Friday, 21 August 2026



வங்கிக்கு களப்பயணம் சென்ற பள்ளி மாணவர்கள்

ஏ டி எம்  கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?  நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்

ஏ.டி.எம்., யு.பி.ஐ. உள்ளிட்ட வங்கி சேவைகளை நேரில் கற்றறிந்தனர்






தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் ஏற்பாட்டில் தாழையூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வங்கி கிளை மேலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். வங்கி அலுவலர்கள் பாண்டியராஜன், கண்ணன், உதயசூரியன் ஆகியோர் மாணவர்களுக்கு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்து விளக்கினர்.

வங்கியில் உள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் மாணவர்களை நேரடியாக அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலர்கள் எடுத்துரைத்தனர். பணம் செலுத்தும் படிவம், பணம் எடுக்கும் படிவம், காசோலை தொடர்பான படிவங்கள், நகைக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வங்கி நடைமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், ஏ.டி.எம். இயந்திரத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, ஏ.டி.எம். அட்டை தொடர்பான ரகசிய தகவல்களை பிறரிடம் தெரிவிக்கக்கூடாது, அட்டை தொலைந்தால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்ள வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

ஏ.டி.எம். அட்டை இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

மாணவர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கார்ட்லெஸ் / யு.பி.ஐ. கேஷ் வித்ட்ராவல் வசதி உள்ள ஏ.டி.எம். மூலம் அட்டை இல்லாமல் பணம் எடுப்பது குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏ.டி.எம். திரையில் ‘யு.பி.ஐ. கேஷ் வித்ட்ராவல்’ அல்லது ‘கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல்’ வசதியைத் தேர்வு செய்து, தேவையான தொகையை உள்ளிட வேண்டும். பின்னர் திரையில் தோன்றும் கியூ.ஆர். குறியீட்டை மொபைல் போனில் உள்ள யு.பி.ஐ. செயலி மூலம் ஸ்கேன் செய்து, பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்த்து யு.பி.ஐ. பின் எண்ணை உள்ளிடுவதன் மூலம் பணம் எடுக்கும் முறையை மாணவர்களுக்கு விளக்கினர்.

வங்கி உதவியாளர் மேனகா, ஏ.டி.எம். செயல்பாடுகளை மாணவர்களுக்கு நேரடியாக செய்து காண்பித்தார். வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு பணம் அனுப்புதல் மற்றும் யு.பி.ஐ. மூலம் பணம் பெறுதல் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் மாணவர்கள் விளக்கம் பெற்றனர்.

வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்களிடம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். அவர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் வங்கி அலுவலர்கள் தெளிவான பதில்களை வழங்கினர்.

பள்ளிப் பருவத்திலேயே வங்கி சேவைகள், பணப் பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் பணப் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் களப்பயணம் அமைந்தது. பாடப்புத்தக அறிவுடன் வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை அறிவையும் மாணவர்களுக்கு வழங்கிய இந்த முயற்சி பயனுள்ளதாக அமைந்தது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஆர்த்தி, சிவரஞ்சனி செய்து இருந்தனர்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் ஏற்பாட்டில் பாரத ஸ்டேட் வங்கிக்கு களப்பயணம் மேற்கொண்டனர். வங்கி கிளை மேலாளர் லோகநாதன் தலைமையில் அலுவலர்கள் பாண்டியராஜன், கண்ணன், உதய சூரியன்  உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வங்கி சேவைகள் குறித்து விளக்கினர். வங்கி உதவியாளர் மேனகா ஏ.டி.எம். செயல்பாடுகளை மாணவர்களுக்கு நேரடியாக செய்து காண்பித்தார்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=AtEWlhfk5RQ


No comments:

Post a Comment