Thursday, 1 December 2016

 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்

அறிகுறியே இல்லாத நோய் எய்ட்ஸ் நோய் 

 எய்ட்ஸ் பாதிப்பு அதிக அளவில் மனிதர்கள் இடம்பெயரும் இடங்களில் காணப்படுகிறது 

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆற்றுப்படுத்துனர் தகவல் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது.


                                   விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கி பேசுகையில் ,மாணவர்கள்  அனைவரும் வாழ்வில் இளம் வயதிலேயே உயர்வான இலக்குகளை நிர்ணயித்து கொள்ளுங்கள்.நல்ல தொடுதல்,கெட்ட தொடுதல் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.அப்போதுதான் உங்களை நீங்கள் தக்க முறையில் பாதுகாத்து கொள்ள முடியும் என்று பேசினார்.திருவேகம்பத்துர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆற்றுப்படுத்தனர் முருகன் பேசுகையில்,எய்ட்ஸ் என்பது அறிகுறியே இல்லாத நோய் ஆகும்.தீபாவளி ,பொங்கல் போன்ற நாள்கள் கொண்டாட வேண்டிய நாள் ஆகும்.ஆனால் எய்ட்ஸ் தினம் என்பது அனுசரிக்கப்பட வேண்டிய நாள் ஆகும்.எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரை ஒதுக்க கூடாது.புறக்கணிக்க கூடாது.எய்ட்ஸ் ஊசி மூலமாகவும்,பாதிக்கப்பட்டவரின் ரத்தம் வழியாகவும்,கருவுற்ற தாய்மார்களின் வழியாகவும்,பாதுகாப்பற்ற,தவறான உறவுகளின் வழியாகவும் என நான்கு வகைகளில் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.எய்ட்ஸ் பாதிப்பின் ஆரம்பத்தில் கண்டு பிடித்து விட்டால் கூட்டு மருந்து தொடர்  சிகிச்சை மூலம் 20 ஆண்டுகள் கூட உயிருடன் வாழ்க்கை நடத்த முடியும்.மருத்துவ  பயிற்சி பெற்ற ஒருவரின் மூலமாகத்தான் ஊசி போட்டு கொள்ள வேண்டும்.எய்ட்ஸ் பாதித்தவரின் பக்கத்தில் உட்காருவதாலோ ,கழிவறையை பயன்படுத்துவதாலோ ,உடன் பணி செய்வதாலோ,ஒன்றாக சாப்பிடுவதாலோ இந்த நோய் தொற்று பரவாது.எய்ட்ஸ் பாதிப்பு பரம்பரை நோய் அல்ல.எய்ட்ஸ் பாதித்தவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக நம்பிக்கை மையத்தை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளலாம்.இன்றைய நிலையில் ஒரு பேருந்தில் நம்முடன் சுமார் நான்கு பேர் எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் பயணம் செய்கிறார்கள்.எனவே எய்ட்ஸ் என்பது பெரும்பாலும் தவறான உடல் உறவின் வழியாக மட்டுமே தாக்கும் ஆற்றல் உள்ளது.எய்ட்ஸ் பரவுவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது மனிதர்கள் அதிக அளவு இடம்பெயருவதே என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எய்ட்ஸ் தொடர்பாக கூடுதல் தகவலுக்கு கட்டணமில்லா இலவச தொலைபேசி 1800 499 1800 தொடர்பு கொள்ளலாம் என பேசினார்.
                                     நல்ல தொடுதல் ,கெட்ட தொடுதல் தொடர்பாக மாணவர்கள் ராஜேஸ்வரி,தனலெட்சுமி,ரஞ்சித்,ஐயப்பன்,ராஜி,சஞ்சய்,காயத்ரி,பரமேஸ்வரி,
ஜெகதீஸ்வரன் ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,திருவேகம்பத்துர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆற்றுப்படுத்தனர் முருகன்ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment