Tuesday, 18 March 2025

         சைபர் கிரைம் விழிப்புணர்வு 

கல்வி உதவி தொகையை வைத்து ஏமாற்றும் சைபர் குற்றவாளிகள் 

பெற்றோரே உஷார்  


ஆன்லைன் ஷாப்பிங்கில் கேஷ் ஆன் டெலிவெரியை தேர்ந்தெடுத்தால் பணம் பாதுகாக்கப்படும் 

 ஜிபேயில் பணம் செலுத்தும்போது எப்பொழுதும் ஒரு ரூபாய் அனுப்பி கன்ஃபார்ம் செய்து  அடுத்த தொகையை அனுப்புங்கள் 


- போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை











தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்றது.

                                   பள்ளி  ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர போக்குவரத்து காவல்  சார்பு ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில்,                          

                           சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தக்கூடாது. பெண்களும், ஆண்களும் தங்களின்  புகைப்படங்களை பதிவிட கூடாது. தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது.

                            சாதாரண செல்போன்களில் குறுஞ்செய்திகள் மூலம் ஓடிபி அனுப்பி கால் செய்து எண்  கேட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பார்கள் .

                        ஆண்ட்ராய்டு போன்களில் சமூக வலைதளங்களின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி நம்மை அவர்களின் வலையில் விழவைப்பது வாடிக்கையாகி உள்ளது.

                            வங்கியிலிருந்து பேசுகிறோம் என தனிப்பட்ட விவரங்களை கேட்டால் பகிரக் கூடாது.  வங்கிக்கு நேரில் சென்று உண்மையை தெரிந்து செயல்பட வேண்டும்.

                                   சமூக வலைதளங்களில் பிரைவசி என்ற ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட விவரங்களை அனைவரிடமும் பகிரக் கூடாது.

                                  ஆன்லைனில் வரக்கூடிய லிங்கு, குறுஞ்செய்திகளை, அழைப்புகளை அட்டென்ட் செய்ய கூடாது. இமெயில் போன்றவற்றுக்கு வைக்கக்கூடிய பாஸ்வேர்டை கடுமையான அதிக எழுத்துக்களால் யாருக்கும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வைக்க வேண்டும்.

                                    ஷாப்பிங் ஆப்ஸ் மூலம் வாங்கும் பொருள்களுக்கு நேரடி பணம் செலுத்த வேண்டும். முடிந்தவரை ஆன்லைன் பேமெண்ட் ஷாப்பிங்கை தவிர்க்க வேண்டும். 

                                                சொந்த உழைப்பின்றி வரும் பணத்தை பயன்படுத்தக் கூடாது. அது ஆபத்தில் முடியும். சைபர் குற்றம் நடந்தால் 1930 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

                         ஓட்டி பி, 16 இலக்க எண்கள், தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் கூறக்கூடாது. ஆன்லைன் அரஸ்ட், மார்பிங் போன்ற செயல்களுக்கு பயப்படாமல் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும், காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.

                                  நைஜீரியா, கம்போடியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவில் பீகாரில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் இதுபோன்ற சைபர் கிரைமில் அதிகம் ஈடுபடுகிறார்கள். 

                          குழந்தைகள் அனைவரும் பெற்றோரின் கஷ்டத்தையும் கல்வியின் அவசியத்தையும் உணர்ந்து படிக்க வேண்டும். 

                                  சைபர் கிரைம் குற்றங்கள் நடப்பதற்கு மக்களாகிய நாம்தான் காரணம். நம்முடைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடாமல் இருந்தால் நிறைய குற்றங்கள் தடுக்கப்படும்.

                               பெண் பிள்ளைகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ப்ரொபைலில் வைக்கக் கூடாது. மாணவர்கள் 12ம் வகுப்பு படிக்கும் வரை செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.

                                  காலேஜ் படிக்கும்போது செல்போன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

                             மாணவர்கள் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் போது தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

                                        பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனே கண்டிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் மீது எப்போதும் கவனம் செலுத்தி அவர்களின் தவறை திருத்த முயற்சி செய்யாவிட்டால் அவர்கள் தற்கொலைக்கு சென்றுவிடுவார்கள்.

                                           ஜிபேயில் பணம் செலுத்தும்போது எப்பொழுதும் ஒரு ரூபாய் அனுப்பி கன்ஃபார்ம் செய்து கொண்டு அடுத்த தொகையை அனுப்ப வேண்டும். எவ்வளவு பெரிய தொகையையும்  உடனே அனுப்பக்கூடாது.

                          ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். அப்படியே நமக்கு அருகே கிடைக்காத பொருட்களை ஷாப்பிங் செய்தாலும் கேஷ் ஆன் டெலிவரி செய்ய வேண்டும்.

                               மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே ஐஏஎஸ்,, ஐபிஎஸ் எம்பிபிஎஸ், டீச்சர் போன்ற ஏதேனும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டு அந்த குறிக்கோளை நோக்கியே கவனம் செலுத்தி படிக்க வேண்டும். 

                                பிறந்தநாள் விழாவினை ஸ்டேட்டஸில் போடுவது பேஷனாக உள்ளது. அதை தவிர்க்க வேண்டும்.

                         வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி பணம் கட்டச் சொல்வார்கள். நாம் பணம் கட்டியவுடன் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவார்கள்.

                              கல்வி உதவி தொகை உங்கள் பிள்ளைகளுக்கு வந்துள்ளது. எங்களிடம் ஓடிபி நம்பர் சொல்லுங்கள் என்று கேட்டால் சொல்லக்கூடாது. தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் வந்து நேரில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

                       நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் இளந்து விடக்கூடாது.என்று பேசினார்.

                                     சிறப்பாக கேள்வி கேட்ட மாணவ மாணவியருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

                          பெற்றோர்களும்,ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களது சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு நகர காவல் ஆய்வாளரிடம் பதில்களை பெற்றனர்.


  படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து சிறப்புரையாற்றினார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கலா முன்னிலை வகித்தார். சிறப்பாக கேள்விகள் கேட்ட மாணவ மாணவியருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.


 வீடியோ : 

https://www.youtube.com/watch?v=RTEwRAmv4wo

No comments:

Post a Comment