ஆசியாவின் இரண்டாவது பெரிய பாணாஸுரா சாகர் அணை
குளிர்ந்த நீரில் குளிக்க துஷாரகிரி அருவி
கால்களை அசந்து போக செய்யும் இடக்கால் குகை
கூகிள் மேப்பில் வழி தவறி சென்று மீண்டு வந்த அனுபவம்
தேனீக்கள் பற்றி அற்புதமான தகவல் உள்ள ஹனி ம்யூஸியம்
வயநாட்டில் மதிய உணவு சாப்பிட அருமையான உணவகம்
மறக்காமல் டீ ம்யூஸியம் காணுங்கள்
கேரளா டூர் நாள் -3 மற்றும் நாள் - 4
மூன்றாவது நாளாக கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து கிளம்பி மிக இயல்பாக எங்களது பயணத்தை ஆரம்பித்தோம்.
கோழிக்கோட்டில் இருந்து தாமரை சேரி வழியாகச் சென்றோம். தாமரை சேரி, அடிவாரம் வழியாக பச்சை,பசேல் என்ற மலைகளின் வழியாக, 10கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளின் வழியாக வயநாடு பயணம் சென்றோம்.
வயநாடு செல்லும்போதே லக்கடி வியூபாயிண்ட் முதலாவதாக வருகின்றது. நாங்கள் செல்லும் பொழுது புகைமூட்டமாக இருந்ததால் பார்க்காமல் பூக்காடு லேக் சென்று விட்டோம்.
பூக்காடு ஏரி பார்த்து விட்டு அங்கிருந்து வைத்திரீ என்ற இடத்தில் இந்தியா கேட் என்கிற உணவகத்தில் சாப்பிட்டு விட்டு , நல்ல முறையில் அங்கு இருந்தது பானாசுர சாகர் அணைக்கு சென்றோம்.
ஒரு மணி நேர பயணம் வளைந்து, நெளிந்து பச்சை பசேல் என்று பல இடங்களில் அருகில் சென்று நிறைவாக அணை அருகில் எங்களை கொண்டு போய் விட்டது.
அணை உள்ளே செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து அணைக்கட்டின் மேலே செல்ல கே.எஸ்.இ .பி.வாகனத்தின் வழியாக மேலே செல்லலாம். வாகனத்தின் மூலம் மேலே செல்ல டிக்கெட் எடுக்க வேண்டும்.
வாகனம் வழியாக செல்லாமல் நாமாகவும் நடந்தும் மேலே செல்லலாம். இந்த அணைக்கட்டு மிக பெரியது.ஆசியாவில் இரண்டாவதாக பெரியதாக உள்ளன என்று தெரிவித்தார்கள்.
மிகப்பெரிய ஏரியில் தண்ணீரை தேக்கி வைத்து இருக்கின்றார்கள். அங்கேயே பிஷ் ஸ்பா எனும் மீன்கள் அழுக்கைத் தின்னும் இடமிருக்கின்றது. கால்களில் உள்ள அழுக்கை மீன்களுக்கு வழங்க ஒரு 10 நிமிடத்திற்கு 100 ரூபாய் பெற்றுக் கொள்கின்றனர்.
ஸ்பீடு போட்டிங் இருக்கின்றது. வண்ண வண்ண மீன்களும் இருக்கின்றது. அட்வென்சர் செல்லக் கூடியவர்களுகு அதற்கான ரோப் வசதியும் உள்ளது . மிக உயரத்தில் மலை முகடுகளின் நடுவே பனி மூட்டம் நகர்ந்து செல்வது காண்பதற்கு மிக அருமையாக இருந்தது.நாமும் அவற்றுடன் பயணிப்பது போன்று இருந்தது.
அனைத்துமே காசு அதிகமாக பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன . காசு உள்ளவர்கள் செயற்கையாக உள்ள விஷயங்களை பார்க்கலாம்.
இயற்கையாக உள்ள அணை மிக அழகாக உள்ளது. நாங்கள் செல்லும்போது நல்ல மழை பெய்தது. மழையோடு சேர்ந்து நாங்களும் இயற்கையை ரசித்தோம். போட்டிங் செல்வதற்கு ஆன்லைன் வழியாக டிக்கெட் பெற்றால் மட்டுமே செல்ல இயலும்.
வைய்த்ரீயில் இருந்து பாணாஸுரா சாகர் அணை செல்லும் வழியில் டீ ம்யூஸியம் உள்ளது.நாங்கள் வரும்போது பார்த்து கொள்ளலாம் என எண்ணினோம்.ஆனால் இருட்டு ஆகி விட்டதால் வேறு வழியில் வந்துவிட்டோம்.எனவே பார்க்க இயலாமல் போய் விட்டது.அவசியம் பாருங்கள்.
காசு ஓரளவு உள்ளவர்கள் இயற்கையாக உள்ள இடங்களைப் பார்க்கலாம். இயற்கையாக உள்ள இடங்களையே பார்த்துவிட்டு நாங்கள் மீண்டும் அங்கிருந்து கல்பெட்டா நோக்கி சென்றோம்.
கல்பெட்டா வெஸ்டர்ன் காட்ஸ் என்கிற அறையில் தங்கினோம்.இரவு உணவை கல்பேட்டா நகரத்தில் உள்ள அப்பாஸ் உடுப்பி என்கிற உணவகத்தில் சாப்பிட்டோம்.
வயநாடு கல்பேட்டா வெஸ்டர்ன் காட்ஸ் அறையில் மூட்டைப்பூச்சி எங்களை இரவு முழுவதும் நன்றாக கடித்து விட்டது. அங்கே ரூமில் இருந்த துணிகளும் சரியாக இல்லை. அழுக்குப் படிந்ததாக இருந்தது.
மிகவும் சிரமத்திற்கு இடையே இரவு முழுவதும் தங்கிவிட்டு காலையில் நாங்கள் கிளம்பி இரவு உணவு சாப்பிட்ட இடத்திலேயே அப்பாஸ் உடுப்பி என்கிற ஓட்டலில் உணவு அருந்தினோம்.
கல்பேட்டாவில் இருந்து காரப்புழா அணை செல்லும் வழியில் உடுப்பி என்கிற ஒரு உணவகமும் அங்கே இருக்கின்றது. காரப்புழா அணைக்கு அடுத்ததாக நாங்கள் சென்றோம்.
கல்பேட்டாவில் இருந்து காரப்புழா அணை சுமார் 45 நிமிட பயணத்துக்கு பின்பு வருகின்றது. வெறும் அணைக்கட்டு மட்டுமே உள்ளது.
மற்றவை எல்லாம் பணம் வசூல் செய்யும் விளையாட்டுக்களாக மட்டுமே உள்ளது.காரப்புழா அணை என்பது பானாசுர சாகர் அணை பார்த்த பிறகு மிகவும் சிறியது. பார்க்க வேண்டிய அவசியமில்லை.
பயண அனுபவத்தின் மூலமாக நாங்கள் கூறிக்கொள்கிறோம். அங்கே ஒன்றும் பிரமாதமாக இல்லை. டேம் மட்டும் தான் நாம் பார்க்கமுடியும்.
காரப்புழா அணையில் மீதி அனைத்துமே காசு வாங்கும் இடங்கள் தான். அதாவது வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் பல்வேறு விளையாட்டுகள் அங்கே இடம் பெற்றிருக்கின்றன.
காரப்புழா அணையில் இருந்து காடு, மேடு மலைகளின் வழியாக எடக்கல் குகைகள் நோக்கி பயணித்தோம்.மிக அதிகமான காடுகளின் வழியாகவும், உயரமான மலைகளின் வழியாகவும் பயணித்தோம்.
வழிநெடுகலும் சாலைகள் சுமாராகத்தான் இருந்தது.கூகிள் மேப் காட்டிய வாழியாதன் சென்றோம்.ஆனாலும் ஒரு இடத்தில் தவறான பாதையை காண்பிக்க நாங்களும் செல்ல, உயரமான இடத்தில் சென்று மாட்டிக்கொண்டோம்.அதற்கு மேல் செல்ல வழி இல்லை. டெட் எண்டில் சென்று மாட்டிக்கொண்டு, வாகனத்தை இறக்க முடியாமல் மீண்டும் சிரமப்பட்டு இறக்கி, ஒரு வழியாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு கீழே இறங்கினோம்.பிறகு அங்கிருந்த தெரிந்தவர்களிடம் கேட்டு,கேட்டு இடக்கால் குகையை அடைந்தோம்.
இடக்கால் குகை செல்லும் வழியில் சேமக்காவ் குகை என்று வருகிறது.அதன் அருகிலும் சென்று பார்த்தோம்.அந்த இடம் செல்லும் வழியில் கிராமங்களின் நடுவே வருகிறது.
இடக்கால் குகை செல்லும் முன்பாகவே பார்க்கிங் கட்டணம் வசூலித்து விடுகிறார்கள்.50 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.பார்க்கிங் நிறுத்தம் எண் தனியாக கொடுத்து விடுகின்றனர்.அந்த இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்தி விட வேண்டும்.
சுமார் ஒரு கிலோமீட்டர் மலை செங்குத்தாக ஏறி, பின்பு 350 படிக்கட்டுகள் உள்ள இடத்தை ஏறி குகைகளை காணலாம் என கூறினார்கள்.ஆனால் எங்களால் அரை கிலோமீட்டர் மட்டுமே எற முடிந்தது.
இடக்கால் குகையில் சில அடிகள் செங்காதாக எறியதற்கே எங்களுக்கு கை ,கால்,உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பித்துவிட்டது.அதனால் சிறிது நேரத்தில் இறங்கி விட்டோம். எங்களால் சிறிது தூரத்திற்கு மேல் ஏற முடியாததால் மீண்டும் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
அங்கிருந்து சில கிலோமீட்டர்கள் பயணம் செய்து வைத்திரீ ஹனி ம்யூஸியம் வந்து அடைந்தோம். சென்று பார்த்தோம். அங்கு சலீம் அவர்கள் எங்களுக்கு நல்ல முறையில் பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்.
தேனீக்களில் பலவகை இருப்பதாக சலீம் கூறினார்கள். இந்த தேனி மியூஸியத்தில் பார்க்கிங் ப்ரீ. ஆனால் உள்ளே செல்வதற்கு டிக்கெட் வசூல் செய்கிறார்கள். சலீம் எங்களிடம் கூறும் பொழுது, தேனை பிராசசிங் செய்யும் பொழுது அது பல ஆண்டுகளுக்கு கெடாமல் நன்றாக இருப்பதாக கூறினார். எவ்வாறு பிராசஸிங் செய்வது என்பதையும் மிகத் தெளிவாக எங்களிடம் விளக்கினார்.
ராணித் தேனீ பற்றி பல்வேறு விதமான தகவல்களை எங்களுக்கு எடுத்து வைத்தார். ராணித் தேனீயால் என்னென்ன நன்மைகள் என்பவற்றையும் எங்களுக்கு கூறினார். ராணித்தேனீ ஏன் அவ்வாறு செயல்படுகிறது என்பதையும் விளக்கினார். தேனீக்களை எவ்வாறு நாம் எடுக்கலாம் என்கிற தகவலை மிக விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் ஒன்பது வகையான தேண்களையும், ஒன்பது வகையான இடங்களிலிருந்து தயாரிக்கக்கூடிய தகவலை எங்களுக்கு காண்பித்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ருசியுடன் இருந்தன.
தேனீக்களால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் அதிகமாக விளக்கினார். அங்கேயே தேனும் விற்கின்றது. அதனையும் வாங்கிக்கொள்ளலாம். இன்னும் பல்வேறு வகையான பொருட்களும் இருக்கின்றது.
வயநாட்டில் பல இடங்களில் அனைத்துமே வருவர்களிடம் வசூல் செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாங்களும் அங்கே தேன் மற்றும் பல்வேறு பொருள்களை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
அங்கிருந்து சலீம் அவர்களது ஆலோசனையின் படி அருகே இருந்த ஆரிய பவன் ஹோட்டல் சென்றோம். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டோம் .அங்கே குழாய் புட்டு, கடலைக்கறி ஆகியவை இருந்தன. சாப்பாடு மிக அருமையாக இருந்தது. ஏராளமானோர் அங்கு சாப்பிட்டு சென்றார்கள். பெண்கள்தான் அந்த கடை முழுவதையும் வழி நடத்திச் செல்கின்றனர். மிக அழகாக, இயல்பாக, அருமையாக, சுவையாக அனைத்து உணவுகளையும் தயாரித்து வழங்குகின்றனர்.
அங்கிருந்து நாங்கள் அடுத்ததாக என் நூறு ஆதிவாசிகள் வில்லேஜ் இருக்கக்கூடிய இடத்திற்கு சென்றோம். ஒரு ஆளுக்கு 80 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு அந்த இடத்திற்கு நம்மை ஜீப்பில் அழைத்துச் செல்கின்றனர்.
ஆதிவாசிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஆனால் அரசே அந்த இடத்திற்கு வீடுகளை வடிவமைத்து வைத்துள்ளார்கள்.அவற்றை ஜீப்பில் சென்று சும்மா பார்த்து விட்டு வரலாம்.அவ்வளவே.அதற்கு அரசு நிர்ணயித்து உள்ள தொகை 50 ரூபாய் மட்டுமே.ஆனால் அவர்கள் நம்மிடம் வசூல் செய்வது 80 ரூபாய் ஆகும்.
அடுத்ததாக ஆரல் பார்க் எனும் கண்ணாடி பிரிட்ஜ் அமைந்து உள்ள இடத்திற்கு சென்றோம். பல்வேறு விதமான வசூல் வேட்டை நடக்கும் இடமாக இருக்கின்றது. உள்ளே நுழைவதற்கே 300 ரூபாய் வழங்க வேண்டும். எனவே நாங்கள் வெளியே இருந்து போட்டோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் செல்லும்போது நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது.மழையில் நாம் கண்ணாடி பிரிட்ஜில் ஏறி நிற்க இயலாது.எனவே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோம்.
அங்கிருந்து நாங்கள் கிளம்பி சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லக்கடி வியூ பாய்ண்டுக்கு சென்றோம்.லக்கடி வியூ பாயிண்ட் மிக அருமையாக இருந்தது.
அங்கிருந்து நாம் பார்க்கும்போது பல இடங்கள் மிக அருமையாக இருக்கின்றது. காண கண் கொள்ளாத காட்சியாக இருக்கின்றது.குரங்குகள் அதிகமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டிய இடமாக உள்ளது.
வயநாட்டில் இயற்கையாக பார்க்கக்கூடிய பல இடங்கள் இருப்பதாக தெரிவித்தார்கள்.அதில் முக்கியமானது கந்தபுரா நீர் வீழ்ச்சி. ஆனால் நாங்கள் செல்லும் பொழுது கந்தப்பா அருவி மூடி விட்டதாக சிலர் கூறினார்கள். சிலர் அந்த அருவி திறந்து இருக்கின்றது என்று கூறினார்கள்.
சந்தேகமான சூழ்நிலையால் நாங்கள் அந்த அருவிக்கு செல்ல வில்லை. மீன்முட்டி அருவி மிக முக்கியமானது.ஆனால் பானாசுர சாகர் அணைக்கு பக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் அந்த அணையும் வயநாடு நிலச்சரிவு பின்பு மூடப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தார்கள். எனவே நாங்கள் அங்கேயும் செல்லவில்லை.
வாயநாடு அருகில் உள்ள முத்தங்கா வைல்டு லைப் எனும்இடம் நாங்கள் செல்லும்பொழுது மூடப்பட்டதாக இணையத்தில் தகவல் வந்தது. இணையத்தின் மூலமாக டிக்கெட் எடுத்துக்கொண்டு நாம் அந்த விலங்குகள் இருக்கும் இடத்தைச் சென்று பார்வையிட்டு வரலாம். அது இயற்கையிலேயே நல்ல ஒரு அருமையான சுற்றுலா பகுதி ஆகும் .
சூச்சி பாரா அருவி இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் அதுவும் நிலச்சரிவு பின்பு காணாமல் போய் விட்டதாக தெரிவித்தார்கள்.அதனால் அங்கேயும் செல்ல வில்லை.
வயநாட்டில் கருவ டீப் என்ற இடம் இருப்பதாக தெரிவித்தார்கள். கறுவா டீபில் விலங்குகள் இருப்பதாகவும் தெரிவித்தார்கள் நாங்கள் அந்த இடத்திற்கும் செல்லவில்லை. அதுவும் தற்போது மூடப்பட்டு விட்டதாக தகவல் தெரிவித்தார்கள்.
எனவே இயற்கையாக உள்ள பல இடங்களை பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. தற்போது செயற்கையாக உள்ள இடங்களை மட்டுமே அதிகமாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
வயநாடு லக்கடி வியூவ் பாயிண்டில் இருந்து 10 ஹார்பின் தாண்டியவுடன் துஷரகிரி என்கிற இடத்தில் அருவி இருப்பதாக அறிந்தோம். பல கிலோமீட்டர்கள் தாண்டி மலை உச்சியில் உள்ள அருவிக்கு சென்றோம்.
துஷாரகிரி அருவியில் ஒரு நபருக்கு டிக்கெட் 40 ரூபாய். அதன் உள்ளே சென்று நன்றாக குளித்துவிட்டு பல போட்டோக்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.நீண்ட தூரம் நடந்து சென்றால் அருவி வருகிறது.மிக அருமையான இடம் .
துஷாரகிரி அருவி குளிப்பதற்கு நல்ல இடம்.பெரிய அருவி.குளித்து மகிழலாம்.ஆனால் இந்த அருவிக்கு செல்லும்போது அதிகமான செங்குத்து வளைவுகள் வருகிறது.மிக உயரமான மலை பகுதியில் ஏற வேண்டி உள்ளது.எனவே நல்ல பழக்கமான, மலை ஏற தெரிந்த டிரைவருடன் சென்றால் மட்டுமே பாதுகாப்பாக சென்று வர இயலும்.மலை அருவியில் இருந்து இறங்கிய உடன் அடிவாரம் வந்து விடுகிறது.
அடிவாரம் பகுதியில் இருந்து நாங்கள் மன்னார்காடு நோக்கி பயணம் செய்தோம்.
பயணம் தொடரும்.
லெட்சுமணன்
காரைக்குடி
வீடியோ :
https://www.youtube.com/watch?v=_oLQY1VOMEA
https://www.youtube.com/watch?v=mDItxl8SEPg
https://www.youtube.com/watch?v=3jD-cYw5KaQ
No comments:
Post a Comment