிப்பு இயக்கத்தின் பல்வேறு செயல்பாடுகளையும் செய்து காண்பித்தார்.
சிறுவயதிலிருந்தே குழந்தைகள் விளையாட்டின் மூலம் எளிதாகவும் மகிழ்ச்சியுடனும் கற்றுக்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கப்பட்டன. பயிற்சியில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தாங்கள் கற்றவற்றை செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தினர். விரிவுரையாளர் முனைவர் உஷாவுடன் மாணவர்கள் அன்போடும் உற்சாகத்தோடும் கலந்துரையாடி பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களும் தங்களது பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று தெளிவு பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் சிறப்பாக செய்திருந்தார்.
நிறைவாக பள்ளி மாணவி ஹாசினி நன்றியுரை வழங்கினார்.
படவிளக்கம்:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் முனைவர் உஷா, குழந்தைகளின் மூளைச் செயல்திறனை மேம்படுத்தும் பயிற்சிகளை செயல்பாடுகள் மூலம் செய்து காண்பித்தார். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=iej3txdHwPw
No comments:
Post a Comment