Friday, 4 September 2026

 

“கேட்கும் செல்வம் மிகப் பெரிய செல்வம்” – மாணவர்களிடம் வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் பேச்சு





தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அறிவிப்பாளர் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சிக்கு ஆசிரியை சிவரஞ்சனி வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் நாகநந்தினி ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மாணவர்களிடம் பேசுகையில், “அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் அதிக அளவில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சிறந்த மனநல ஆலோசகர்களைக் கொண்டு வழிகாட்டுதல் மற்றும் பயனுள்ள தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஏராளமான குழந்தைகள் வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் பேச்சுத்திறன் வளர்கிறது. பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் வேலைக்குச் செல்லும்போது நேர்முகத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

மக்கள் நலன் சார்ந்த பல்வேறு தகவல்களும் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வழியாக மொபைல் போனிலும் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கவும், பார்க்கவும் முடியும். ‘கேட்கும் செல்வம் மிகப் பெரிய செல்வம்’ என்பதை திருவள்ளுவர் தனது திருக்குறளில் எடுத்துக் கூறியுள்ளார். வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போது நமது அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டே பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள முடியும். அதே சமயம், காதால் கேட்பதன் மூலம் நமது அறிவையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

படிக்கக்கூடிய காலம் பொற்காலம். இதை உணர்ந்து மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். நன்றாகப் படிப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்காது. எனவே, எந்தச் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்.

வானொலி நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளராகப் பணியில் சேர குறைந்தது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு நன்றாகப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பாளர் பணியில் சேர தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் உச்சரிப்பைச் சரியாகக் கற்றிருக்க வேண்டும். வானொலி நிலையத்தில் நிரந்தரப் பணியில் சேர அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, பின்னர் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

பொதுவாக அரசு தேர்வுகளில் வினாக்கள் நமது பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன. எனவே, மாணவர்கள் பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.

வானொலி கேட்பது மிகவும் இனிமையான ஒரு நிகழ்வு. வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள். வானொலி எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கூறுவதுடன், மனதிற்கு இதமான பாடல்களையும் வழங்குகிறது” என்றார்.

நிகழ்ச்சியை மாணவி நந்தனா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

படவிளக்கம்:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் அறிவிப்பாளர் நாகநந்தினி ஆகியோருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடிய நிகழ்வில், பள்ளித் தலைமையாசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

வீடியோ : https://www.youtube.com/watch?v=Oz8wl6fo6e4


No comments:

Post a Comment