Wednesday, 29 November 2017

என்னத்த சொல்ல???

 

 

முள்மேல் நடக்கும் ஆசிரியர்கள் 

பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளுடன் பேசுகிறார்களா???

                                            இன்று பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பள்ளி முடிந்து வந்த பிறகு அவர்களிடம் பேசுவது கிடையாது.காரணம் என்ன ? ஓரளவு வசதியான வீடுகளில் அப்பாக்கள் பெரும்பாலும் செல் போனில் தோண்டி கொண்டு தங்களது பொழுதை கழித்து விடுகின்றனர்.அம்மாக்களோ பெரும்பாலும் சீரியலில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு தங்களது நேரத்தை கழித்து விடுகின்றனர். ஓரளவு சுமாரான பொருளாதாரம் உள்ள குடும்பங்களிலோ அப்பாக்கள் சுமார் மாலை 3 மணிக்கு பிறகு சரக்கு சாப்பிட்டு விட்டு படுத்து விடுகிறார்கள்.அம்மாக்களோ சண்டை போடுவதிலும்,தொலைக்காட்சி பார்ப்பதிலும் பொழுதை கழித்து விடுகின்றனர்.
                               பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி முடிந்து வரும் தனது குழந்தையிடம் , இன்று பள்ளியில் என்ன நடந்தது? யாருடன் சாப்பிட்டாய்? யாரெல்லாம் உனது நண்பர்கள்? என்ன சொல்லி கொடுத்தார்கள் ? என்று பொதுவாக பேசக்கூட நேரமில்லாமல் உள்ளனர்.இதுவே மாணவர்களின் மன அழுத்தத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.அவர்கள் யாரிடம் சென்று தனது மன அழுத்தத்தை சொல்வார்கள் .பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் உடனடியாக மீண்டும் டியூஷன் செல்ல வேண்டும்.மீண்டும் வீட்டுக்கு வந்த உடன் அப்பா செல்லபோனில் இருப்பர்.அம்மாவோ சீரியல் பார்த்து கொண்டு இருப்பார்.அதுவும் எதிர்மறை சிந்தனை உடைய சீரியல்களை பார்த்து கொண்டு இருப்பார்கள்.அவர்களுடன் குழந்தையும் அமர்ந்து பார்த்து அதுவும் எதிர்மறையான எண்ணங்களுடன் வளர ஆரம்பித்து விடுகிறது.பள்ளிக்கு சென்ற உடன் ஆசிரியரை பார்த்த உடன் அதற்கு சீரியலில் வரும் வில்லிகள்,வில்லன்கள் போல் கற்பனை செய்து கொள்கிறது.என்னத்த சொல்ல???    

                                நாங்கள் பள்ளியில் இருந்து பல தகவல்களை மாணவர்களுக்கு எழுதியும் அனுப்புகிறோம்.சொல்லியும் விடுகிறோம்.ஆனால் பல பெற்றோர்கள் அதற்கு எந்த பதிலும் சொல்வதில்லை .பிறகு மூன்று,நான்கு முறை போன் செய்ததற்கு பிறகு பள்ளிக்கு வந்து சார் ,நீங்கள் சொல்லும் இந்த விஷயத்தை என் பிள்ளை சொல்லவே இல்லைங்க சார் என்று சொல்கிறார்கள்.இது யாருடைய தவறு? பிள்ளை பள்ளி முடிந்து வந்த உடன் என்ன நடந்தது பள்ளியில் என்று கேட்காமலே போவதுதான் இதற்கு காரணம்.பிறகு திடீர் என்று வந்து எனது பிள்ளை படிக்கவில்லை,சரியாக இல்லை என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?  என்னத்த சொல்ல??????
 
                                  என்னுடைய ஆசிரிய பணியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவியை எனது பள்ளியில் இருக்கும் ஆசிரியர் நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டித்து உள்ளார்.உடனே அடுத்த நாள் அந்த மாணவியின் தாயர் என்னிடம் வந்து அந்த ஆசிரியருக்கு புள்ளை இருக்க இல்லையா ? என்று வேகமாக கேட்டார்.நான் அவர்களை அமர செய்து ,பிறகு நிதானமாக கேட்டேன்.புள்ளை இருப்பதற்கும்,உங்கள் பிள்ளையை கண்டித்ததற்கும் என்ன சம்பந்தம்  இருக்கிறது ? உங்கள் பிள்ளைக்கும்,அந்த ஆசிரியர்க்கு ஏதாவது முன் விரோதம் இருக்கிறதா ? இல்லையே.உங்கள் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் சிரமம் எடுத்து நன்றாக சொல்லி கொடுக்கின்றார்.உங்கள் குழந்தை நன்றாக படித்தால் அவருக்கு சந்தோசம்.ஆனால் உங்களுக்கு பிற்காலத்தில் நன்மை.மகிழ்ச்சி.உங்கள் குழந்தைக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.நீங்கள் கண்டித்தது ஏன் என்று கேட்டீர்களா? அதையும் கேட்டு விட்டு வாருங்கள்.இனிமேல் இது போன்று வராதீர்கள் என்று அன்புடன் சொல்லி அனுப்பினேன்.அவர்களும் திருப்தியுடன் சென்றனர்.இரண்டு நாள் கழித்து மீண்டும் அந்த வகுப்புக்கு சென்று பார்க்கும்போது ,அந்த மாணவியின் தாய் வந்து சென்ற பிறகு அந்த குழந்தை சுத்தமாக ,சரியாக எழுதாமல் வருகிறது என்பது தெரிந்தது.( அம்மா வருவதற்கு முன்பு வரை நன்றாக எழுதி வந்த குழந்தை ,அம்மா வந்து சென்ற பிறகு நமக்கு அம்மா இருக்கீர்கள் .படிக்காமல் வந்தால் டீச்சர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.என்று நம்பிக்கைக்கு வந்துவிட்டார் அந்த மாணவி ) என்னத்த சொல்ல??????
                                            பள்ளிக்கு வரும் ஒரு சில பெற்றோர் சொல்லும் பதில் .குழந்தை ஆசிரியரை பார்த்து பயப்படுகிறது என்று சொல்கிறார்கள்.நான் கேட்பேன் ,ஏன் ஆசிரியர்களை பார்த்தால் பேய்,பூதம் போல் இருக்கிறதா? என்று.பெற்றோரை விட மாணவர்கள் அதிகமாக பள்ளி நேரத்தில் ஆசியர்களுடன் இருக்கும்போது அவர்கள் ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும்? காரணம் என்னவெனில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர்.வீட்டில் சாதரணமாக சிறிது கண்டிப்புடன் நடந்தாலே பெற்றோரிடம் குழந்தைகள் கோபப்படுகின்றனர்.அந்த சூழ்நிலையில் பள்ளியில் மாணவர்களுக்கு சில நேரங்களில் கண்டிப்புடன் நடக்கும் ஆசிரியர்கள் மீது கோபம் வருவது இயற்கை.அதனை சரி செய்வது பெற்றோரின் பணியாகும்.ஆனால் பெரும்பாலான பெற்றோர் எனது பிள்ளை இப்படி சொல்கிறது,ஆசிரியர் செய்தது சரியா ? என்று கேட்கின்றனர்.அதற்கு காரணம் அவர்கள் தினம்தோறும் பார்க்கும் எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் சீரியல்கள் ஒரு காரணமாகவும் அமைகிறது.அடுத்த காரணம் ,வீட்டில் பிள்ளைகளிடம் பெற்றோர் இயல்பாக பேசாமல் போவதுதான் முக்கியமாகும்.அவ்வாறு  பேசினால் பல மன அழுத்தங்கள் எளிதாக .குறையும் .
                          எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது.எனது அம்மா என்னி\டம் பல மணி நேரம் பள்ளி முடிந்த வந்த உடன் இயல்பாக பேசி கொண்டு இருப்பார்கள்.அப்போது சீரியல் இல்லை.செல் போனே இல்லை.டியூஷன் எதுவும் கிடையாது.இது போன்ற தவறான முடிவுகள் எடுக்கும் சமுதாயமாகவும் இல்லை.பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடன் ஒரு டியூஷன்.வீட்டுக்கு வராமலே பல டியூஷன்.காலையில் 5.45 மணிக்கு ஆரம்பிக்கும் டியூஷன் பிறகு இரவு 8.00 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.இதில் எங்கு பேச நேரம் உள்ளது? இதுவே தவறான கல்வி முறை ஆகும்.
                                           இதற்கு என்னதான் வழி ? ஒரேவழிதான்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும்.பள்ளியை மட்டுமே குறை கூறக்கூடாது.ஆசிரியர்களும் மாணவர்களின் நல்லதுக்குதான் எல்லாம் செய்கிறார்கள் என்பதை பெற்றோர் எடுத்து சொல்ல வேண்டும். மொத்தத்தில் பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே நாம் வெற்றியடைய வேண்டும்.



No comments:

Post a Comment