பள்ளி குழந்தைகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் பல்கலைக்கழக பேராசிரியர்
சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி ஆசிரியராக உள்ள ஒரு பேராசிரியர் 10 வயதுக்குட்பட்ட 150 மாணவர்களுக்கு உடற்திறன்,மனத்திறன் பயிற்சி அளித்து வருகிறார்.பாராட்டுதலுக்குரிய பயிற்சி.வாழ்த்துக்கள்.
என் மகனும் அந்த பயிற்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சென்று வருகிறார்.நல்ல பயன் உள்ளது .மகிழ்ச்சி அடைகின்றேன்.
இருப்பினும் அந்த பேராசிரியருடைய ஒருசில நடவடிக்கைகளால் பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.எனக்கு அது மனவருத்தத்தை அளிக்கிறது.
எனது மகன் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 15 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை.அதனால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.முதல் நாள் உடல்நிலை சரியில்லாத அன்றே முறைப்படி நானே நேரில் சென்று ,உடல்நிலை சரியில்லை ,சரி ஆன உடன் அழைத்து வருகின்றேன் என்று சொல்லி அனுமதியுடன் விடுமுறை எடுத்துள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று காலையும் முதல் ஆளாக 5.45மணிக்கு காலை சென்று அனுமதி பெற்று பயிற்சி நடைபெறும் இடத்துக்கு அழைத்து சென்றேன்.
உடல் நலம் தேறி 15 நாட்களுக்கு பிறகு பயிற்சிக்கு சென்ற எனது குழந்தையை எந்த கேள்வியும் கேட்காமல்,ஒரு ஸ்கிப்பிங் கயிறை கையில் கொடுத்து தனி ஒருவனாக சுமார் 45 நிமிடங்கள் சுழற்றிக்கொண்டு நில் என்று சொல்லி விட்டு மற்ற மாணவர்களை அழைத்துக்கொண்டு பேராசிரியர் சென்று விட்டார்.இதே நேரத்தில் மற்ற 150 குழந்தைகளையும் தனியாக வைத்து முறைப்படி பயிற்சி கொடுத்துக்கொண்டு இருந்தார்.
என் மகன் மிகுந்த மன வருத்தத்துடன்,முக வாட்டத்துடன் ஸ்கிப்பிங் கயிறை சுழற்றி கொண்டு தனி ஒருவனாக மிகப்பெரிய திடலில் நின்று கொண்டு இருந்தான்.நேரம் ஆக ,ஆக அழத்தொடங்கிவிட்டான்.இதை பார்த்துக்கொண்டு இருந்த தந்தையாகிய எனக்கு எனது குழந்தை இவ்வளவு வேதனை அடைகிறதே என்று சொல்ல முடியாத வேதனைக்கு உள்ளான்.
45 நிமிடங்கள் கழித்து நான் பொறுமையை இழந்து ,அந்த பேராசிரியரிடம் சென்று ' ஏன் ,சார் எனது மகன் என்ன தவறு செய்தான்? ஏன் அவனுக்கு தனிமை தண்டனை கொடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு , சார் அவன் 15 நாட்கள் வரவில்லை.அவனது லெவல் குறைந்து விட்டது.இனி வரும் காலங்களில் உடல்நிலை சரியில்லை என்று பயிற்சிக்கு வரவில்லை என்றால் ,நீங்கள் இங்கு அவனை அழைத்து வராதீர்கள்.15 நாள் வரததால்தான் நான் அவனை தனிமையில் நிறுத்தினேன்.என்று பதில் சொன்னார்.அவர் சொல்வதுபோல் உடல்நலம் சரியில்லாததால் நான் அவனை அழைத்து செல்லவில்லை.மீண்டும் பயிற்சி கொடுத்து கொண்டு வருவது சிரமம் தான்.அதனை நானும் ஆசிரியர் என்ற முறையில் ஏற்று கொள்கிறேன்.ஏற்கனவே உடல்நலம் சரியில்லாததால் ,மனவருத்தத்தில் உள்ள மாணவரை மேலும் மனதளவில் காயப்படுத்தும் வகையில் அமைந்த பேராசிரியரின் செயல் வேதனைக்குரியது.என் மகனின் வேதனையை என்னால் தாங்க இயலவில்லை.எனது மகனுக்கும் அந்த வேதனையை தாங்கும் அளவுக்கு பக்குவமும் இல்லை.
150 சக மாணவர்கள் ஒன்றாக பயிற்சி செய்யும்போது , என் மகன் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது எனக்கு சொல்ல முடியாத மனவேதனையை ஏற்படுத்தியது.
இதனை மறுபடியும் பேராசியரிடம் சென்று கேட்டதற்கு, உங்கள் பள்ளி மாணவர்களின் மீது காட்டும் அக்கறையை உங்கள் மகன் மீது காட்டுங்கள் என்று சொன்னார்.மேலும் இனிமேல் உங்கள் மகனுக்கு நான் சொல்லி கொடுக்க முடியாது என்றும் சொன்னார்.இந்த திடலை விட்டு வெளியே போய் விடுங்கள் என்று சொன்னார்.
15 நாள் பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக +2 மாணவரையோ ,கல்லூரி மாணவரையோ வெளியே நிறுத்தி தனிமைப்படுத்தி பழைய பாடங்களை படித்து விட்டு வந்தால்தான் பள்ளிக்கு வரலாம் என்று சொல்வது நடைமுறை சாத்தியமா? அந்த மாணவரின் உடல் நலம்,மன நலம் பாதிக்கப்படாதா? இந்த பேராசிரியர் அவர்கள்,குழந்தை உளவியல் படித்துஇருந்தால் என் மகனை 45 நிமிடங்கள் தனிமைப்படுத்தி,எனது மகனின் மனதை காயப்படுத்தி இருக்கமாட்டார்.
இதற்காகத்தான் பள்ளி கல்வியில் குழந்தை உளவியல் கல்வி பாடத்திட்டமாக உள்ளது.இந்த பாடத்திட்டம் பல்கலைக்கழக பேராசியாராகிய அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.இதனை அந்த பேராசிரியருக்கு சுட்டி காட்டியபோது,இந்த திடலுக்குள் நீங்கள் நிற்க கூடாது.நாளை முதல் உள்ளே வராதீர்கள்.உங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அந்த பேராசிரியர் அவர்கள் பயிற்சி அளிக்கும் திடலுக்குள் ஒரு குழந்தையை வரக்கூடாது,அனுமதிக்கமாட்டேன் என்று சொல்வதற்கு அவருக்கு உரிமையில்லை.
என் குழந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை.இந்த அவமானம் எனது குழந்தைக்கு புரிந்ததோ,இல்லையோ என்று எனக்கு தெரியாது.இந்த நிகழ்வை நிகழ்வை எண்ணி மனம் குலுங்கி நானும்,எனது மனைவியும் அழுதுகொண்டுள்ளோம் .
No comments:
Post a Comment