Tuesday, 11 July 2017

பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி?

பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க  வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இப்பள்ளியில் மாணவிகளுக்கு  தொடர்ந்து ஐந்தாவது  ஆண்டாக இந்த விழிப்புணர்வு மருத்துவ ஆலோசனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



        வழிகாட்டுதல் முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.சண்முகநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மூத்த செவிலியர் கண்ணம்மாள் முன்னிலை வகித்தார்.திருவேகம்பத்தூர்  அரசு ஆரம்ப சுகாதார  நிலைய பொது மருத்துவர் சிவசங்கரி  பள்ளி மாணவிகளிடம் தன் சுத்தம் பேணுதல் சார்பாக விளக்கமாக கூறினார்.செவிலியர் ரேவதி உடனிருந்தார்.பெற்றோர்கள், மாணவிகள் ,ஆசிரியைகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.மாணவிகள் உமா மஹேஸ்வரி,காயத்ரி,ஜெனிபர் ,சக்தி,அபிநயா ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
                      மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில் பள்ளி வயதில் இந்த நிகழ்வு மிகவும் உபயோகம் உள்ளதாக தெரிவித்தனர்.

  பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பெண்கள் உடல்நலம் பேணுவது எப்படி? என்பது தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு மருத்துவர் வழி காட்டுதல் நிகழ்ச்சி  நடைபெற்றது.திருவேகம்பத்தூர்  அரசு ஆரம்ப சுகாதார  நிலைய பொது மருத்துவர் சிவசங்கரி  , மூத்த செவிலியர் கண்ணம்மாள்,ரேவதி ஆகியோர் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.






விரிவாக :
                       முகாமில் பள்ளி வயது மாணவிகள் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம்,அந்த மூன்று நாட்கள் தொடர்பான விளக்கங்கள்,மாதவிடாய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள்,மாணவிகள் பூப்பெய்தும்போது ஏற்படும் பயத்தை போக்கவும்,மாணவிகளின் அம்மாக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கவும் இந்த ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
                          பொதுவாக நாம் மருத்துவரை சென்று பார்த்தால் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே பேச இயலும்.அதற்குள் நமக்கு சீட்டை எழுதி கொடுத்து விடுவார்கள்.மீண்டும் சந்தேகம் கேட்கலாம் என எண்ணி சென்றோமானால் அவ்வளவு எளிதாக நாம் மருத்துவரை பார்க்கமுடியாது.ஆனால் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாணவிகள்,அவர்களின் அம்மாக்கள் ,பெண் ஆசிரியைகள் ஆகியோர் விளக்கமாக இந்த நிகழ்வில் தங்களின் சந்தேகங்களை போக்கி கொள்ள பள்ளியின் வழியாக தொடர்ந்து 5 ஆண்டுகளாக ஏற்பாடு செய்து  நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடதக்கது. இதில் கலந்து கொண்டு சந்தேகங்களை விளக்கி சொல்லும் மருத்துவர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் இந்த பணியை செய்து உதவி வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியது ஆகும்.


 மாத விடாய் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
                              பெண்கள் பொதுவாக வயதுக்கு வருவதை ஏதோ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உடம்பும்,மனதும் வேறுபட்டு காணப்படும்.பெண்கள் வயதுக்கு வருவது தொடர்பாக நீங்கள் அனைவரும் இந்த வயதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.பிறர் நம்மை தொடுவதில் நல்ல தொடுதல்,கேட்ட தொடுதல் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.உறவினர்கள் யாரேனும் தவறான தொடுதல் செய்தால் அதனை ஆசிரியரிடமோ அல்லது அம்மாவிடமோ அவசியம் சொல்ல வேண்டும்.பெண்கள் பருவமடையும்போது சில உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையும்.உடலில் சில இடங்களில் உரோமங்கள் அதிகமாகும்.இவற்றை கண்டு பயம் வேண்டாம்.இது தானாக இயற்கையில் வளர்ச்சி அடையும்போது நடைபெறுபவை ஆகும்.இதற்காக பயம் வேண்டாம்.பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தேவையில்லாத சிந்தனைகள் ,தலைவலி வரலாம்.யாரை பார்த்தாலும் கோபம் கூட சமயங்களில் அதிகமாக வரலாம்.கெட்ட எண்ணங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.இது போன்ற சமயங்களில் தண்ணீர் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் நலம் ஓரளவு உங்கள் கட்டுக்குள் வரும்.தண்ணீர் அதிகம் குடித்தால் மாதவிடாய் காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளை சரி செய்து கொள்ளலாம்.

 பிராய்லர் கறி  கோழி உண்பதால்  பெண்கள் பருவம் அடைதல் பாதிப்பு
                                       பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம்.அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது.மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர்.மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை.அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது.இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.மிக குறைந்த வயதில் கர்ப்பப் பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.எனவே மாணவிகளான நீங்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.உங்கள் உடம்புக்கு நல்லது. உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.இரும்பு சத்துள்ள முருங்கை கீரை ,உளுந்த கஞ்சி,மாதுளம் பழம் ,எல்லா சத்தும் நிறைந்த பழமான கொய்ய பழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.நவ்வாப்பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை நன்றாக குறைக்கும்.பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டு கொள்ள வேண்டாம்.அவ்வாறு சண்டையிட்டு கொள்வதால் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவது,கை சூப்புவது போன்ற பழக்கங்கள் ஏற்படுகிறது.இது நாளடைவில் தீவிரமடைந்து பல்வேறு பிரச்சினைகளை உண்டு செய்கிறது.எனவே பெற்றோர் எந்த பிரச்சினையாக இருந்தாலும் குழந்தைகள் முன்பு சண்டை போடவேண்டாம்.இவ்வாறு மருத்துவர் சிவசங்கரி  மாணவிகளிடமும்,பெற்றோர்களிடமும் பேசினார்கள்.

   படர் தாமரை நோய் வர காரணம் என்ன ?
                                                 மருத்துவர்கள் மாணவர்களிடம் பேசும்போது , தினமும் நன்றாக குளிக்க வேண்டும்.பல் தேய்க்க வேண்டும்.எந்த ஒரு செயல் செய்தாலும் 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் அது உங்கள் பழக்கமாகி விடும்.தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.சிறுநீரை எக்காரணம் கொண்டும் அடக்க கூடாது.அதனால் பல்வேறு வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.கிருமி தொற்று ஏற்படும்.எனவே சிறுநீர் வந்தால் உடனே சென்று விடவேண்டும்.வீட்டில் ஒரே சோப்பு,ஒரே துண்டு என அனைவருக்கும் ஒன்று என்று பயன்படுத்த கூடாது.ஒரே துண்டு பயன்படுத்துவதால் படர் தாமரை என்ற பூஞ்சை அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.அனைத்து துணிகளையும் நன்றாக துவைத்து வெயிலில் காயப்போட்டு பயன்படுத்த வேண்டும்.கையில் சில பேருக்கு பொறி  பொறியாக வருவதற்கு காரணம் மண்ணில் விளையாடுதல் மற்றும் தண்ணீர் சரியாக குடிக்காமல் இருந்தால் அவ்வாறு வரும்.புற்று நோய் அப்பாவுக்கு இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.நகங்களை குறிப்பிட்ட கால அளவுக்குள் வெட்டி விடவேண்டும்.நகங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.மலம் கழித்த பின்பும்,சிறுநீர் இருந்த பின்பும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.கால்களுக்கு செருப்பு கண்டிப்பாக போட வேண்டும்.அப்போதுதான் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து  கொள்ள முடியும்.

No comments:

Post a Comment