Monday, 24 February 2020

தமிழக அரசு  பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட  பள்ளி மாணவர்கள் 

 





 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி  மாணவா்கள் அது தொடா்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
            பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்து அன்றைய தினம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
                        அதன்படி  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களும்,ஆசிரியர்களும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட விவரம் வருமாறு :
அதன் விவரம்: ‘இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்தவொரு குழந்தையையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.
எனது கவனத்துக்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவா்கள் என உணா்ந்து அவா்களின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.
குழந்தைத் திருமணத்தை நிறுத்த... குழந்தைத் திருமணம் பற்றி தெரிய வந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

படவிளக்கம்  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி  மாணவா்கள் அது தொடா்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


மாநில பெண் குழந்தைகள் தினம் - உறுதி மொழி வீடியோ

 https://www.youtube.com/watch?v=wXKcZQu3hrE

No comments:

Post a Comment