Monday, 16 March 2020

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு - பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள்- பொதுமக்கள் பாராட்டு

 விடுமுறை நாளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த வீதிகள்  தோறும் சென்ற   மாணவ தூதுவர்கள் 

 
















 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், விடுமுறை நாளில்  வீதி,வீதியாக  சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கைகழுவும் முறைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 
     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு தேவகோட்டை நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு  நடைபெற்றது. அப்போது கொரோனா  விழிப்புணர்வினை ஏற்படுத்த மாணவ தூதுவர்கள் நியமிக்கப்பட்டனர்.கொரோனா வைரஸ் குறித்தும்,கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள், பொதுமக்களுக்கும், தங்கள் சுற்றுப்புறத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள்  முத்துமீனாள்,செல்வம் , ஆகியோரின் ஆலோசனையின்படி   மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஒவ்வொரு தெருவாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில இடங்களில், மாணவர்களே களத்தில் இறங்கி, கை கழுவும் முறைகளை சொல்லிக்கொடுத்தனர் .பொதுமக்களும் ஆர்வத்துடன் தகவல்களை கேட்டு கொண்டனர். மாணவர்களின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடம் பாராட்டு குவிந்துள்ளது. ஏற்கனவே இப்பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வுக்கு வீடு,வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குழுவாக சேர்ந்து தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள தெருக்களில் பள்ளி  விடுமுறையில் பொதுமக்களிடமும்,உறவினர்களிடமும்,தங்களது வீடுகளிலும் கொரோனா வைரஸ் மற்றும் கைகழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு பணியில்   ஈடுபட்டனர்.


 பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் வீடியோ
 https://www.youtube.com/watch?v=ZWfiGGYPc6g











 மேலும் விரிவாக 

 மாணவர் ஐயப்பன் கூறுகையில்
                     உங்கள் பள்ளி மாணவர்கள் முன்பு டெங்கு விழிப்பு வரும் போது தொட்டிகளை சுத்தம் செய்ய சொன்னீர்கள் .நாங்கள் அப்பொழுது தொட்டிகளை சுத்தம் செய்து விட்டோம் .ஒவ்வொரு நோய் வரும்பொழுதும் நல்ல முறையில் உங்கள் பள்ளியிலிருந்து விழிப்புணர்வு கொடுத்து வருகிறீர்கள் .அதற்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் . அவர் கை கழுவும் முறை குறித்து நீங்கள் சொன்ன பிறகு தான் எங்களுக்கு தகவல் தெரிந்தது .அதன் பிறகு நாங்கள் இப்பொழுது சோப்பு போட்டு நிச்சயமாக கை கழுவுகிறோம் என்று ஒரு முதியவர் கூறினார் .இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமுதாயத்திற்கு நல்ல உதவி செய்யும் வகையில் உள்ளது.


மாணவி நதியா கூறுகையில் ,
                            பொதுமக்கள் எங்களிடம் கூறும்போது ,கை கழுவும் முறை குறித்து எங்களுக்கு இதுவரை தெரியாது. கை கழுவும் முறையை மிக தெளிவாக எங்களுக்கு எடுத்துக் கூறி உள்ளீர்கள். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது கொரோனா வைரஸ் பற்றி எங்களுக்கு தெரியாத பல தகவல்களை தெரிய வைத்துள்ளீர்கள்.சிறு பிள்ளைகள் எங்களை சுற்றி நின்று கொண்டு பல்வேறு தகவல்களையும் மீண்டும் மீண்டும் கை கழுவுவதற்கான தகவலையும் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்த சமுதாய விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றது  அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது .இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது பொதுமக்களுக்கு எங்கள் மீது மதிப்பு வருகிறது என்று தெரிவித்தார் .


மாணவி சந்தியா கூறுகையில்,

                           நாங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்ற பிறகு 2 மணி நேரம் கழித்து எங்கள் வீட்டுக்கு ஒரு அக்கா வந்து ,எப்படி கை கழுவுவது என்றும்  கை கழுவும் விஷயத்தை எனக்கு இன்னொரு முறை சொல்லிக் கொடு என்றார் .நானும் மீண்டும் ஒருமுறை கைக்கொள்வது பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். எங்களுக்கு தெரியாத பல்வேறு தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. வைரஸ் குறித்து நல்ல முறையில் பல்வேறு தகவல் எங்களுக்கு தெளிவு படுத்தி உள்ளீர்கள் என்று பாராட்டு தெரிவித்தார். எனக்குகொரோனா  வைரஸ் குறித்து  நான் அறிந்து கொண்டதும், மக்களுக்கு  தெரிவித்தபோது  மக்கள் எனக்கு பாராட்டுவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது .இன்னும் பலபேருக்கு நான் இந்த தகவல்களை சென்று கூறுவேன் என்று கூறினார்.



 மாணவி கீர்த்தியை கூறுகையில்,

                                    நாங்கள் கொரோனா  வைரஸ் விழிப்புணர்வு கொடுத்து விட்டு தெருவில் செல்லும் பொழுது இன்னும் சில பேர் எங்களை கூப்பிட்டு எப்படி கை கழுவுவது என்று கேட்டு தெரிந்து கொண்டார்கள் .ஹேமா அக்கா என்பவர் எங்களை தொடர்பு கொண்டு எவ்வாறு கை கழுவுவது என்கிற தகவலையும் கை கழுவும் போது எப்படியெல்லாம் சோப்பு போட வேண்டும் என்கிற தகவலையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள். இதுவரை நாங்கள் கை கழுவுவது குறித்து தெரியாத தகவல்களை பொதுமக்களிடம் கூறியபோது   பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார்கள். வைரஸ் விழிப்புணர்வு முடிந்து நான் வீட்டிற்கு சென்று வாசலில் வாளியில் தண்ணீர் வைத்து  கை கழுவும்போது,தெருவில்  சென்றவர்கள் என்ன இது என்று  கேட்டார்கள் .அப்பொழுது நான் கை இடுக்குகளில் எல்லாம் அழுக்கு  இருந்தாலும் இருக்கும் அதனால் நாங்கள் பொதுவாக எப்பொழுதும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தோம் கை இடுக்குகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி விடுவோம் என்ற விளக்கத்தை கொடுத்தேன். அப்பொழுது எங்கள் சித்தி எனக்கு பாராட்டு தெரிவித்தார்கள் .எங்கள் வீட்டிற்கு வந்திருந்த ராஜா என்கிற மாமா அவர்களும் இது புதிய தகவலாக இருக்கிறது நானும் தெரிந்து கொண்டேன் என்று பாராட்டு தெரிவித்தார்கள் என்று கூறினார்.


மாணவி அம்முசி கூறுகையில் ,

                   எங்கள் வீட்டை சுற்றி உள்ள அனைவரும் கை கழுவும் முறைகள் குறித்து கேட்டார்கள். கடைக்காரர் தாத்தா ஒருவர் கடைக்கு சாமான் வாங்க செல்லும் போது இன்று வந்து என்னமோ சொல்லி கொண்டிருந்தீர்களே என்ன சொன்னீர்கள் என்று கேட்டார். தகவல்களை சொன்னேன் நான் இதுவரை மூக்கு ,கை ,வாய் போன்ற இடங்களில் அடிக்கடி தொடுவேன் .இனிவரும் காலங்களில் அதுபோன்று தொட மாட்டேன் என்று கூறினார். பக்கத்து வீட்டில் உள்ள மேனகா சித்தி என்னிடம் பேசும்பொழுது நேற்று பள்ளிக்கூடமா என்ன தெருவில் சென்று பேசிக் கொண்டிருந்தாய்  என்று கேட்டார் ,அவர்களிடமும்  வைரஸ் குறித்து கூறினேன். அவரும் விழிப்புணர்வு தொடர்பாகவும் கை கழுவும் முறை தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டார். சக்திவேல் அண்ணன் அவர்கள் என்னிடம் என்ன தகவல் என்று கேட்டார் அப்பொழுது அவர்களிடம் பல்வேறு தகவல்களை வைரஸ் தொடர்பாக எடுத்துக் கூறினேன். இது எங்களுக்கு தெரியாது கண் மூக்கு வாய் போன்றவற்றை அடிக்கடி தொடுவோம். கை இனிமேல் கொண்டு செல்ல மாட்டோம் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறினார்கள் .எனக்கு மிகவும் பெருமையாக  இருந்தது என்று கூறினார்.


 மாணவி மெர்சி மற்றும் மாணவர் பாலமுருகன் ,

                                          வைரஸ்  குறித்து எங்களை சுற்றி உள்ள பல்வேறு நபர்களும் பல்வேறு தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக கைகழுவ தொடர்பாக அனைவரும் எங்களிடம்  கேட்டு தெரிந்து  கொண்டார்கள். கை கழுவும் போது கை இடுக்குகளில் நன்றாக கழுவ வேண்டும் என்கிற தகவலையும் அவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினோம் . இது எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. .  டெங்கு விழிப்புணர்வு கொடுத்தது போன்றே உங்கள் பள்ளியின் மூலமாக நீங்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது என்றும் எங்களிடம் தெரிவித்தார்கள்.

                      இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.
 

 தெரியாத விசயங்களை தெரிய வைத்த பள்ளிக்கு பாராட்டு :
                                   எங்களுக்கு தெரியாத பல விசயங்களை உங்கள் பள்ளியில் சொல்லி தருகிறார்கள்.நீங்கள் எங்களுக்கு வந்து சொல்வது பெரும் உதவியாக உள்ளது என்று சொன்னார்கள்.நாங்கள் தொடர்ந்து எங்கள் அருகில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இதனை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி காய்ச்சல் இல்லாமல் ஆக்குவோம் என்று சொன்னார்கள் . 

தூதுவர்களாக மாறிய மாணவர்களுக்கு பாராட்டு :
                                  பொதுமக்கள்    மாணவர்களை கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்வில் தூதுவர்களாக மாற்றி பெற்றோரிடமும்,பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்களுக்கும்,பள்ளிக்கும்  பாராட்டு தெரிவித்தனர்
 

No comments:

Post a Comment