Wednesday, 22 April 2020

 ஆளுமைகளுடனான அனுபவம் 

மத்திய  அரசின் சுங்கத்துறை  துணை தலைவர் , திருக்குறள் வித்தகர் ராஜேந்திரன் IRS அவர்களுடன் பழகிய அனுபவம்




பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளி தொடர்பாக ராஜேந்திரன் IRS அவர்களின் பாராட்டு வரிகள் : 

 உலக அரங்கில் வெற்றி நடை போடும் சமுதாயத்தை உருவாக்கும் முனைப்பில்  செயல்பட்டு வருகின்றது சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி .  இங்கு பயிலும் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஊக்கத்தோடு திரு.லெ . சொக்கலிங்கம் அவர்களது சீரிய தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது.

             மாணவர்கள் மனதில் உறுதியும் , அறிவில் தெளிவும் அவர்களின் சொல், செயல் இரண்டின்  மூலமாக வெளிப்படுகின்றது.

                 மாணவ , மாணவியர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் திறன் படைத்தவர்களே . அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையை இனம் கண்டு,  அவர்களை சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருக்கும் ஆளுமைகளைக் கொணர்ந்து அவர்களுடன் கலந்துரையாட செய்வதால், மாணவ , மாணவியர்கள் கனவு  மலர்கிறது.  எதிர்காலத்தில் அது சிறந்த குடிமகனாக மாறி , அறமும், அன்பும் ,பொருளும் அடிப்படையாகக் கொண்ட சமுதாயம் மலர வழி வகுக்கும் . 

              "மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" -  குறள் 

                                                   வாழ்த்துகள்!!

 C. Rajendiran,  IRS,
 Vice-chairman,
  Settlement Commission,
 Customs,Central excise,Service tax,
 Chennai.

      ஆளுமைகள் உடனான அனுபவத்தில்  மத்திய  அரசின் சுங்கத்துறை  துணை தலைவர் , திருக்குறள் வித்தகர் ராஜேந்திரன் IRS அவர்களுடன் பழகிய   இனிமையான அனுபவம்.

முதல் அறிமுகம் - புதுமையான  அனுபவம் :

                                   மதிப்பிற்குரிய   ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்களை எனக்கு தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர்  திரு சந்திரமோகன் அவர்களின் மூலமாக அறிமுகமானார்கள் .திரு சந்திரமோகன் ஐயா அவர்கள் என்னை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து நாளை    காரைக்குடிக்கு IRS ஒருவர் வர  இருக்கின்றார் .அவர் சென்னையில் சுங்க இலாகாவில் பணியாற்றுகிறார்.  நீங்கள் வேண்டுமானால் உங்கள் பள்ளிக்கு வருகை தர கேட்டுப் பாருங்கள் என்று கூறினார் . கல்லூரி முதல்வரிடம் தொலைபேசி எண் பெற்று  நானும் ராஜேந்திரன் IRS அவர்களை தொலைபேசியில் அழைத்து ஐயா அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். அப்போது அய்யா அவர்கள் , மறு  நாள் தேவகோட்டையில் ஒரு திருமணம் இருப்பதாகவும் ,திருமணத்தை முடித்துவிட்டு நேரம் இருந்தால் உங்கள் பள்ளிக்கு வந்து செல்கிறேன் என்றும் என்னிடம் தெரிவித்திருந்தார்.அன்று  மாலையில் மீண்டும் போன் செய்தபோது  உங்க பள்ளிக்கு என்னால வர முடியுமா என்று தெரியவில்லை, ஏனென்றால் நான்  தேவகோட்டையில் திருமணம் முடிந்தவுடன் காரைக்குடிக்கு உடனடியாக மேல்நிலை  பள்ளிக்கு வருவதாக ஒப்புதல் அளித்து உள்ளேன்.  நான் பொதுவாக கல்லூரி மாணவர்களிடம் தான் பேசி உள்ளேன்.மேல்நிலை பள்ளி மாணவர்களுடனும் பேசி உள்ளேன்.நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் இளம் வயது மாணவருடன் நான் எப்படி பேசுவேன் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன். ஆதலால் நேரம் கிடைத்தால் , வாய்ப்பு கிடைத்தால் பார்க்கின்றேன். நேரமின்மையின் காரணமாக என்னால் வர இயலுமா  என்று  தெரியவில்லை என்று  தெரிவித்து விட்டார்கள். மீண்டும் மறுநாள் காலையில்   ஏற்கனவே முதல் நாள் பேசியதன்  அடிப்படையில் இயல்பாக அவர்களிடம் பேசினேன். பேசும்போது ,  அவர்களும் வாய்ப்பை பொறுத்து நானே தங்களை அழைக்கின்றேன் என்று கூறினார். நானும் பள்ளியில்  இயல்பாக எனது பணியை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.சுமார்  காலை 8 .45 மணி அளவில் ராஜேந்திரன் IRS அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து , சொக்கலிங்கம் நான் ரெடியாக இருக்கிறேன். உங்கள் பள்ளிக்கு வருகின்றேன், எனது கார் திருமணத்திற்கு வந்தவர்களை பேருந்து நிலையம் வரை விட சென்று இருக்கிறது,  வந்து என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினார்கள். எங்களது பள்ளியில் இருந்து  3 அல்லது 4 நிமிட பயண  தூரத்தில் அவர்கள்  திருமண மண்டபத்தில் இருந்தார்கள். 

சட்டை - பேண்ட்  - பெட்டி கலர் சொல்லி அறிமுகம் :


              நான் இதுவரை ஐயாவை பார்த்தது கிடையாது . தொலைபேசி வழியாக முதல் நாள் இரண்டு முறை பேசியது மட்டுமே.நிகழ்வு நடக்கும் நாளன்று ஒருமுறை பேசியது அவ்வளவுதான். எனக்கு அவரை பரிச்சயம் தொலைபேசியின் வழியாக மட்டுமே. ராஜேந்திரன் IRS அவர்களே என்னிடம் தான் இந்த கலர் சட்டை அணிந்து இருப்பேன், கையில் இந்த கலர் பெட்டி வைத்திருப்பேன் என்று சொல்லி தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்கள். நானும் எனது  பைக்கில் கிளம்பி சென்றேன். மிக பெரிய ஆளுமையை வரவேற்க செல்வது தெரியாமலேயே சென்றேன் என்பது உண்மை. ராஜேந்திரன் IRS ஐயா அவர்களை திருமண மண்டப வாசலில் சந்தித்தேன். தொலைபேசியில் பேசி என்னை அடையாளம் கண்டுபிடித்து எனக்கு கை காண்பித்தார். பின் எனது  வண்டியில் ஏறி அமர சொன்னேன் .வண்டியில் ஏறி அமர்ந்தார். 


 எளிமையின் மொத்த உதாரணம் :

                   ராஜேந்திரன் IRS அவர்கள் எனது பைக்கில் ஏறி அமர்ந்தவுடன் என்னிடம் கேட்டார்கள், சொக்கலிங்கம் , நான் என்ன பதவியில் இருக்கிறேன் என்று தெரியுமா என்று கேட்டார்கள். ஐயா எனக்கு தங்களை பற்றி சந்திரமோகன் ஐயா அவர்கள் சுங்க இலாகாவில் பணி புரிவதாக கூறினார்கள்.அது மட்டுமே தெரியும் என்று கூறினேன்.அவர் கூறியது சரிதான், இருந்தாலும்,  நான் சுங்க இலாகாவில் வைஸ் சேர்மன் ஆக பணியாற்றி வருகின்றேன்.  அது இந்திய அரசாங்கத்தின்  பெரிய பதவிகளில் ஒன்று.  அந்த பதவியில் இருக்கும் காரணத்தினால் நான் வெளியே வந்தால் காரில் தான்  செல்வேன்.  அது போன்று பதவியில் இருக்கும் நான் உங்களுடன் பைக்கில் வருகின்றேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  என்று கேட்டார்கள்.நானோ  மிக இயல்பாக கூறினேன், என்னிடம்  பைக்தான்  இருக்கின்றது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக தான் வந்தேன் என்று கூறினேன். அப்போது அன்னார் அவர்கள் என்னிடம் சொன்ன பதில்தான் மிக அருமை.இதுதான் எளிமை. வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் வாழ பழகி கொள்ள  வேண்டும்.அதற்கு உதாரணம் எனது வாழ்க்கை என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.  தாங்கள் பைக் இல்லாமல் நடந்து செல்ல வேண்டும் என்றாலும் நான் வர தயாராக இருப்பேன் என்று கூறி , நெகிழ வைத்து விட்டார்கள். 

 ஆளுமையை வியப்பில் ஆழ்த்திய மாணவரின் பதில் : 

                       அய்யாவும், நானும் பள்ளிக்கு வந்து  காலை வழிபாட்டு கூட்டத்தை முடித்து விட்டு, 45 நிமிடம் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்கள். அந்த நிகழ்வில் எங்களது வட்டார கல்வி அதிகாரி திருமதி.லெட்சுமி தேவி அவர்களும் கலந்து கொண்டார்கள்.  ஐயா அவர்கள் எங்கள் பள்ளிக்கு வரும்போது என்னிடம் சொன்னது,  நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மிக இளம் மாணவர்கள்,  நான் என்ன பேசப் போகிறேன் என்பதும், நான் பேசுவது அவர்கள் எப்படி உள் வாங்கிக் கொள்வார்கள் என்றும்  தெரியவில்லை என்று கூறினார்கள். அப்பொழுது நான் கூறினேன், அய்யா எங்கள் பள்ளி மாணவர்களிடம் உள்வாங்குவது நன்றாக இருக்கும். தங்களிடம் உள்வாங்கிய கருத்துக்களை மீண்டும் அவர்கள் கூறக்கூடிய வகையில் நாங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம் என்று தெரிவித்தேன். அய்யா அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடும்போது , சில கேள்விகளை மாணவர்களிடம்  கேட்டார்கள்.குறிப்பாக .மாணவர்களை நோக்கி, வேலையில்  எது பெரிய வேலை என்று கேட்டார்.அப்போது கோட்டையன் என்கிற மாணவர், நாம் பார்க்கும் வேலை நமக்கு பிடித்து இருந்தால் அதுதான் நமக்கு பெரிய வேலை ஆகும் என்று சொன்னார்.அதனை ஆமோதித்து வாழ்த்து தெரிவித்த துணை தலைவர் தொடர்ந்து பேசும்போது ,நான் கேட்ட கேள்விக்கு மாணவர்கள் தைரியமாக எழுந்திருத்து அவர்களுடைய  மனதில் பட்டதை பதிலாக சொன்னார்கள். இது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த சமுதாயத்தை தான் நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் இதை உருவாக்கி வருகின்றீர்கள். மாணவர்கள் மிக அருமையாக இருக்கின்றார்கள் என்று என்னிடம் பாராட்டு தெரிவித்தார்கள். 

சில கிலோமீட்டர் நடந்தே சென்று படித்த அனுபவம் :


                  அன்னார் அவர்கள் இளமை காலத்தில் குடும்பம் சுமாரான நிலையில் இருந்து படித்ததாகவும் , கிராமத்தில் இருந்து  சுமார் மூன்று ,நான்கு கிலோமீட்டர் நடந்தே சென்று மேல்நிலை வகுப்புகள் படித்ததாகவும் ,கல்வியின்  மூலமே வாழ்வில் நல்லதொரு பணியில் வாழ்ந்து வருவதாகவும் , திருக்குறளை அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று ,அதனை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.அன்னார் அவர்கள் வாட்ச் (WATCH) என்கிற வார்த்தையில் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி அதன் மூலம் எளிமையான வாழ்க்கைக்கு தேவையான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்து சொன்ன விதம் அருமை. அதன்  பிறகு மாணவர்கள் உள்வாங்கிய கருத்துக்களைச் சொல்லும் பொழுது மிகவும் மகிழ்ந்து விட்டார்கள். மீண்டும் மணி ஆகிவிட்டது நான் நேராக காரைக்குடியை நோக்கி சென்று அடுத்த பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று விரைவாக கிளம்பினார்கள் . அவருடைய கார் வந்துவிட்டது. காரில் கிளம்பி ஐயா சென்றுவிட்டார்கள். 

 மாணவர்களுக்கு பரிசு அளித்தல் - அன்பான சந்திப்பு 

               மாலையில் என்னை காரைக்குடியில் தங்கியிருக்கும் அறைக்கு வரச் சொல்லி இருந்தார்கள். நானும் அங்கு சென்றேன் . சென்ற பொழுது மிகவும் பிரியமாக நடந்து கொண்டார்கள். நல்ல சமுதாயத்தை உருவாக்கி வருகிறார்கள். நன்றாக செயல் படுத்திவருகிறீர்கள். இன்று  காரைக்குடியில் பள்ளியில் நடந்தநிகழ்வில்  கூட நான் ஆசிரியர்களிடம்  சில கேள்விகள் கேட்டேன். அவர்களும் பதில்கள் சொன்னார்கள் .அவர்கள் கூறிய பதிலும் உங்கள் பள்ளியில் மாணவர்கள் தெரிவித்த பதிலும்  மிக அருமையாக இருந்தது .மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லுங்கள் . மிக அருமையான பதில் சொல்லிய  மாணவர்களுக்கு என்னுடைய சார்பாக பரிசுகளை அளியுங்கள் என்று தெரிவித்ததுடன் ,   என்னிடம் அப்போதே   பரிசுகளையும் கொடுத்துவிட்டார்கள் . நானும் மறுநாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் பரிசுகளை கொடுத்துவிட்டேன்.மாணவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

மறக்கமுடியாத நட்பு :
 
              மீண்டும் மறு நாளும், அதன் பிறகு தொடர்ந்து என்னிடம் தொடர்பில் இருக்கின்றார்கள். இந்தியாவின் ஒரு மிகப் பெரிய பதவியில் இருக்கும் ஐயா அவர்கள் -  திருக்குறள் வித்தகர் -  திருக்குறளில் மிகப்பெரிய சாதனைகளை செய்து அதில் அதில் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்து உள்ள  அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்ததும், எங்களுடன் நட்புறவில் இருந்ததும் , மாணவர்களுடன் கலந்துரையாடியதும் ,  எங்கள்  வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. மிகவும் அன்பாக, இயல்பாக, அருமையாக ,எங்களுடன் நடந்துகொண்டார்கள். மீண்டும் பலமுறை அவர்களுடன் பேசி உள்ளேன்.  ஊக்கப்படுத்தும் விதத்தில் என்னிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள். 

           இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்  உள்ளங்களுக்கும், அன்னாரை அறிமுகப்படுத்திய கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

நன்றி கலந்த அன்புடன் 

லெ . சொக்கலிங்கம்,
 தலைமையாசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி,
 தேவகோட்டை.
 சிவகங்கை மாவட்டம்.
 8056240653 



ராஜேந்திரன் IRS அவர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய வீடீயோக்களை காணலாம் :
 https://www.youtube.com/watch?v=bHhiq2dq3gs&t=21s

 https://www.youtube.com/watch?v=M7WyeEO50YY&t=3s

 https://www.youtube.com/watch?v=OfCc-wxfLrw&t=20s

 வலைத்தளம் வழியாகவும் நிகழ்வுகளை காணலாம் :
 https://kalviyeselvam.blogspot.com/2017/12/blog-post_59.html#more



 


No comments:

Post a Comment