Sunday, 31 May 2026

பொதுமக்களின் நலன் கருதி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – பயணிகள் கோரிக்கை

திருச்சி:

திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் (பஞ்சப்பூர் பேருந்து நிலையம்) செயல்பாட்டிற்கு வந்த பிறகு, அங்கு நேரில் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை அடைய 25 நிமிடங்களுக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நேர விரயமும், எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்திய பிரதமர் உள்ளிட்ட பலர் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைத்து, எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், திருச்சி மாநகரிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களும் பேருந்துகளும் தினமும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு சென்று வருவதால் அதிக அளவில் எரிபொருள் வீணாகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பயணத்தின் போது சந்தித்த கார் ஓட்டுநர் ஒருவர், மாத்தூர் ரவுண்டானா அருகிலுள்ள பைபாஸ் சாலைப் பகுதியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பு சதுர அடி நிலத்தின் விலை ரூ.200 அளவில் இருந்ததாகவும், தற்போது அது ரூ.4,000 வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், சிலரின் நலனுக்காகவே இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதாக பொதுமக்களிடையே கருத்து நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தாங்கள் பயணித்த பேருந்தின் நடத்துநரும், தேவையில்லாமல் கூடுதல் தூரம் இயக்கப்படுவதால் எரிபொருள் செலவு மற்றும் நேர விரயம் அதிகரிப்பதாக தெரிவித்ததாக பயணிகள் கூறுகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன், அரசின் நிதி சிக்கனம் மற்றும் நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்து, மீண்டும் மத்திய பேருந்து நிலையத்தை முக்கியப் பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களின் நலன் கருதி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment