திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மெகா செட்டிநாடு வணிக கண்காட்சி!
திருச்சி ஸ்ரீ கற்பக விநாயகர் நகரத்தார் சங்கத்தின் சார்பில் மாபெரும் செட்டிநாடு சந்தை (செட்டிநாடு வணிக கண்காட்சி) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஆகஸ்ட் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைப்பெற உள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பரவியுள்ள 76 கிராமங்களை சேர்ந்த வணிக சமூகம் (நாட்டுக் கோட்டை செட்டியார்கள்) இங்கே பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி கே.கே.நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் நகரத்தார் சங்கம் மற்றும் திருச்சி நகரத்தார் மகளிர் சங்கம் இணைந்து செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை சமூக பணிகளுக்காகவும், கோயில்களை புனரமைப்ப தற்காகவும் செலவிடுவதில் முக்கிய பங்காற்றுகின்றனர். திருச்சியில் நடத்தப்படும் கண்காட்சியில் செட்டிநாடு சமூகத்தினரின் கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரிய ஆபரணங்களான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள், செட்டிநாடு கலைப்பொருட்கள், பாரம்பரிய புடவைகள், தின்பண்டங்கள் பானங்கள், கவுனி அரிசி உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கும் 85க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன, ஏற்கனவே சென்னை, கோயம்புத்துார், சேலம், மதுரை, காரைக்குடி உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நகரத்தார் சங்கங்களால் நடத்தப்பட்ட இந்தகண்காட்சி தற்பொழுது திருச்சியில் நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு பொருளாதார நிபுணர் மும்பை சேதுராமன் சாத்தப்பன், பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள் பொது மேலாளர் சோம.வீரப்பன், ஆகியோர் ஆலோசகர்களாக செயல்படுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி ஸ்ரீகற்பக விநாயகர் நகரத்தார், நகரத்தார் மகளிர் சங்கத்தினர் செய்து வருகின்றனர். செட்டிநாட்டு உணவுகளான வெள்ளை பணியாரம், கந்தரப்பம், ஆடிகூழ், பச்சை தேன்குழல், கவுனி அரிசி போன்றவைகளை ரசித்துப்பார்க்கவும், ருசித்து பார்க்கவும் முதன்முறையாக திருச்சி வாழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது அனுமதி இலவசம் என்பதால் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என நம்பப்படுகிறது.
விழாவில் அமைச்சர் பெருமக்கள், திருச்சி மாநகர மேயர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment