Thursday, 10 August 2017

மாணவர்களின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சியை குறைக்கும் குடற்புழுக்கள்
அரசு பொது மருத்துவர் பேச்சு


குடற்புழுக்கள் நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு  


குடற்புழுக்கள் நீக்க மாத்திரைகளை ஏன் சாப்பிட வேண்டும்?





குடற்புழு மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்?




எத்துனை மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரைகளை சாப்பிட வேண்டும்?

குடற்புழு மாத்திரைகளை சாப்பிடும் வழிமுறைகள் என்ன ?



அரசு மருத்துவரின் தெளிவான அறிவுரைகள்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சியை குடற்புழுக்கள் குறைக்கின்றன என்று அரசு பொது மருத்துவர் பேசினார்.

            நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர் தமீம் அன்சாரி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசுகையில் , குடற்புழு மாத்திரைகள் வருடம் இரண்டு முறை வழங்கப்படுகிறது.குடற்புழுக்கள் பொதுவாக நமது கையின் வழியாக சரியாக கழுவாமல் சாப்பிடும்போது நமக்கே தெரியாமல் மைக்ரோ அளவில் கையில் ஒட்டி கொண்டு வயிற்றின் உள்ளே சென்று பெரிதாக வளர்ந்து ,நாம் சாப்பிடும் உணவை அது சாப்பிட்டு நமக்கு சுகவீனம் மற்றும் அசதி ,சோர்வு,படிப்பில் கவனமின்மை ஏற்படுகிறது.இதனால் உடல் மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சி தடைபடுகிறது.இதனை நீக்க நாம் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) உட்கொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்கிறேன் என்று பேசினார்.நிகழ்வில் குடற்புழு நீக்க மாத்திரைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை மாணவர்கள் ஜெனிபர்,வெங்கட்ராமன்,ரஞ்சித்,ராஜேஷ்,ராஜேஸ்வரி ,ஐயப்பன்,காயத்ரி,கிஷோர்குமார் ஆகியோர் கேட்டு தெளிவு பெற்றனர்.இந்நிகழ்வில் கண்ணங்குடி மருந்தாளுனர் சிவக்குமார்,செவிலியர் அர்ச்சனா,தேவகோட்டை ஆறாவது தொகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.



பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர் தமீம் அன்சாரி வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார். 





விரிவாக :
                தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்து மருத்துவர் தமீம் அன்சாரி பேசுகையில் கூறியதாவது:     



         தமிழகம்  முழுவதும் இன்று 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகின்றது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.







குடற்புழு தொற்று: 


       உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1-19 வயதுடைய குழந்தைகளில் 24.1 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர்.இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 6-59 மாதம் வயதுடைய குழந்தைகளில், 10ல் 7 குழந்தைகள் (70%) இரத்த சோகையினால் பாதித்துள்ளனர். முக்கியமாக, கிராமப்புறங்களில் அதிக அளவிலான குழந்தைகள் பாதித்துள்ளனர். 15-19 வயதினரிடையே, 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் இரத்த சோகையினால் பாதித்துள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 50% உடல் வளர்ச்சி குன்றியும், 43% எடை குறைவாக உள்ளனர்.



குடற்புழு வகைகள்

மக்களுக்குத் தொற்றும் முக்கியப் புழு இனங்கள் வட்டப்புழு (அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்), சாட்டைப்புழு (டிரைசூரிஸ் டிரைசுய்யுரா) கொக்கிப்புழு (நெகேட்டர் அமெரிக்கானஸ் மற்றும் அன்சைலோஸ்டோமா டியோடெனேல்) ஆகியவையாகும்.



குடற்புழு பாதிப்பு சுழற்சி

பரவல்: பாதிக்கப்பட்ட மக்களின் மலத்தில் இருக்கும் முட்டைகளின் மூலம் நோய் பரவுகிறது. முதிர்ச்சி அடைந்த புழு குடலில் வாழ்ந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முட்டைகளை உருவாக்குகிறது. போதுமான சுகாதார வசதி இல்லாத இடங்களில் இம்முட்டைகள் மண்ணை அசுத்தமாக்குகின்றன.

பரவல் பல வழிகளில் நடைபெறும்:

  • காய்கறிகளைக் கவனமாகக் கழுவி, தோலகற்றி சமைக்காத போது அவற்றில் இருக்கும் முட்டைகள் உடலுக்குள் செல்லுகின்றன.
  • அசுத்த நீரின் மூலமும் முட்டைகள் உடலுள் புகுகின்றன.
  • மண்ணில் விளையாடும் குழந்தைகள் தங்கள் கைகளைக் கழுவாமல் வாயில் வைக்கும் போதும் முட்டைகள் குடலுக்குள் செல்லலாம்.

மேலும், கொக்கிப்புழுவின் முட்டைகள் மண்ணில் பொரித்து வெளிவரும் நுண்புழுக்கள் தோலுக்குள் துளைத்துச் செல்லும் ஒரு வடிவமாக முதிர்ச்சி அடைகின்றன. அசுத்த மண்ணில் வெறுங்காலுடன் நடந்து செல்லும் மக்களுக்கு இவ்விதமாகக் கொக்கிப்புழு தொற்று ஏற்படுகிறது.

மனிதருக்கு மனிதரோ அல்லது மலத்தின் மூலமோ நேரடிப் பரவல் இல்லை. ஏனெனில் மலத்தின் வழியாக வெளியேறும் முட்டைகள் தொற்று ஏற்படுத்தும் வலிமையைப் பெற  மண்ணில் மூன்று வாரங்கள் முதிர்ச்சி அடைய வேண்டும்.





குடற்புழு தொற்று அறிகுறிகள்



இலேசாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை.

கடுமையான தொற்று ஏற்பட்டால், வயிற்றுப்போக்கும் வயிற்றுவலியும், பொதுவான சோர்வும் பலவீனமும், அறிவு மற்றும் உடல் வளர்ச்சியில் குறைபாடும் உண்டாகும்.

கொக்கிப் புழுவால் நீடித்த குடல் குருதி இழப்பு ஏற்பட்டு இரத்தச்சோகை உண்டாகும்.

.

குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள்

பாதிப்புக்குள்ளான மக்களின் ஊட்டச்சத்து நிலையை இந்நோய் பல வழிகளில் முடக்குகிறது.

  • ஓம்புயிரின் இரத்தம் உள்ளடங்கிய திசுக்களை புழுக்கள் உண்ணுவதால் இரும்பு மற்றும் புரத இழப்பு ஏற்படுகிறது.
  • ஊட்டச்சத்து குறையுறிஞ்சலை இப்புழுக்கள் அதிகரிக்கின்றன. மேலும், வட்டப்புழுக்கள் குடலில் உயிர்ச்சத்து ஏ-யைப் பெற போட்டி இடுகின்றன.
  • சில மண்ணால் பரவும் குடற்புழுக்கள் பசியின்மையை ஏற்படுத்துவதால் ஊட்டச்சத்து உள்ளெடுப்பு குறைந்து உடல்தகுதி குறைகிறது. டி. டிரைச்சியூரா வகைப் புழு வயிற்றுப்போக்கையும் வயிற்றுக் கடுப்பையும் உண்டாக்கும்.

ஊட்டச்சத்து உள்ளெடுப்புக் கோளாறுகளினால் வளர்ச்சியிலும் உடல் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை இந்நோய் ஏற்படுத்துகிறது.

குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பசியின்டை, இரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்



 குடற்புழு நோய் கண்டறிதல்


மலத்தை நுண்ணோக்கி மூலம் சோதிக்கும் போது முட்டைகளின் இருப்பை வைத்து மண் மூலம் பரவும் குடற்புழு நோய் கண்டறியப்படுகிறது.
வளர்ந்துவரும் நாடுகளில் தொற்று ஏற்படும் ஆபத்துள்ள குழுக்களுக்கு மலப் பரிசோதனை இன்றியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தடுப்பு சிகிச்சை எனப்படுகிறது.
மலத்தின் வழியாக அல்லது இருமும் போது புழு வெளியேறுவதைக் கொண்டு சிலர் தொற்று இருப்பதைக் கவனிக்கிறார்கள். இவ்வாறு நிகழ்ந்தால் புழு மாதிரியை சுகாதார நிலையத்துக்குக் கண்டறிதலுக்காகக் கொண்டு வர வேண்டும்.

குடற்புழு பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் 


ஓரிட நோய் பரவலாக உள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு முறையாக மருத்துவம் அளித்து நோயை தடுத்து நோயிருப்பைக் கட்டுப்படுத்துவதே மண் மூலம் பரவும் குடற்புழு நோயைக் கட்டுப்படுத்தும் உத்தி யாகும். நோய் ஆபத்தில் இருக்கும் மக்கள் வருமாறு:

பள்ளிக்குச் செல்வதற்கு முன்பருவக் குழந்தைகள்;

பள்ளிப்பருவக் குழந்தைகள்;

குழந்தை பெறும் வயதுப் பெண்கள் (இரண்டாம் மூன்றாம் மும்மாத நிலைக் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்).

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். அவற்றில் அடங்குவன:

உணவைக் கையாளும் முன் கையை சோப்பு மற்றும் நீரால் கழுவுதல்பாதுகாப்பான கலணிகளை அணிதல், உண்ணும் முன் காய்கறிகளையும் பழங்களையும் சுத்தமான நீரால் நன்கு கழுவுதல் ஆகிய ஆரோக்கியம் மற்றும் சுத்தம் பற்றிய சுகாதர நடத்தைகளைக் கற்பித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க முடியும்.

  • மலத்தைச் சுகாதாரமான முறையில் அகற்றுதல்.
  • குழந்தைகள் நல நாட்கள் அல்லது பள்ளி முன்பருவக் குழந்தைகளுக்கான உயிர்ச்சத்து- ஏ அளிக்கும் திட்டம் அல்லது பள்ளி சார் சுகாதாரத் திட்டம் ஆகியவற்றுடன் குடற்புழு நீக்கும் மருந்தளித்தலை இணைத்தல்.





திறந்த வெளியில் மலம் கழித்தல் கூடாது. கழிவறைகளை பயன்படுத்துதல் வேண்டும். காலணிகளை அணிதல் வேண்டும். நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். உணவுக்கு முன், கழிவறையினை பயன்படுத்திய பின் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் வேண்டும். சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல் வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.



குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்





இந்த வழிமுறைகளை பின்பற்றினால், குடற்புழு பாதிப்பை தடுக்கலாம்.குடற்புழு நிக்கத்தினால், இரத்த சோகையை தடுக்கிறது. நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. எனவே, தவறாமல் 1-19 வயதுடைய குழந்தைகள் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) உட்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்

No comments:

Post a Comment