Friday, 6 November 2026

 

“வெடி நம்மீது விழுந்தால் பதற்றமின்றி நில், படு, உருள்!” – தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு






பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல்முறை விளக்கம்!

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கணேசன், மாணவர்களுக்கு பட்டாசு பாதுகாப்பு குறித்து நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவி நந்தனா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் பேசும்போது, “தீபாவளிப் பண்டிகையின்போது குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக நம் மீது தீப்பற்றினால் பதற்றமடையாமல் ‘ஸ்டாப், டிராப், ரோல்’ (நில், படு, உருள்) என்ற முறையைப் பின்பற்ற வேண்டும்.

புஷ்வாணம், சங்கு சக்கரம் உள்ளிட்ட பட்டாசுகளைப் பற்ற வைக்கும்போது நீண்ட ஊதுபத்தியைப் பயன்படுத்த வேண்டும். பட்டாசைப் பற்ற வைத்தவுடன் சுமார் இரண்டு அடி தள்ளி நின்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் எப்போதும் ஒரு வாளி தண்ணீர் தயாராக வைத்திருக்க வேண்டும்.

பட்டாசுகளை பாட்டில், கொட்டாங்குச்சி போன்றவற்றில் வைத்து வெடிக்கக் கூடாது. கைகளில் பிடித்துக்கொண்டு பட்டாசுகளை வெடிப்பதும் ஆபத்தானது. வெடிக்காமல் போன பட்டாசுகளை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் தீ வைக்கக் கூடாது. அவ்வாறு செய்வதால் எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் காயம் ஏற்படலாம்.

நைலான், பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய செயற்கை இழை ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது பாதுகாப்பானது. அதேபோல், பட்டாசுகளை சட்டை மற்றும் பேன்ட் பைகளில் வைத்துக்கொள்ளக் கூடாது. கவனக்குறைவால் தீப்பொறி பட்டால் பைகளில் உள்ள பட்டாசுகளும் வெடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த முன்னணி தீயணைப்போர் முனீஷ்குமார், தீயணைப்போர் வீரப்பெருமாள், சேது, வீரராகவன், மிக்கேல் டேவிட், சொக்கலிங்கம், வைரமுத்து ஆகியோர் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு நேரடி செயல்முறை விளக்கம் அளித்த தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கணேசன். அருகில் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்.




வீடியோ     https://www.youtube.com/watch?v=1J-3APGE48Y

No comments:

Post a Comment